jkr
แสดงบทความที่มีป้ายกำกับ இரா. சம்பந்தன் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ இரா. சம்பந்தன் แสดงบทความทั้งหมด

வரலாற்றுக் கடமையை நாம் தவறவிடக் கூடாது தவறிழைத்தால் வருந்த வேண்டிய நிலை ஏற்படும் திருகோணமலையில் சம்பந்தன் எம்.பி. தெரிவிப்பு


ஜனாதிபதித் தேர்தலானது தமிழர்களாகிய நமது வாழ்வில் மட்டுமல்ல எமது எதிர்காலத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. ஆகவே இந்த தேர்தலை முழுமையாக பயன்படுத்தவேண்டும். இந்த வரலாற்றுக் கடமையை நாம் தவற விடக் கூடாது. தவறிழைத்தால் அதற்காக வருந்த வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை தீர்மானிக்கும் ஆற்றல் தமிழர்களின் கைகளிலேயே உள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் கடந்த 4 வருடங்களில் அனுபவித்த துன்பங்கள் எமக்கு ஏற்பட்டிருக்காது என்றும் அவர் கூறினார்.

திருகோணமலை நகர சபை மண்டபத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே சம்பந்தன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது,

முல்லைத்தீவில் இருந்து காயமடைந்தவர்கள் 800 பேர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது நான் திருமலையில் எனது வீட்டில் இருந்தேன். அவர்களை உடனடியாக சென்று பார்வையிடுவதற்கு விரும்பினேன். கடற்படை அதிகாரி கூறினார், நீங்கள் பாதுகாப்புச் செயலாளரின் அனுமதியைப் பெற வேண்டும் என்று. அவரிடம் பேசினேன், ""தயவு செய்து வைத்தியசாலைக்கு செல்ல மட்டும் அனுமதி கேட்க வேண்டாம்'' என்று அவர் எனக்கு கூறினார். அவ்வாறு எனில் ""ஜனாதிபதியிடம் நான் அனுமதி பெறுகின்றேன்'' என்று பாதுகாப்பு செயலாளருக்கு கூறினேன். அதற்கு அவர் கூறினார், ""ஜனாதிபதியாலும் அதற்கு அனுமதி தர முடியாது'' என்று. அப்போதுதான் எனக்கு புரிந்தது ஜனாதிபதியையும் விட அரசாங்க அதிகாரியான பாதுகாப்பு செயலாளரின் அதிகாரம் எந்த நிலையில் உள்ளது என்பது. அந்த விடயத்திற்கு அவரே அப்போது எஜமான். இத்தகைய மனிதாபிமானமற்ற ஆட்சியை, அதன் ஆட்சித் தலைவரை தமிழ் பேசும் நாம் ஏன் தோல்வி அடையச் செய்யக் கூடாது.

தற்போது சிங்கள பேரினவாத தூண் மேலிருந்து கீழாக நீளமாக வெடித்துள்ளது. அதன் அத்திவாரம் சீர்குலைந்து விட்டது. இப்போது நாம் ஒற்றுமையாக இருப்பதை தெளிவாக நிரூபிக்க வேண்டும். தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பதை தேர்தலில் வெளிப்படுத்த வேண்டும். அதற்கு ஒற்றுமையான வாக்களிப்பும் முழுமையான வாக்களிப்பும் அவசியமானது.'' இந்தியாவின் நிலைப்பாட்டில் கணிசமான மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் பிரசன்னம் இல்லாத இந்த நிலைமையில் நல்ல ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அணுகுமுறை இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. வன்முறை போராட்டம் எமது இனத்தை மிக மோசமாக பாதித்துள்ளது. இனி வன்முறை எமக்கு வேண்டாம், இளைஞர்களின் தியாகத்தை நாங்கள் மதிக்கின்றோம்.

"கல்முனையில் வைத்து மாநகர சபையின் சார்பில் தமிழினத்தின் தலைமகன் என்று எனக்கு விருது வழங்கினார்கள். அது எனக்களிக்கப்பட்ட கௌரவம் அல்ல. அது தமிழரசுக் கட்சியை உருவாக்கிய தந்தை செல்வாவிற்கும் தமிழரசுக் கட்சி பாரம்பரியத்திற்கும் அன்று முதல் இன்றுவரை தமிழ் பேசும் இனங்களுக்கிடையில் இணக்க உறவைப் பேணிய பாரம்பரியத்திற்கும் வழங்கப்பட்ட விருதாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் நாங்களும் நீண்டகாலமாக பேசி எம்மிடையே புரிந்துணர்வு ஒன்றை உருவாக்கி சமரச உடன்பாடு ஒன்றிற்கு வந்துள்ளோம். அதனடிப்படையில் நாம் பலவித விட்டுக் கொடுப்புகளுக்கும் சமரசங்களுக்கும் உட்பட்டு எமது சிறுபான்மையினங்களினது அரசியல் தீர்வு விடயங்களை அடைந்து கொள்வதில் பலமாக தற்போது இருக்கின்றோம்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களாகிய நாமும், முஸ்லிம் சகோதரர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் இப்பிரதேசத்தின் சிறுபான்மைச் சமூகத்தின் அரசியல் எதிர்பார்ப்புகள் இலகுவாக நிறைவேற்றப்படும் என்ற கருத்தை இந்தியாவும் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது. எதிர்காலத் தேர்தல்களில் குறிப்பாக பாராளுமன்றத் தேர்தல்களில் முஸ்லிம்களும் நாமும் ஒன்றாக இணைந்து போட்டியிட்டு வெற்றி பெறுவதன் மூலம் தமிழ் பேசும் சமூகத்தின் நீண்டகால குறைபாடுகள் தீர்க்கப்படும்.

இந்தத் தேர்தல் தமிழர்களாகிய நமது வாழ்வில் மட்டுமல்ல நமது எதிர்காலத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. ஆகவே இந்த தேர்தலை நாம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இந்த அரிய சந்தர்ப்பம் மீண்டும் விரைவில் கிடைக்காது. இந்த வரலாற்றுக் கடமையை நாம் தவற விடக் கூடாது. தவறிழைத்தால் அதற்காக வருந்த வேண்டிய நிலை ஏற்படும்.

நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலை அதன் வெற்றி வேட்பாளரை தீர்மானிக்கும் ஆற்றல் தமிழர்களின் கைகளில் இப்போது உள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 1 இலட்சம் அதிகப்படியான வாக்குகளால்தான் தெரிவு செய்யப்பட்டார். சென்ற தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. வாக்களித்திருந்தால் கடந்த 4 வருடங்கள் அனுபவித்த துன்பங்கள் நமக்கு ஏற்பட்டிருக்காது. துரதிஷ்டமாக வாக்களிக்காது இருந்து விட்டோம்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க அல்லது கரு ஜயசூரிய போட்டியிட்டிருந்தால் நிச்சயம் அது மஹிந்த ராஜபக்ஷவிற்கு எந்த ஒரு சவாலையும் உருவாக்கி இருக்காது. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ கையில் எடுத்த யுத்த வெற்றி என்ற ஆயுதம் சரத் பொன்சேகாவிடமும் இருந்ததால் அவர் சரியான சவாலை மஹிந்த ராஜபக்ஷவிற்கு கொடுக்கக்கூடியதாக இருந்தார்.

சமவலுக் கொண்ட இருவர் ஜனாதிபதித் தேர்தலில் இறங்கிய நிலைமையில்தான் தமிழ் மக்களின் முக்கியத்துவம் முதன்மை பெறத் தொடங்கியது. இதனால்தான் மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா ஆகிய அனைத்து தரப்பினரும் எம்முடன் பேசத் தொடங்கினர். அவர்களுக்கு தமிழ் மக்களின் வாக்கு அவசியமாக இருந்தது. நம்மிடம் ஆதரவை எதிர்பார்த்த அனைவருக்கும் நாம் கூறினோம், ""தமிழ் மக்களை நாம் விற்க மாட்டோம். நாங்கள் யாருக்கும் அடிபணியவும் மாட்டோம். எமது இனம் நொந்து போயுள்ளது. தமிழர்கள் அனைவரும் சிறிது அளவிலாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நாம் அவர்களுக்கு ஏதாவது விடிவை ஏற்படுத்துவாம் என்று நம்புகின்றனர். எனவே அந்த நம்பிக்கையை நாம் அழித்து விட முடியாது. ஆகவே எமது மக்களின் எதிர்காலத்தை மட்டுமே மையமாகக் கொண்டு எமது முடிவு அமையும் என்று நாம் அவர்களிடம் கூறினோம்.

பல மாதங்களாக தடை முகாம்களில் மக்களை மூடி வைத்து விட்டு இப்போது அவர்களை நடுத் தெருவில் விட்டு விட்டு தமிழர்களை விடுவித்து விட்டோம் என்று கூறுகின்றனர். மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசிய போது அதி உயர் பாதுகாப்பு வலயத்தை நீக்குங்கள். இப்போது விடுதலைப் புலிகள் இல்லை, ஆயுதங்கள் இல்லை, கேந்திர முக்கியத்துவமான இடங்களுக்கு எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை. புலிகள் துப்பரவாக இல்லவே இல்லை என்று நான் கூறினேன். ஆனால் அதை நீக்கவும், மக்களின் இயல்பு வாழ்வுக்கும் அவர் அனுமதி வழங்க விரும்பவில்லை.

மூதூர் கிழக்கில் இருந்து இடம்பெயரச் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதிக்கு கூறினேன். தேர்தல் முடிந்த பின்னர் படிப்படியாக அதனைச் செய்யலாம் என்றார். அதற்கு முன்னர் செய்ய வேண்டும் என்று கேட்டேன், அதனை அவர் மறுத்தார். வன்னிப் பிரதேசத்தில் இராணுவ கட்டுமானங்கள் நடைபெறுகின்றது. அதனை சீன தேசத்தவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள் என்று நம்பத்தக்க தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளது.

தமிழர்களின் காணிகள் சிங்களவர்களால் பிடிக்கப்பட்டு வருகின்றது. அமைச்சர் ஒருவரின் இணைப்பு உத்தியோகத்தரான பெண் ஒருவர் விளாங்குளத்தில் உள்ள தமிழர்களின் காணியை தற்போது பிடித்து வைத்துள்ளார். தம்பலகாமத்தில் தமிழர்களுக்கு சொந்தமான 80 ஏக்கர் காணி சிங்கள வர்த்தகர் ஒருவருக்கு வழங்கப்பட்டு ஆடைத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புல்மோட்டையில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் வகை தொகையின்றி பறிபோய்க் கொண்டிருக்கின்றது.

நாட்டின் சிறுபான்மையினர் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் அங்கும் அவர்கள் சிறுபான்மையினராக ஆக்கப்படல் வேண்டும் என்ற அடிப்படையில் அரச இயந்திரம் செயற்பட்டு வருகின்றது. ஜனாதிபதியின் ஆலோசகர் இனிய பாரதி ஆலையடிவேம்பு, அம்பாறை, அக்கரைப்பற்று பகுதிகளில் எமது ஆதரவாளர்களை பயமுறுத்தி, தாக்கி வருகின்றார். இந்நிலையில் அம்பாறையில் நீதியான தேர்தலை எப்படி நடத்த முடியும். மஹிந்த ராஜபக்ஷவை மீளத் தெரிவு செய்வது தற்கொலைக்கு சமமானது.

சரத் பொன்சேகா நல்லவர் என்றோ புனிதமானவர் என்றோ நான் சொல்லவில்லை. ஆனால் மஹிந்தவை அவரது ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர சரத் பொன்சேகா வெற்றி பெறச் செய்யப்பட வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். தமிழ் மக்களின் வாக்குகளால் சரத்பொன்சேகா வெற்றி பெறும் அதேவேளை வடக்கு கிழக்கு தமிழ் பேசும் வாக்குகளால் மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்தார் என்ற செய்தி வெளி உலகிற்கு தெரியப்படுத்தப்படல் வேண்டும்.

சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்த பின்னர் நாம் பல இடங்களுக்கு சென்றோம். அங்கெல்லாம் எமது மக்கள் கூறியது என்னவென்றால், இந்த முடிவை நீங்கள் எடுக்காதிருந்தால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் முற்றாக உங்களைப் புறக்கணிப்பதோடு மட்டுமல்லாது, உங்கள் முகத்தில் காறித் துப்பி இருப்போம்'' என்றனர்.

மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்து சரத் பொன்சேகா வெற்றி அடைந்தால் ஒரு கதவு நமக்கு திறக்கப்படும். ஒரு வழி மீண்டும எமக்கு கிடைக்கும். தமிழர் வாழ்வில் மீண்டும் இயல்பு நிலை தோன்றும். எனவே இம்முறை நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். முழுமையாக வாக்களிக்க வேண்டும். திருகோணமலை நகர மக்கள் வாக்களிப்பில் அதிக அக்கறை காட்டுவதில்லை. என்ற குறை நீண்டகாலமாக உள்ளது? சல்லி, திரியாய் மக்கள் முழுமையாக வாக்களிப்பது வழமை. இம்முறை நகரம், கிராமம் என்றில்லாமல் அனைவரும் முழுமையாக வாக்களிப்பில் ஈடுபட வேண்டும். அதன் மூலம் சரத் பொன்சேகாவை மிகப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்ய வேண்டும்'' என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை பேணுவதன் மூலம் எதிர்வரும் தேர்தல்களிலும் நாம் சாதிக்கலாம் :-சம்பந்தன்


தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணையக் கூடியததொரு தருணத்தை ஜனாதிபதித் தேர்தல் எமக்குத் தந்திருக்கின்றது. எதிர் காலங்களிலும் இந்த இணைப்பினைப் பேணுவதன் மூலம் எதிர்வரும் தேர்தல்களிலும் நாம் சாதிக்கலாம். பெருந்தன்மையுடன் முஸ்லிம்கள் விடயத்தில் விட்டுக் கொடுப்புக்களோடு நடந்துகொள்ள நாம் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து எதிரணியின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நேற்று முன்தினம் நடத்திய கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், எம்.பி.க்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட இரு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை, மாநகர சபை உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர். கல்முனை மாநகர சபையின் 2010ஆம் ஆண்டுக்கான உயர் விருதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தமிழ் பேசும் மக்களின் தலைமகன் விருது கல்முனை மாநகர மேயர் எச்.எம்.எம். ஹரீஸால் வழங்கி வைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய சம்பந்தன் எம்.பி. கூறியதாவது: கல்முனை மண்ணில் இன்று எனக்கு அளிக்கப்பட்டுள்ள கௌரவம் எனக்குரியதல்ல. தமிழ் முஸ்லிம் உறவை எதிர்பார்த்து நிற்கும் அனைவருக்கும் உரியதாகும். அரசியலில் நேர்மை. உண்மை என்பவற்றைக் கொண்ட பாரம்பரியத்துடன் நான் கடந்து வந்த பாதைக்குக் கிடைத்த கௌரவம் என்றே இதனைக் கருதுகின்றேன். எங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள இவ் ஒன்றிணைவின் மூலம் தமிழ் முஸ்லிம் உறவைக் கட்டிக் காத்து, நாமே நம்மை ஆள வேண்டிய நிலையினை உருவாக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவோ ஏனைய ராஜபக்ஷக்களோ எம்மை ஆள நாம் இடமளிக்க கூடாது. பஞ்சாப், ஆந்திரா, தமிழ்நாடு எனத் தனித்தனியான மாநில ஆட்சிகள் நடைபெற்றாலும் இந்தியாவின் முழு ஆட்சியினையும் அது பாதிக்கவில்லை. அது சிதறவும் இல்லை. மாறாக முன்னேற்றமே அடையும். இவ்வாறானதொரு ஆளுமையினையே இங்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

தமிழ் முஸ்லிம் மக்கள் உண்மைக்கு உண்மையாக நேசிக்க வேண்டும். இதன் மூலமே நிரந்தர உறவினைப் பேண முடியும். சிங்கள மக்களை நாம் மதிக்கின்றோம். ஆனால், அவர்களுக்கொரு மண், பண்பாடு, மொழி இருப்பது போல் தமிழ் பேசும் மக்களுக்கும் இருக்கின்றது என்பதை அவர்கள் உணர வேண்டும். ஜனாதிபதி மஹிந்தவைப் பொறுத்தவரை அவருக்கு அடிபணியக் கூடிய, அவர் சொல்வதற்கு ஆமாம் போடுகினற தலைவர்களையே அவருக்குப் பிடிக்கும். இதற்கு மாற்றமான தலைவர்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வதில்லை.

எமது மக்களின் பிரச்சினை எதுவென்பதை அறிந்து அதனை பேசித் தீர்க்கக் கூடியவர்களே அரசியலில் இறக்க வேண்டும். இது பற்றித் தெரியாதவர்கள் இதில் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது. மனிதாபிமானமில்லாத தலைவராகவே ஜனாதிபதியை நாம் காண்கின்றோம். பாராளுமன்றத்தில் வாக்களிக்க முடியாமல் இரண்டு மூன்று தடவைக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கடத்தி அவர்களின் குடும்பங்களைப் பயமுறுத்தும் காரியத்தை இவ் அரசு செய்தது. இதுவெல்லாம் ஜனநாயகமா? என நாம் கேட்கின்றோம்.

எடுத்த எடுப்பில் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை நாம் எடுக்கவில்லை. அலசி, பேசி ஆராய்ந்தே இந்த முடிவை எடுத்தோம். வட மாகாண முஸ்லிம்கள் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும். தங்களது பிரச்சினைகளை நாங்களே தீர்மானிக்க வேண்டும். காணி, கல்வி, தொழில் இவைகளைப் பற்றியெல்லாம் ஜனாதிபதியிடம் பேசினோம். ஆனால் அவர் இவைகளையெல்லாம் இழுத்தடிப்புச் செய்தார். பொன்சேகாவுடன் பேசியபோது சாதகமான சமிக்கை கிடைத்தது. அதன் பின்னரே எமது முடிவை அறிவித்தோம்.

நான் தான் யுத்தத்தை வென்றவன் என மார்பு தட்டிக்கொண்டு இருந்த ஜனாதிபதிக்கு அவருக்குள்ளிருந்தே பொது வேட்பாளரை எதிரணியினர் தேர்வு செய்துள்ளனர். இதனால் மிகவும் சாதாரணமாக நினைத்த ஜனாதிபதித் தேர்தல் இன்று ஜனாதிபதிக்குப் பெரும் தலையிடியாக மாறியுள்ளது. சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்த பின்னும் எமது உரிமைகள் வெல்லப்படவில்லையாயின் 2010ஆம் ஆண்டு தமிழ் முஸ்லிம்கள் இணைந்து அதனைப் பெற முயற்சிக்க வேண்டும். இவைகளினூடாகவே தமிழ் முஸ்லிம் சமூகம் தலைநிமிர்ந்து வாழ முடியும் என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஈழத்தமிழருக்கு நல்லதொரு தீர்வைத்தாருங்கள்! இந்தியாவிடம் சம்பந்தன் பகிரங்கக் கோரிக்கை!


இந்தியாவின் நிலைப்பாட்டில் தற்போது மாற்றத்தைக் காண்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்ற கருத்து இந்தியாவில் வளர்ந்து வருவதை அவதானிக்கிறோம். எமது மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு, அவர்களுக்கு நல்லதொரு அரசியல்தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க உதவவேண்டும் என்று எமது மக்கள் சார்பாக இந்தியாவிடம் பகிரங்கமாகக் கேட்டுக்கொள்கிறேன். இன்னும் ஓரிரு தினங்களில் புதுடில்லிக்கு எனது நண்பர்கள் சிலருடன் சென்று தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு தொடர்பாகப் பேச்சு நடத்தவுள்ளேன்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டில் சிறப்புரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
சர்வதேசப் பங்களிப்பு குறித்து இங்கு கருத்துக்கூறுவது பொருத்தம் எனக் கருதுகின்றேன். 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின் இனப்படுகொலை நடைபெற்றபின் சர்வதேச சமூகம் எமது விடயத்தில் மிகவும் அக்கறை காட்ட ஆரம்பித்தது. இந்தியா கூடுதல் பங்களிப்புச் செய்தது.
துரதிர்ஷ்டவசமாக ஒரு காலகட்டத்தில் பல சம்பவங்கள் இடம்பெற்ற பின்னர் இடம்பெற்ற விடயங்கள் குறித்துப் பேச வேண்டிய அவசியமில்லை. இந்தியா ஒதுங்கிவிட்டது. அவர்கள் ஒதுங்கியதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஏனைய நாடுகளைப் பொறுத்தமட்டில் ஓரளவு அக்கறை காட்டி வந்தார்கள். அவர்களின் பங்களிப்பு பரிபூரணமானதாக இருந்ததாகக் கூறமுடியாது. பல நாடுகளின் நிலைப்பாடு, இந்தியா என்ன செய்கின்றதோ அதன் பின்னால் நிற்போம் என்பதாகும். பல நாடுகளின் ராஜதந்திரிகள், வெளிநாட்டுத் தலைவர்கள் இங்கு வரும்போது அவர்கள் கூறுவது என்னவென்றால் இந்தியா பங்கெடுக்க வேண்டும்; நாங்கள் உதவியாக இருப்போம் என்பதாகும்.
இதை இந்தியாவிற்கு நாங்கள் பலதடவைகள் எடுத்துக்கூறி வந்துள்ளோம். தற்போது இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றத்தைக்காண்கிறோம். தமிழர் பிரச்சினை தொடர்பாக தங்களின் பங்களிப்பைச் செய்து நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்து அவர்கள் மத்தியில் வளர்ந்து வருவதை அவதானிக்கின்றோம் நானும் எனது நண்பர்கள் சிலரும் எதிர்வரும் இரண்டு மூன்று நாள்களுக்குள் புதுடில்லிக்குச் செல்லவிருக்கின்றோம். எமது மக்கள் சார்பாக இந்தியாவுக்கு ஒரு விநயமான வேண்டுகோளை விடுக்கவிரும்புகின்றோம். தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள். எமது மக்களின் நிம்மதியான வாழ்வுக்குஅவர்களுக்கு நல்லதொரு அரசியல்தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க உதவுங்கள் என்று எமது மக்கள் சார்பாக பகிரங்கமாகக் கேட்டுக் கொள்ளவிரும்புகின்றேன்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பொன்சேகாவை, சம்பந்தன் சந்தித்து 10 அம்சத்திட்ட ஆவணம் கையளிப்பு


எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று மாலை சந்தித்து பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டுமானால் எத்தகைய நடவடிக்கைகளை ஐக்கிய தேசிய முன்னணியும், ஜெனரல் சரத் பொன்சேகாவும் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து சம்பந்தன் எம்.பி. விளக்கிக் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில்,

அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குதல்,
உரிய வகையில் மீள்குடியேற்றத்தை முன்னெடுத்தல்,
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தல்,
மீன்பிடித் தடையை முற்றாக நீக்குதல்,
வர்த்தக வாணிப தடையை நீக்குதல்,
இராணுவ முகாம்களை இடமாற்றியமைத்தல்

உள்ளிட்ட 10 அம்சங்களை அடங்கிய ஆவணமொன்றை ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் கையளித்துள்ளார்.

இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு முடிவெடுக்கப்படுமென சம்பந்தன் எம்.பி. தெவித்துள்ளார். அத்துடன் இந்த விடயங்கள் தொடர்பாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா அறிவித்துள்ளதாகவும், இவை தொடர்பான திட்டங்களைத் தயாரித்துள்ளதாகவும் இங்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்தச் சந்திப்புக் குறித்து கருத்துத் தெரிவித்த எதிரணி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பேச்சாளரும், ஜே.வி.பியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்க, ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது எனவும், அவர்கள் பொன்சேகாவை ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates