jkr

நியூசிலாந்தில் இந்திய டாக்சி டிரைவர் குத்திக் கொலை


நியூசிலாந்தில் இந்தியாவைச் சேர்ந்த டாக்சி டிரைவர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்தப் போவதாக நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ கூறியுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த ஹிரென் மோகின் (39), 6 ஆண்டுகளுக்கு முன் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தார். ஆக்லாந்து பகுதியில் மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

டாக்சி டிரைவராக வேலை செய்துவந்த இவர், மவுன்ட் ஈடன் பகுதியில் நேற்று காலை குத்திக் கொலை செய்யப்பட்டார். கட்டணம் தொடர்பாக பயணியுடன் ஏற்பட்ட தகராறில் அவர் கொல்லப்பட்டதாகப் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கழுத்து மற்றும் உடலின் பல பகுதிகளில் கத்தியால் குத்திய மர்ம நபர், ஹிரெனின் காரை அருகில் உள்ள மரத்தில் மோதவிட்டு விபத்து போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தார்.

பொலிசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியைத் தேடி வருகின்றனர். இதற்கிடையே இச்சம்பவத்துக்கு நியூசிலாந்தின் டாக்சி உரிமையாளர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டாக்சி டிரைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், டாக்சிகளில் பாதுகாப்பு கெமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இப்பிரச்சினை குறித்து பிரதமர் ஜான் கீ கூறுகையில்,

"கடந்த 14 மாதங்களில் டாக்சி டிரைவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் 2 முறை நடந்துவிட்டன. அரசு இதை கண்டுகொள்ளாமல் இருந்துவிடாது. டாக்சிகளுக்கான கட்டாய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு நிச்சயம் பரிசீலிக்கும்' எனக் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் நியூசிலாந்திலும் இச்சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தேர்தல் வெற்றியை அடுத்து இராணுவத்தில் பாரிய மாற்றங்கள் பிரிகேடியர் ஒருவர் பொலிஸ் காவலில் ; மேலும் பலர் கைதாகலாம்


செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை அடுத்து பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

இட மாற்றத்திற்குள்ளான இராணுவ அதிகாரிகளில் பலர் யுத்தத்தில் வெற்றி கண்ட இராணுவத் தளபதியும் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமானவர்களாவர் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் விபரம் வருமாறு, தமக்கு விசுவாசமான பல சிரேஷ்ட அதிகாரிகள் சேவையிலிருந்து விலக்கப்பட அல்லது இடை நிறுத்தி வைக்கப்பட இருக்கிறார்கள் என்று தாம் கேள்விப்படுவதாக ஜெனரல் பொன்சேகா தெரிவித்திருந்த வேளையில் இந்த திடீர் இட மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அம்பாறை இராணுவ பயிற்சிப் பாடசாலையின் கமாண்டர் பிரிகேடியர் துமிந்த கெபெற்றிவலான வெள்ளிக்கிழமை புலன் விசாரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஜெனரல் பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவி வகித்த போது பிரிகேடியர் கெபெற்றிவலான இராணுவ உதவியாளராக சேவையாற்றி வந்தார். மேலும் இளைப்பாறிய 20 அதிகாரிகளும், சிப்பாய்களும் ஏற்கனவே பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இன்னும் பலர் கைது செய்யப்பட இருக்கிறார்கள்.

தற்போதைய மாற்றங்களில் மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க இலங்கை இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இவர் பாதுகாப்பு அமைச்சில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக பணியாற்றி வந்தார்.

ஏற்கனவே பாதுகாப்புப் படையினரின் பிரதானியாக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் அப்பதவியிலிருந்து விலக்கப்பட்டு கூட்டுத் திட்டங்களுக்கான பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ தொண்டர் படைப் பிரிவின் கமாண்டர் ஆக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் ஜம்மிக லியனகே பாதுகாப்புப் படையினரின் பிரதம அதிகாரியின் அலுவலகத்தில் பொது அதிகாரிகள் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை இராணுவ நிர்வாக உதவியாளராக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் அருணா ஜயதிலக தற்போது தொண்டர் படை கமாண்டர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய மாற்றங்களில் பிரிகேடியர் ஏ. ரி. டீ. சற் அபேசேகர நிர்வாக பிரிவுக்கான புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ தலைமையகக் காரியாலயத்தில் பொது பணிப்பாளர் நாயகமாக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் ஸ்ரீநாத் ராஜபக்ஷ பாதுகாப்பு படையினரின் பிரதம அதிகாரி அலுவலகத்தில் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாஸ்டர் ஜெனரல் ஓர்டினன்ஸாக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் அதுல ஜயவர்த்தன முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகள் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது முந்திய பதவிக்கு மேஜர் ஜெனரல் ஜகத் ரம்புக்போத நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இவர் கிழக்கு பிராந்திய பாதுகாப்பு படைகள் கமாண்டராக பணியாற்றி வந்தார். இந்தப் பதவிக்கு தற்போது பிரிகேடியர் சுசில் உடுமல்கல நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் எல். ஏ. டி. அமரதுங்க 59 ஆவது படைப் பிரிவின் கட்டளையிடும் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வகித்து வந்த காலாட்படை தளபதி பதவிக்கு இதுவரை யாழ்ப்பாணப் பாதுகாப்பு படைகள் கமாண்டராக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் எல். பி. ஆர். மார்க்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். காலாட் படை தளபதியாக தற்போது மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் ஹதுருசிங்க வகித்து வந்த கிளிநொச்சி பாதுகாப்பு படைகள் கமாண்டர் பதவிக்கு பிரிகேடியர் சந்தன ராஜகுரு நியமிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு பாதுகாப்பு படைகள் கமாண்டர் மேஜர் ஜெனரல் மனோ பெரேரா இராணுவத்தின் 11 ஆவது பிரிவு ஜெனரல் ஒபீஸ் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத்தின் 65 ஆவது படைப் பிரிவின் ஜெனரல் ஒபீஸ் கமாண்டர் மேஜர் ஜெனரல் ஜனக வல்கம பாதுகாப்பு அமைச்சில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வகித்து வந்த ஜெனரல் ஒபீஸ் கமாண்டர் பதவிக்கு பிரிகேடியர் குமார் ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

53 ஆவது படைப் பிரிவின் ஜெனரல் ஒபீஸ் கமாண்டர் மேஜர் சாகி கலகே இராணுவ தலைமைக் காரியாலயத்தில பயிற்சிப் பிரிவு பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் ராஜித சில்வா பாதுகாப்புப் படைகள் பிரதம அதிகாரி அலுவலகத்திலிருந்து விலக்கப்பட்டு 58 ஆவது படைப் பிரிவின் ஜெனரல் ஒபீஸ் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

செய்தியறிக்கை

செய்தியறிக்கை
ஐ.நா தலைமை செயலர் பான் கீ மூன்
ஐ.நா தலைமை செயலர் பான் கீ மூன்

போரில் பாலியல் பலாத்காரம் குறித்து ஐ.நா தலைமை செயலர் கவலை

போரில் பாலியல் பலாத்காரமும் ஒர் ஆயுதமாக பயன்படுத்துவதை கண்டு தான் கடும் கோபமுற்றுள்ளதாக ஐ.நா தலைமை செயலர் பான் கீ மூன் ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள் இடையே தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பியாவில் ஆப்ரிக்க ஒன்றிய கூட்டத்தில் உரையாற்றிய அவர், மோதல் இடம்பெறும் இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் பலாத்காரங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக விசேட தூதர் ஒருவரை தான் நியமிக்கவுள்ளதாகவும் பான் கீ மூன் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றிய கமிஷனின் முன்னாள் துணை தலைவர் மார்காட் வால்ஸ்ட்ராம் இந்த பொறுப்பை ஏற்கவுள்ளார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஆப்ரிக்க அரசுகளை ஜனநாயக மரபுபடி அல்லாமல் மாற்றும் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பது குறித்து தனக்கு கவலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


ஆப்ரிக்க ஒன்றியத்தின் தலைவராக கடாஃபி நீடிக்கப் போவதில்லை

கடாஃபி
கடாஃபி

ஆப்ரிக்க ஒன்றியத்தின் தலைவராக தொடர்ந்து நீடிப்பதற்கு லிபிய தலைவர் முவாமர் கடாஃபி மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

ஆப்ரிக்க ஒன்றியத்தின் புதிய தலைவராக மலாவியின் பிங்கு வா முதரிகா ஆப்ரிக்க ஒன்றிய நாடுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆப்ரிக்க ஒன்றிய தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கு கர்னல் கடாஃபி மிகவும் தயங்கியதாகவும், இதனால் மற்ற ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள் இடையே கோபம் ஏற்பட்டதாகவும் கூட்டம் நடைபெறும் அடிஸ் அபபாவில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகின்றார்.


யெமனில் கிளர்ச்சியாளர்களுக்கும் இராணுவத்துக்கும் இடையில் மோதல்

யெமன் வரைப்படம்
யெமன் வரைப்படம்

யெமனின் வடக்கில் இருக்கும் இரு பிராந்தியத்தில் நடைபெற்ற மோதலில் இருபது ஷியா கிளர்ச்சியாளர்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளதாக யெமன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யெமன் இராணுவம் தங்கள் மீதான தாக்குதலை நிறுத்திவிட்டால், தாங்கள் அரசாங்கத்தின் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்த ஒரு சில மணிநேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆனால், கிளர்ச்சியாளர்களின் நிபந்தனைகளை தாங்கள் ஏற்பதில்லை என கூறி, கிளர்ச்சியாளர்களின் கூற்றை அரசாங்கம் நிராகரித்தது.

ஹவுதீஸ் என்று அழைக்கப்படும் இந்த கிளர்ச்சியாளர்கள் தங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் எவ்விதமான உபயோகமான அரசியல் தீர்வையும் பெற முடியாது என்று கூறியிருக்கின்றனர்.


ஹெய்ட்டியில் குழந்தைகளை எடுத்து செல்ல முயன்ற அமெரிக்கர்கள் தடுத்து வைப்பு

ஹெய்ட்டி குழந்தைகள்
ஹெய்ட்டி குழந்தைகள்

ஹெய்ட்டியில் இருந்து எவ்வித அனுமதியும் இல்லாமல் முப்பது இளம் சிறார்களை வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல முயன்ற அமெரிக்கர்கள் குழு ஒன்றை ஹெய்ட்டி அதிகாரிகள் பிடித்து வைத்துள்ளனர்.

இந்த சிறார்கள் நிலநடுக்கத்தால் அனாதையானர்கள் என்பதற்கானா ஆதாரமோ அல்லது வெளிநாட்டு கொண்டு செல்வதற்கான அனுமதியோ இந்த பத்து அமெரிக்கர்களிடம் இல்லை என ஹெய்ட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் அமெரிக்காவில் உள்ள தேவாலயம் ஒன்றை சேர்ந்தவர்கள் என்று கூறும் இந்த குழுவினர், அண்டைய நாடான டோமினிகன் குடியரசில் தாங்கள் அனாதை ஆசிரமம் ஒன்றை நிறுவ திட்டமிடுவதாக தெரிவித்துள்ளனர்.

தத்து எடுப்பது தொடர்பில் ஹெய்ட்டி புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக பெற்றோர் இல்லாத குழந்தைகளை கடத்தி அவர்களை தத்தெடுப்பவர்களுக்கு விற்பது, வீட்டு வேலை செய்ய விற்பது அல்லது பாலியல் அடிமைகளாக விற்பது போன்றவை இடம்பெறலாம் என்ற அச்சம் அதிகரித்த பின்னர் இந்த கட்டுப்பாடுகள் வந்துள்ளது.

செய்தியரங்கம்
இடம்பெயர்ந்த மக்கள்
இடம்பெயர்ந்த மக்கள்

காலக்கெடு முடிவடைந்தும் முகாம்களில் மக்கள்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடான இறுதி யுத்த காலத்தில் வன்னிப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அரசின் இடைத்தங்கல் முகாம்களில் அகதிகளாக தஞ்சம் புகவேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்படி தங்கியவர்கள் அனைவரும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதிக்கு முன்னர் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என இலங்கை அரசு அறிவித்திருந்தது.

இந்தக் காலக்கெடு ஞாயிற்றுகிழமையுடன் முடிவடைந்துள்ள நிலையில் இன்னமும் சுமார் ஒரு லட்சம் மக்கள் பல முகாம்களில் தங்கியுள்ளனர். தாங்கள் உடனடியாக தங்களது இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

மக்கள் முன்னர் தங்கியிருந்த பகுதிகளில் இன்னமும் மிதிவெடிகளை முழுமையாக அகற்றும் பணி முடிவடையாததே அவர்களை மீள்குடியேற்ற முடியாததற்கு காரணம் என்று இலங்கை அரசின் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறுகிறார்.

தாங்கள் எதிர்பார்த்ததை விட மிதிவெடி அகற்றும் பணி மெதுவாகவே நடைபெற்று வருகிறது என்றும், மக்களை தொடர்ந்து முகாம்களில் தங்கவைக்கும் எண்ணம் அரசுக்கு கிடையாது என்றும் அவர் கூறுகின்றார்.

உயர் பாதுகாப்பு வலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவம் அமைச்சர் தெரிவிக்கிறார்.


யாழ்குடாவில் அழுத்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் வரைப்படம்
யாழ்ப்பாணம் வரைப்படம்

இலங்கையின் வடக்கே யாழ்குடா நாட்டில் தங்களது எதிர்காலத்தையும் வாழ்வாதாரங்களையும் உறுதிப்படுத்தும் வகையில் அங்கு சமூக ஆர்வலர்களால் அழுத்தக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அரசியல் தலைமகள் மற்றும் போராளிக் குழுக்களின் தீர்மானங்களே தம் மீது திணிக்கப்பட்டதாகவும் அப்படியான செயற்பாடுகள்தான் தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் என்று இந்த அழுத்தக் குழுவினர் கூறுகிறார்கள்.

இந்தக் குழுவில் எதிர்வரும் காலத்தில் முஸ்லிம் மக்களையும் இனைத்துக் கொள்ள இவர்கள் தீர்மானித்துள்ளனர். இதன் மூலம் வடகிழக்கு பகுதியில் சிறுபான்மையினர் தொடர்பான அரசியல் மற்றும் அபிவிருத்தி பணிகளில் தீர்மானங்கள் எடுக்கப்படும் போது சமூக மட்டக் குழுக்களுடன் கலந்துரையாடியே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் இவர்கள் கோருகிறார்கள்.

இந்த அழுத்தக் குழுவில் பல்துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் இடம் பெற்றுள்ளார்கள். வடபகுதியில் இருக்கும் அனைத்து மாவாட்டங்களில் இருந்தும் பலர் இந்த அழுத்தக் குழுவில் இணைந்துள்ளனர்.

யாழ்மாவட்ட மீனவர் சங்கங்களின் கூட்டுறவு சம்மேளனத்தின் தலைவர் தவரட்ணம் அவர்களின் தலைமையில் இந்த அழுத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.


தேர்தல் முடிந்தும் தொடரும் அச்சுறுத்தல்கள் - த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு

டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை
டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடை பெற்று முடிந்துள்ள போதிலும் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் தமது கூட்டமைப்பைச் சேர்ந்த சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை கூறுகின்றார்.

இதன் காரணமாக தேர்தல் காலத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய இரண்டு உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் உட்பட 4 பேர் தொடர்ந்தும் பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டத்திற்கு வெளியே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர் நோக்கியுள்ள இவர்களுக்கான பொலிஸ் பாதுகாப்பு தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரிடம் பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை முன் வைக்கப்பட்ட போதிலும் இது வரை எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று கூறுகிறார் டாக்டர் தோமஸ் வில்லியம் தங்கத்துரை

தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கும் இதனை தாம் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

தமது மாவட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவான ஆயுதக் குழுவொன்றினாலே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.


தமிழக முதல்வருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்

இந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்றுள்ள சிவசங்கர் மேனன் தமிழக முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து உரையாடியுள்ளார்.

இதன்போது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவது போன்ற விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள போதிலும், இது தொடர்பான மரண சான்றிதழ் இந்தியாவுக்கு இன்னமும் வழங்கப்படவில்லை என இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ தெரிவித்துள்ளது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பிரபாகரனின் இறப்பு சான்றிதழை இலங்கை இதுவரை கையளிக்கவில்லை: இந்திய புலனாய்வு பிரிவு


இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றிற்கு சமர்ப்பிப்பதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் இலங்கை அரசிடமிருந்து இதுவரை கையளிக்கப்படவில்லை என்று இந்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பதாரர் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு சி.பி.ஐ. கண்காணிப்பாளர் பி.என் மிஸ்ரா மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

இலங்கை அரசிடமிருந்து பிரபாகரன் இறப்புச் சான்றிதழைப் பெற சி.பி.ஐ. காத்திருப்பதாக மிஸ்ரா தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரத்தில் இருநாடுகளின் தூதரகங்களின் ஊடாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று இலங்கை அரசு அறிவித்தவுடன் அவரது இறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கு கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் ஊடாக இலங்கை அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அவரது இறப்புச் சான்றிதழ் இதுவரை சி.பி.ஐ.க்கு கிடைக்கவில்லை என்றும் மிஸ்ரா தனது பதிலில் தெரிவித்துள்ளார்.

அதில்,பிரபாகரன் இறந்ததாக தகவல் வந்ததை அடுத்து உரிய வழிகளில் இலங்கைக்கு தகவல் அனுப்பி அவருடைய இறப்பு சான்றிதழை கேட்டோம். இந்திய வெளியுறவு துறை மூலம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் இதுவரை பிரபாகரன் மரண சான்றிதழை இலங்கை அரசு தரவில்லை. இதற்காக இன்று வரை காத்திருக்கிறோம். மரண சான்றிதழை பெறுவதற்கு அதற்குரிய வழிமுறைகளின்படி தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த தடா கோர்ட்டில் அனுமதி பெற்று தேவையான விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றோம்.

இதில் மரண தண்டனை பெற்ற பேரறிவாளன், சுகந்த ராஜா, ஸ்ரீஹரன், ஆயுள் தண்டனை பெற்ற நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் வேலூர் சிறையில் உள்ளனர்.

மற்ற குற்றவாளிகள் ரவிச்சந்திரா, பிரகாசம் ஆகியோர் மதுரை சிறையில் உள்ளனர் என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர் பொட்டு அம்மானும் சேர்க்கப்பட்டார்.

இந்த இருவரும் பிடிபடாததால், இவர்கள் இருவரும் வழக்கிலிருந்து தனித்துப் பிரிக்கப்பட்டு தனி வழக்காக மாற்றப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மே 18ம் தேதி பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை கூறியது. இதையடுத்து வழக்கை முடிக்க மரணச் சான்றிதழைக் கோரியுள்ளது இந்திய அரசு. ஆனால் இதுவரை அதுகுறித்து இலங்கை அரசு பதிலளிக்காமல் மெளனம் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தமிழ்மக்களை சாக்கடைக்குள் வீழ்த்திய சம்பந்தன் கோஸ்டியினர்… -யாழ் மயில்வாகனம்


வடக்குகிழக்கு தமிழ்மக்களை தனிப்பட்ட நலன்களுக்காக சாக்கடைக்குள் தள்ளி விட்டிருக்கிறார் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன். பிரபாகரன் எப்படி கடைசியாக மாவிலாறு அணையைப்ப+ட்டி தன்தலையிலும் தமிழ்மக்களின் தலையிலும் மண்ணை அள்ளிப்போட்டு எல்லாவற்றையும் அழித்து தானும் சரணாகதி அடைந்து அழிந்து போனாரோ அதேபோல சம்பந்தனும் எவ்வித சாணக்கியமும் இல்லாமல் தேர்தலில் சரத்பொன்சேகாவை ஆதரித்ததன் மூலம் வடக்குகிழக்கு மக்களை சாக்கடைக்குள் வீழ்த்தி விட்டிருக்கின்றார். எதிர்ப்பு அரசியல் என்ற பெயரில் ஏகாதிபத்தியவாதிகளிடம் சரணடைந்திருக்கிறார் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்களில் எவரையும் தமிழர்கூட்டமைப்பு ஆதரிக்காமல் தமிழர்தரப்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டுமெனவும் அல்லது தமிழ்மக்கள் விரும்பிய வேட்பாளருக்கு தேர்தலில் வாக்களிக்குமாறு அறிக்கை விடுவது தான் தமிழ்மக்களின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்கும் எனவும் யார் வெற்றி பெற்று ஜனாதிபதியாக வருகிறார்களோ அவர்களுடன் ஓரு உறவை ஏற்படுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என கூட்டமைப்பின் எம்.பிக்கள் சிலர் தெரிவித்த ஆலோசனைகளுக்கு சம்பந்தனும் சுரேஸ்பிறேமச்சந்திரனும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்களாம். இதனால் உடனடியாக இப்போது எந்த முடிவையும் எடுக்கமுடியாது எனக் கூட்டத்தை ஒத்திவைத்தாராம் சம்பந்தன். இதனால்தான்; கூட்டமைப்பிற்குள்; முரண்பாடுகள் ஏற்படக் காரணமாயிருந்ததாம்.

சம்பந்தனுக்கும் சுரேஸ்பிறேமச்சந்திரனும் சரத்பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும் என்ற முடிவை ஏற்கனவே எடுத்து விட்டார்கள் என்பதை அவர்களின் நடவடிக்கைகளில் இருந்து அறியக்கூடியதாகவும் இருந்தது எனவும் தமிழ்மக்களையும் ஏனைய கூட்டமைப்பு எம்.பிக்களையும் ஏமாற்றுவதற்காகவே. யாரை ஆதரிப்பது என்ற முடிவு இன்னும எடுக்கப்படவில்லை என சம்பந்தன்கோஸ்டி நாடகம் ஆடியதாகவும் தெரிய வருகின்றது.

கடந்த 50வருடங்களாக தமிழ்மக்களின் நலன்களில் இருந்து முடிவுகள் எடுக்காமல் கண்ணை மூடிக்கொண்டு தமது நலன்களுக்காக எடுத்த முடிவுகள்தான் தமிழ்மக்களை இன்று அழிவுக்குள் தள்ளி விட்டிருக்கின்றது. இந்தத் தேர்தலிலும் சம்பந்தன்கோஸ்டி எடுத்த முடிவானது ஓரு இனத்தையே பாதிக்கும் அளவிற்கு கொண்டு வந்து விட்டிருக்கின்றது. இந்த சம்பந்தன் கோஸ்டியினர் தேர்தல் காலங்களில் வருவார்கள் பின்னர் வெளிநாடுகளுக்கு சென்று உல்லாசமாக காலத்தை கழிப்பார்கள். இவர்கள் வாக்குப் போடச்சொன்ன சரத்பொன்சேகாவும் ஒருவேளை அமெரிக்காவுக்கோ அல்லது பிரிட்டனுக்கோ சென்று செட்டில் ஆகிவிடுவார். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முகம்கொடுக்க வேண்டியவர்கள் வடக்குகிழக்கு வாழ் மக்கள் தான்.

மகிந்தாவை மாற்ற வேண்டும் என்று அடம்பிடித்த சம்பந்தன் அதற்காக ஏன் சரத்பொன்சேகாவுக்கு தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அறிக்கை விட்டது தமிழ்மக்களின் நலனுக்காக அல்ல என்பதை தமிழ்மக்கள் இப்போது நன்றாக புரிந்து கொண்டிருப்பார்கள். சரத் பொன்சேகாவினால் சிங்களத்தில் வெளியி;டப்பட்ட தேர்தல் பிரசுரத்தில் தமிழ்மக்களுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததை கண்டிக்காமல் கண்டுகொள்ளாமல்; கண்ணை மூடிக்கொண்டு சரத் பொன்சேகாவுக்கு வாக்களியுங்கள் என்று தன்நலத்திற்காக ஆதரித்து தமிழ்மக்களை இப்போது சாக்கடைக்குள் வீழ்த்தி விட்டனர் சம்பந்தன் கோஸ்டியினர்..!!
-யாழ் மயில்வாகனம்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்த நபரும் கைது செய்யப்படுவார் - அமைச்சர் கெஹலிய


நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்படும் எந்த நபர் என்றாலும் அவரை கைது செய்ய நேரிடும் என அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகார பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தேசத்தின் பாதுகாப்புக்கும் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எஸ்.எம்.எஸ் மூலம் அல்லது வேறும் வழியிலான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் எந்தவொரு நபரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முக்கிய காரணிகளின் அடிப்படையிலேயே லங்கா பத்திரகை சீல் வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படும் வகையில் செயற்படுவோர் தொடர்பில் கிடைக்கப் பெறும் தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வடக்கில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 7 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை


வடமாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் ஏழு லட்சம் பேர் வாக்களிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக வடமாகாணத்தில் 988334 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டடிருந்த போதிலும், 292812 பேர் மட்டுமே வாக்களிப்பில் கலந்து கொண்டனர். இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் 721359 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 185132 பேரும் வன்னி மாவட்டத்தில் 266975 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 107680 பேர் மட்டுமே வாக்களிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

வடக்கில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் 1989ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது என பவ்ரல் அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது. 1989ம் ஆண்டில் பதிவு செய்துகொண்ட பலர் புலம்பெயர்ந்தும் மரணித்தும் இருக்கலாம் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates