jkr

நியூசிலாந்தில் இந்திய டாக்சி டிரைவர் குத்திக் கொலை


நியூசிலாந்தில் இந்தியாவைச் சேர்ந்த டாக்சி டிரைவர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்தப் போவதாக நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ கூறியுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த ஹிரென் மோகின் (39), 6 ஆண்டுகளுக்கு முன் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தார். ஆக்லாந்து பகுதியில் மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

டாக்சி டிரைவராக வேலை செய்துவந்த இவர், மவுன்ட் ஈடன் பகுதியில் நேற்று காலை குத்திக் கொலை செய்யப்பட்டார். கட்டணம் தொடர்பாக பயணியுடன் ஏற்பட்ட தகராறில் அவர் கொல்லப்பட்டதாகப் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கழுத்து மற்றும் உடலின் பல பகுதிகளில் கத்தியால் குத்திய மர்ம நபர், ஹிரெனின் காரை அருகில் உள்ள மரத்தில் மோதவிட்டு விபத்து போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தார்.

பொலிசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியைத் தேடி வருகின்றனர். இதற்கிடையே இச்சம்பவத்துக்கு நியூசிலாந்தின் டாக்சி உரிமையாளர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டாக்சி டிரைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், டாக்சிகளில் பாதுகாப்பு கெமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இப்பிரச்சினை குறித்து பிரதமர் ஜான் கீ கூறுகையில்,

"கடந்த 14 மாதங்களில் டாக்சி டிரைவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் 2 முறை நடந்துவிட்டன. அரசு இதை கண்டுகொள்ளாமல் இருந்துவிடாது. டாக்சிகளுக்கான கட்டாய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு நிச்சயம் பரிசீலிக்கும்' எனக் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் நியூசிலாந்திலும் இச்சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "நியூசிலாந்தில் இந்திய டாக்சி டிரைவர் குத்திக் கொலை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates