jkr

கம்ப்யூட்டர் தியேட்டர் "விண் ஆம்ப்"

Posted: 27 Mar 2010 02:57 AM PDT

வீட்டினுள் தியேட்டரையும், ஆடியோ அரங்கையும் கொண்டு வந்ததில் வீடியோ பிளேயருக்கு அடுத்தபடியாகக் கம்ப்யூட்டரைச் சொல்ல வேண்டும். இதற்கு அதிகம் பயன்படும் சாப்ட்வேர் தொகுப்பு விண் ஆம்ப் ஆகும். விண்டோஸ் இயக்கத் தொகுப்புடன் மீடியா பிளேயர் என்ற ஆடியோ, வீடியோ தொகுப்பு கிடைத்தாலும், பெரும்பாலானவர்கள் இன்றும் விண் ஆம்ப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தொகுப்பு கட்டணம் கட்டியும் பெறலாம் என்றாலும், இலவசமாக டவுண்லோட் செய்யக் கூடிய தொகுப்பிலேயே பல வசதிகள் இருப்பது இதற்குக் காரணமாகும்.

விண் ஆம்ப் புரோகிராமை மீடியா பிளேயர் என வகைப்படுத்துகிறோம். இங்கு மீடியா என்பது ஆடியோ மற்றும் வீடியோவினைக் குறிக்கிறது. இது இலவசமாகக் கிடைக்கும் புரோகிராம் என்பது இதன் சிறப்பு. இதனை www.winamp.com என்ற இணைய தளத்திலிருந்து இலவசமாக இறக்கிக் கொள்ளலாம். மேலும் சில தளங்களும் இந்த புரோகிராமை இறக்கிக் கொள்ள உதவுகின்றன. எடுத்துக்காட்டாக www.download.com என்ற தளத்தைக் கூறலாம். இந்த தளம் சென்று Get Basic என்ற இடத்தில் கிளிக் செய்து பின் எந்த அளவில் வேண்டும் என்பதில் Full என்பதைத் தேர்ந்தெடுத்தால் முழு புரோகிராமும் உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்துவிடும். இதனை பாதுகாப்பான ஒரு டைரக்டரியில் பதிந்து வைத்துக் கொள்ளலாம்.


அங்கிருந்தவாறே இதற்கான செட் அப் பைலை இயக்கினால் விண் ஆம்ப் புரோகிராம் பதியப்படும். இன்ஸ்டால் செய்திடும்போதே எந்த வகை ஐகான் இருக்க வேண்டும், எந்த வகை பார்மட் பைல்களை இது இயக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கொடுத்து இன்ஸ்டால் செய்திடலாம். உங்கள் இன்டர்நெட் கனெக்ஷன் எப்படிப்பட்டது என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தர வேண்டும். பின்னர் விண் ஆம்ப் புரோகிராமின் தோற்றத்தை முடிவு செய்திடும் "ஸ்கின்' என்பதையும் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். இன்ஸ்டால் செய்துவிட்டால் புரோகிராம் இயங்குவதற்கு ரெடியாகிவிடும்.

உங்கள் டெஸ்க் டாப்பில் விண் ஆம்ப் ஷார்ட் கட் ஐகான் ஒன்று உருவாக்கப்பட்டு பதியப்பட்டிருக்கும். இதனைக் கிளிக் செய்தால் விண் ஆம்ப் இயங்கத் தயாராயிருக்கும். முதன் முதலில் விண் ஆம்ப் தயாராகும் போது யூசர் இன்பர்மேஷன் விண்டோவினைக் காணலாம். இதில் Do not ask me again until next install என்ற இடத்திலும் Later என்பதிலும் கிளிக் செய்திடவும். இப்போது Media to Library என்பதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் பாடல்கள் மற்றும் வீடியோ பைல்கள் உள்ள இடங்களைச் சுட்டிக் காட்டலாம். இதன் மூலம் இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மீடியா பைல்கள் அனைத்தையும் கொண்ட லைப்ரேரி ஒன்றை உருவாக்க இடம் அளிக்கிறோம். இது வேண்டாம் என்றால் Do not show me this again என்பதில் கிளிக் செய்து வெளியேறலாம். விண் ஆம்ப் புரோகிராமில் Playlist Editor, Media Library and Video என்ற பகுதிகளும் உள்ளன. இவற்றைத் தேவைப்படும்போது இயக்கி விரித்துப் பார்க்கலாம்.


விண் ஆம்ப் பல வகையான பார்மட்களில் உள்ள மீடியா பைல்களை இயக்கும் திறன் கொண்டதாக உள்ளது. எடுத்துக் காட்டாக ஆடியோ என எடுத்துக் கொண்டால் .wav .mp3 போன்ற பல வகை பைல்களை இயக்கும் திறன் கொண்டது. ஒரு பாடல் பைலை பாட வைக்க வேண்டும் என்றால் அதற்குப் பல வழிகள் உள்ளன. கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ்களைத் தேர்ந்தெடுத்து போல்டர்களில் உள்ள பாடல் பைலைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது அந்த பைலின் மீது இரு முறை கிளிக் செய்தால் பாடல் வடிவத்தினை ஏற்கனவே இன்ஸ்டால் செய்திடும்போது அமைத்து விட்டதால் உடனே விண் ஆம்ப் திறக்கப்பட்டு பாடல் இயக்கப்படும்.

இன்னொரு வழியும் உண்டு. பிளே லிஸ்ட் எடிட்டர் என்பதில் கிளிக் செய்து ஒரு பட்டியலைத் தயார் செய்திட வேண்டும். இதில் கிளிக் செய்தால் புதிய லிஸ்ட்டுக்கான பெயர் கேட்கப்படும். இதில் யாருக்காக அல்லது எந்த வகை பாடல்கள் என எந்த பெயரை வேண்டு மென்றாலும் வைத்துக் கொள்ளலாம். இந்த லிஸ்ட்டின் பெயரில் கிளிக் செய்து அதன் பின் பாடல்கள் உள்ள டைரக்டரியிலிருந்து இதில் நீங்கள் விரும்பும் பாடல்களைக் கொண்டு வந்து அவை பாடப்பட வேண்டிய வரிசைப்படி அடுக்கலாம். அதன் பின் எப்போது வேண்டுமானாலும் இந்த பிளே லிஸ்ட்டை திறந்து பாடல்களைக் கேட்கலாம். இந்த லிஸ்ட் பிடிக்கவில்லை என்றால் பாடல் பைல்கள் உள்ள டைரக்டரியைத் திறந்து எந்த எந்த பாடல்கள் இசைக்கப்பட வேண்டுமோ அவற்றை கண்ட்ரோல் அழுத்தி முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். செலக்ட் ஆன பின்னர் அதன் மீது ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் Add to play List என்று கிடைக்கும். இதனைத் தேர்ந் தெடுத்தால் அவை பிளே லிஸ்ட்டில் சேர்க்கப்படும் ; அல்லது இசைக்கப்படும்.


விண் ஆம்ப் .MPEG மற்றும் .AVI போன்ற வீடியோ பைல்களையும் இயக்கும். வீடியோ பைல்களையும் மேலே ஆடியோ பைல்களை இயக்க குறிப்பிட்ட வழிகளிலேயே இயக்கலாம். அல்லது பைலின் பெயர் மீது ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Play in Winamp என்பதில் கிளிக் செய்தால் பைல் விண் ஆம்ப் புரோகிராமில் இயங்கி ஆடல் பாடலைக் காட்டும்.

திறக்கப்படும் வீடியோ விண்டோவில் ரைட் கிளிக் செய்தால் விண்டோவின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை அதன் மூலைகளில் கர்சரை வைத்து இழுத்து அமைப்பதன் மூலம் அமைக்கலாம். பிளே லிஸ்ட்டில் என்ன என்ன பாடல்களைத் தொகுத்து வைத்திருக்றீர்கள என அச்சிட்டு பார்க்க விரும்புகிறீர்களா? இதில் தெரியும் Misc என்ற பட்டனை அழுத்தவும். இதில் Generate HTML playlist என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இப்போது வெப் பிரவுசர் ஒன்றின் விண்டோ திறக்கப்பட்டு அதில் பிளே லிஸ்ட்டில் உள்ள பாடல் மற்றும் ஆடல் பைல்கள் காட்டப்படும். பின் வழக்கம்போல் File மெனுவினைத் திறந்து அதில் Print என்பதைத் தேர்ந்தெடுத்து பிரிண்ட் செய்திடலாம். விண் ஆம்ப் புரோகிராமை நீங்கள் மூடிப் பின் திறக்கும்போது இறுதியாக எந்த பிளே லிஸ்ட்டை இயக்கிக் கொண்டிருந்தீர்களோ அந்த பிளே லிஸ்ட் திறந்தபடி விண் ஆம்ப் திறக்கப்படும்.


விண் ஆம்ப் புரோகிராம் முதலில் நல்சாப்ட் (Nullsoft) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதன் பின் அதனை ஏ.ஓ.எல்.நிறுவனம் வாங்கி யது. தற்போது மீண்டும் அது நல்சாப்ட் நிறுவனத்தால் எடுத்துக் கொள்ளப் பட்டு அதன் வசமே இருக்கிறது. விண் ஆம்ப் புரோகிராம் 1997ல் ஜஸ்டின் பிராங்கெல் என்பவரால் ஷேர்வேர் புரோகிராமாக வெளியிடப் பட்டது. அதன்பின் இதில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு மேம்படுத்தப் பட்டன. தற்போது ஸ்ட்ரீமிங் வீடியோ இயக்கும் வகையில் உயர்ந்துள்ளது. நல்சாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மாதந்தோறும் 6.5 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வகையில் உலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் மீடியா பிளேயர்களில் மூன்றாவது இடத்தை விண் ஆம்ப் பெற்றுள்ளது.


சிறப்பு அம்சங்கள்


* மிகச் சிறிய அளவிலான பைலாக இதனை எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். Lite 1.2 MB, Full 5 MB மற்றும் Bundle 12 MB என மூன்று அளவுகளில் இது முதலில் தரப்பட்டது. இப்போது Full– 9.08 MB, Free+ Bonus MP3 12.2.MB என்ற அளவில் இலவசமாகக் கிடைக்கிறது. கட்டணம் செலுத்தி சில கூடுதல் வசதிகள் உள்ள புரோகிராமினையும் பெறலாம்.


* விண் ஆம்ப் புரோகிராமிற்காகத் தரப்படும் ஸ்கின்கள் அனைவரும் பேசப்படும் வகையில் மற்றவற்றிலிருந்து வேறுபடும்.

* ஆடியோவில் பல வகைப் பார்மட்டுகளைக் கையாள்கிறது. MP3, WMA, M4A/AAC, OGG, FLAC MIDI, MOD, MPEG1 என்ற பார்மட்டுகளைக் கையாள்வதுடன் இவற்றிடையே மாற்றிக் கொள்ளும் வசதியையும் அளிக்கிறது. வீடியோ பைல்களைப் பொறுத்த வரை AVI,ASF,MPEG,NSV ஆகிய பார்மட்டுகளைக் கையாள்கிறது. பலவகையான இன்டர்நெட் ரேடியோ ஸ்டேஷன்களைப் பெறலாம்.

* தற்போது விண் ஆம்ப் லேட்டஸ்ட் பதிப்பாகக் கிடைக்கிறது. இதனையும் இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். இதில் ஐபாட் சாதனத்துடன் டேட்டாவினை இணைக்கும் வழிகள் தரப்பட்டுள்ளன. புதிய ஐ –ட்யூன் லைப்ரேரியை இறக்கிப் பயன்படுத்தலாம். புதிய ஆன்லைன் சர்வீஸ் காலரி தரப்பட்டுள்ளது.


------------------- நன்றி -------------------

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வரவேற்கும் அபாயங்கள்

Posted: 28 Mar 2010 04:21 AM PDT

அபாயங்கள் நம்மை வரவேற்கின்றனவா? அல்லது நாம் அபாயங்களை வரவேற்கிறோமா! என்ற கேள்வி இந்த தலைப்பைப் படித்தவுடன் நம் மனதில் எழும். கம்ப்யூட்டர் பயன்பாட்டினைப் பொறுத்தவரை இரண்டும் தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நம் வாழ்வோடு இரண்டறக் கலந்த கம்ப்யூட்டர் தரும் அபாயங்கள் குறித்து, அறிந்து அதற்கான தற்காப்பு வழிகளை நாம் மேற்கொண்டிருந்தாலும், சில அபாயங்களை நாம் அறியாமலேயே நாம் வரவேற்று மாட்டிக் கொள்கிறோம். கிராமப் புறங்களில் வேலியில் போகும் ஓணான் என்று ஒரு பழமொழி தொடங்கும். அந்த வகையில் தான் நாம் நம்மை அறியாமலேயே கம்ப்யூட்டரில் பல அபாயங்களை வரவழைத்துக் கொள்கிறோம். அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

1. அடோப் பலவீனங்கள்: மைக்ரோசாப்ட் புரோகிராம்களுக்கு அடுத்தபடியாக, ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் அடோப் நிறுவன அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவது உறுதி. பிளாஷ் (Flash) அக்ரோபட் ரீடர் (Acrobat Reader) அல்லது ஷாக்வேவ் (Shock Wave) என ஏதாவது ஒன்றினை நாம் இன்ஸ்டால் செய்து வைத்திருக்கிறோம். கம்ப்யூட்டரைக் கெடுக்கும் மால்வேர் தொகுப்புகளால் இவை எளிதாகப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில் பழைய பதிப்புகளை நீங்கள் பயன்படுத்திவந்தால், அவற்றில் உள்ள பலவீனமான இடங்களைப் பயன்படுத்தி மால்வேர் புரோகிராம்கள் நுழைவது எளிது என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் அப்டேட் செய்யப்பட்ட பதிப்புகளில் தான் இந்த பலவீனமான இடங்கள் சரி செய்யப்பட்டு இருக்கும். பழைய பதிப்புகள் எனில் அவை மால்வேர் புரோகிராம்கள் எளிதாக நுழைய இடம் தருவதாக அமையும். இதில் இன்னொரு வகை பிரச்னை என்னவென்றால், இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், உங்கள் அடோப் பிளாஷ் பிளேயர் பழையதாக உள்ளது. அப்டேட் செய்திட இங்கே கிளிக் செய்திடுங்கள் என்று ஒரு செய்தி வரும். கிளிக் செய்தால், கம்ப்யூட்டர் முடங்கிப் போய்விடும். (என் சொந்த அனுபவம் இது). அல்லது பிரச்னை இருப்பதாகவும், அது குறித்த விளக்கத்தினையும், தீர்வையும் இந்த பைலில் பார்க்கலாம் என்று ஒரு பி.டி.எப். பைலுக்கான லிங்க் தரப்படும். கிளிக் செய்தால் அவ்வளவுதான். மீண்டும் ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்திடும் அளவிற்குக் கொண்டு செல்லும்.
இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம்? அடோப் தொகுப்புகள் மேம்படுத்தப்பட்டு கிடைப்பதாக இருந்தால், அடோப் நிறுவனத்தின் தளம் சென்று அந்த முயற்சியில் ஈடுபடுங்கள். வேறு தளங்கள் தரும், குறிப்பாக பாப் அப் விண்டோக்கள் தரும் லிங்க் மூலம் செல்ல வேண்டாம். அடோப் தளத்தைப் பார்த்து அவ்வப்போது அப்டேட் செய்திடுங்கள்.

2. பயர்பாக்ஸ் ஆட் ஆன்: பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஆட் ஆன் தொகுப்பு புரோகிராம்கள் அபாயத்திற்கான அழகான திறவுகோல்களாகும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் ஆக்டிவ் எக்ஸ் ப்ளக் இன் போல மோசமானது இல்லை என்றாலும், ஆபத்தை விளைவிப்பதில் இவையும் சளைத்தவை இல்லை. பல மால்வேர் புரோகிராம்கள், பயர்பாக்ஸ் பிரவுசரின் முதன்மை செயல்பாட்டில் சென்று வழி தேடாமல், ஆட் ஆன் தொகுப்புகளைத்தான் பார்த்து நுழைகின்றன.

பிளாஷ் பிளேயர், ஆன்லைன் மியூசிக் பிளேயர் என ஏதாவது ஒன்றுக்கான ஆட் ஆன் என்ற செய்தியுடன் இவை உங்களது கவனத்தை ஈர்க்கும். சரி எனக் கிளிக் செய்தால் மாட்டிக் கொள்வோம்.

இத்தகைய தாக்குதல்களிலிருந்து தப்புவது சிரமம் தான். ஏனென்றால் ஆயிரக்கணக்கான ஆட் ஆன் தொகுப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. இவை தரும் வசதிகளும் பிரமாதமாய் இருக்கின்றன. முதலில் பயன்படுத்துகையில் இவை எந்த தீங்கும் விளைவிக்காமல் தான் இருக்கின்றன. பின் இவற்றைக் கண்காணித்து மால்வேர் புரோகிராம்கள், இவற்றைப் பயன்படுத்தி நுழைகின்றன.
இவற்றிலிருந்து தப்பிக்க பயர்பாக்ஸ் பிரவுசரை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடாமல், ஏதேனும் பிளாஷ் டிரைவ் மூலம் போர்ட்டபிள் பிரவுசரைப் பயன்படுத்தலாம்.

3. மேக் சிஸ்டம்: பலர் இது போன்ற வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகள் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நுழையாது என்று எண்ணுகின்றனர். இது ஒரு காலத்தில் உண்மையாக இருந்தது. ஏனென்றால் இதனைப் பயன்படுத்துபவர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால், வைரஸ்களைப் பரப்புபவர்கள் மேக் பக்கம் கவனத்தைச் செலுத்தவில்லை. இப்போது நிலை மாறிவிட்டது. மேக் சிஸ்டம் வழியாகவும் மால்வேர்கள் பரவத் தொடங்கிவிட்டன. இந்த சிஸ்டத்திலும், பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்களை அவ்வப்போது அப்டேட் செய்திட்டால், மால்வேர்கள் நுழைவது தடுக்கப்படலாம்.

4. ஆப்பிள் சாதனங்கள்: விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் நாம் ஆப்பிள் நிறுவன சாதனங்களைப் (சாப்ட்வேர்கள்) பயன்படுத்தி வருகிறோம் என்பதை மறந்துவிடுகிறோம். இவற்றையும் மற்ற அப்ளிகேஷன்கள் போலவே நாம் கண்காணிக்க வேண்டும். பல கம்ப்யூட்டர்களில் குயிக் டைம் மற்றும் ஐ ட்யூன்ஸ் ஆகிய ஆப்பிள் நிறுவன சாப்ட்வேர்கள் இடம் பெறுகின்றன. இவற்றில் குயிக் டைம் சாப்ட்வேர் தொகுப்பைப் பயன்படுத்தி பல வைரஸ்கள் பரவியது நிரூபிக்கப்பட்டுள்ளது. 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் இது அதிகம் இருந்தது. இதனை உணர்ந்த ஆப்பிள் நிறுவனம் அவ்வப்போது இதற்கான தடுப்பு அப்டேட் பைல்களைத் தானாகவே அனுப்பி சரி செய்தது.எனவே அப்டேட் செய்வதுதான் இங்கும் பாதுகாப்பு வழியாகும்.

5. குழப்பும் யு.ஆர்.எல்.கள்: மிகப் பெரிய நீளமான இணைய தள முகவரிகளைச் சுருக்கி தரும் லிங்க்குகள் வழியாக மால்வேர்கள் நுழைவது தற்சமயம் அதிகரித்து வருகிறது. சுருக்கமாகத் தரப்பட்டுள்ள யு.ஆர்.எல். முகவரிகள், எதனைக் குறிக்கின்றன என்று அறியாமலேயே, நாம் அவற்றின் மீது கிளிக் செய்து மாட்டிக் கொள்கிறோம். இதிலிருந்து தப்பிக்க ஒரு தளம் உதவுகிறது. இதன் முகவரி http://longurl.org/ இந்த தளத்தில் நாம் எந்த ஒரு சுருக்கப்பட்ட இணைய முகவரியையும் தந்து, அது தீங்கு விளைவிக்கக் கூடியதா என அறிந்து கொள்ளலாம்.

6. டி.என்.எஸ். ஹைஜாக்: எண்களில் அமைந்துள்ள முகவரிகளை, நாம் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சொற்களில் அமைக்கும் பணியினை டி.என்.எஸ். சர்வர்கள் மேற்கொள்கின்றன. இந்த மாற்றத்தில் ஈடுபடுகையில் ஏதேனும் ஒரு மால்வேர் புரோகிராம், டி.என்.எஸ். சர்வர் தர இருப்பதனை ஹைஜாக் செய்து, தன்னுடைய மோசமான லிங்க்கைத் தரும் வேலை தற்போது நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து தப்ப நாம் எந்த முயற்சியும் எடுக்க முடியாது. டி.என்.எஸ். சர்வர்களை இயக்குபவர்கள் தான் மேற்கொள்ள வேண்டும்.

மேலே சொன்னவை நாம் பயன்படுத்தியே ஆக வேண்டிய கம்ப்யூட்டர் சாதனங்கள் தரும் தீய விளைவுகளாகும். இவற்றைப் பயன்படுத்தாமல் இருக்கவும் முடியாது. எனவே கூடுதல் கண்காணிப்பும், மேலே பரிந்துரைக்கும் வழிகளுமே பாதுகாக்கும் கவசங்களாக இருக்கும்.



------------------- நன்றி -------------------

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates