வரலாற்றுக் கடமையை நாம் தவறவிடக் கூடாது தவறிழைத்தால் வருந்த வேண்டிய நிலை ஏற்படும் திருகோணமலையில் சம்பந்தன் எம்.பி. தெரிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலானது தமிழர்களாகிய நமது வாழ்வில் மட்டுமல்ல எமது எதிர்காலத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. ஆகவே இந்த தேர்தலை முழுமையாக பயன்படுத்தவேண்டும். இந்த வரலாற்றுக் கடமையை நாம் தவற விடக் கூடாது. தவறிழைத்தால் அதற்காக வருந்த வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை தீர்மானிக்கும் ஆற்றல் தமிழர்களின் கைகளிலேயே உள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் கடந்த 4 வருடங்களில் அனுபவித்த துன்பங்கள் எமக்கு ஏற்பட்டிருக்காது என்றும் அவர் கூறினார்.
திருகோணமலை நகர சபை மண்டபத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே சம்பந்தன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது,
முல்லைத்தீவில் இருந்து காயமடைந்தவர்கள் 800 பேர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது நான் திருமலையில் எனது வீட்டில் இருந்தேன். அவர்களை உடனடியாக சென்று பார்வையிடுவதற்கு விரும்பினேன். கடற்படை அதிகாரி கூறினார், நீங்கள் பாதுகாப்புச் செயலாளரின் அனுமதியைப் பெற வேண்டும் என்று. அவரிடம் பேசினேன், ""தயவு செய்து வைத்தியசாலைக்கு செல்ல மட்டும் அனுமதி கேட்க வேண்டாம்'' என்று அவர் எனக்கு கூறினார். அவ்வாறு எனில் ""ஜனாதிபதியிடம் நான் அனுமதி பெறுகின்றேன்'' என்று பாதுகாப்பு செயலாளருக்கு கூறினேன். அதற்கு அவர் கூறினார், ""ஜனாதிபதியாலும் அதற்கு அனுமதி தர முடியாது'' என்று. அப்போதுதான் எனக்கு புரிந்தது ஜனாதிபதியையும் விட அரசாங்க அதிகாரியான பாதுகாப்பு செயலாளரின் அதிகாரம் எந்த நிலையில் உள்ளது என்பது. அந்த விடயத்திற்கு அவரே அப்போது எஜமான். இத்தகைய மனிதாபிமானமற்ற ஆட்சியை, அதன் ஆட்சித் தலைவரை தமிழ் பேசும் நாம் ஏன் தோல்வி அடையச் செய்யக் கூடாது.
தற்போது சிங்கள பேரினவாத தூண் மேலிருந்து கீழாக நீளமாக வெடித்துள்ளது. அதன் அத்திவாரம் சீர்குலைந்து விட்டது. இப்போது நாம் ஒற்றுமையாக இருப்பதை தெளிவாக நிரூபிக்க வேண்டும். தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பதை தேர்தலில் வெளிப்படுத்த வேண்டும். அதற்கு ஒற்றுமையான வாக்களிப்பும் முழுமையான வாக்களிப்பும் அவசியமானது.'' இந்தியாவின் நிலைப்பாட்டில் கணிசமான மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் பிரசன்னம் இல்லாத இந்த நிலைமையில் நல்ல ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அணுகுமுறை இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. வன்முறை போராட்டம் எமது இனத்தை மிக மோசமாக பாதித்துள்ளது. இனி வன்முறை எமக்கு வேண்டாம், இளைஞர்களின் தியாகத்தை நாங்கள் மதிக்கின்றோம்.
"கல்முனையில் வைத்து மாநகர சபையின் சார்பில் தமிழினத்தின் தலைமகன் என்று எனக்கு விருது வழங்கினார்கள். அது எனக்களிக்கப்பட்ட கௌரவம் அல்ல. அது தமிழரசுக் கட்சியை உருவாக்கிய தந்தை செல்வாவிற்கும் தமிழரசுக் கட்சி பாரம்பரியத்திற்கும் அன்று முதல் இன்றுவரை தமிழ் பேசும் இனங்களுக்கிடையில் இணக்க உறவைப் பேணிய பாரம்பரியத்திற்கும் வழங்கப்பட்ட விருதாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் நாங்களும் நீண்டகாலமாக பேசி எம்மிடையே புரிந்துணர்வு ஒன்றை உருவாக்கி சமரச உடன்பாடு ஒன்றிற்கு வந்துள்ளோம். அதனடிப்படையில் நாம் பலவித விட்டுக் கொடுப்புகளுக்கும் சமரசங்களுக்கும் உட்பட்டு எமது சிறுபான்மையினங்களினது அரசியல் தீர்வு விடயங்களை அடைந்து கொள்வதில் பலமாக தற்போது இருக்கின்றோம்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களாகிய நாமும், முஸ்லிம் சகோதரர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் இப்பிரதேசத்தின் சிறுபான்மைச் சமூகத்தின் அரசியல் எதிர்பார்ப்புகள் இலகுவாக நிறைவேற்றப்படும் என்ற கருத்தை இந்தியாவும் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது. எதிர்காலத் தேர்தல்களில் குறிப்பாக பாராளுமன்றத் தேர்தல்களில் முஸ்லிம்களும் நாமும் ஒன்றாக இணைந்து போட்டியிட்டு வெற்றி பெறுவதன் மூலம் தமிழ் பேசும் சமூகத்தின் நீண்டகால குறைபாடுகள் தீர்க்கப்படும்.
இந்தத் தேர்தல் தமிழர்களாகிய நமது வாழ்வில் மட்டுமல்ல நமது எதிர்காலத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. ஆகவே இந்த தேர்தலை நாம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இந்த அரிய சந்தர்ப்பம் மீண்டும் விரைவில் கிடைக்காது. இந்த வரலாற்றுக் கடமையை நாம் தவற விடக் கூடாது. தவறிழைத்தால் அதற்காக வருந்த வேண்டிய நிலை ஏற்படும்.
நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலை அதன் வெற்றி வேட்பாளரை தீர்மானிக்கும் ஆற்றல் தமிழர்களின் கைகளில் இப்போது உள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 1 இலட்சம் அதிகப்படியான வாக்குகளால்தான் தெரிவு செய்யப்பட்டார். சென்ற தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. வாக்களித்திருந்தால் கடந்த 4 வருடங்கள் அனுபவித்த துன்பங்கள் நமக்கு ஏற்பட்டிருக்காது. துரதிஷ்டமாக வாக்களிக்காது இருந்து விட்டோம்.
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க அல்லது கரு ஜயசூரிய போட்டியிட்டிருந்தால் நிச்சயம் அது மஹிந்த ராஜபக்ஷவிற்கு எந்த ஒரு சவாலையும் உருவாக்கி இருக்காது. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ கையில் எடுத்த யுத்த வெற்றி என்ற ஆயுதம் சரத் பொன்சேகாவிடமும் இருந்ததால் அவர் சரியான சவாலை மஹிந்த ராஜபக்ஷவிற்கு கொடுக்கக்கூடியதாக இருந்தார்.
சமவலுக் கொண்ட இருவர் ஜனாதிபதித் தேர்தலில் இறங்கிய நிலைமையில்தான் தமிழ் மக்களின் முக்கியத்துவம் முதன்மை பெறத் தொடங்கியது. இதனால்தான் மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா ஆகிய அனைத்து தரப்பினரும் எம்முடன் பேசத் தொடங்கினர். அவர்களுக்கு தமிழ் மக்களின் வாக்கு அவசியமாக இருந்தது. நம்மிடம் ஆதரவை எதிர்பார்த்த அனைவருக்கும் நாம் கூறினோம், ""தமிழ் மக்களை நாம் விற்க மாட்டோம். நாங்கள் யாருக்கும் அடிபணியவும் மாட்டோம். எமது இனம் நொந்து போயுள்ளது. தமிழர்கள் அனைவரும் சிறிது அளவிலாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நாம் அவர்களுக்கு ஏதாவது விடிவை ஏற்படுத்துவாம் என்று நம்புகின்றனர். எனவே அந்த நம்பிக்கையை நாம் அழித்து விட முடியாது. ஆகவே எமது மக்களின் எதிர்காலத்தை மட்டுமே மையமாகக் கொண்டு எமது முடிவு அமையும் என்று நாம் அவர்களிடம் கூறினோம்.
பல மாதங்களாக தடை முகாம்களில் மக்களை மூடி வைத்து விட்டு இப்போது அவர்களை நடுத் தெருவில் விட்டு விட்டு தமிழர்களை விடுவித்து விட்டோம் என்று கூறுகின்றனர். மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசிய போது அதி உயர் பாதுகாப்பு வலயத்தை நீக்குங்கள். இப்போது விடுதலைப் புலிகள் இல்லை, ஆயுதங்கள் இல்லை, கேந்திர முக்கியத்துவமான இடங்களுக்கு எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை. புலிகள் துப்பரவாக இல்லவே இல்லை என்று நான் கூறினேன். ஆனால் அதை நீக்கவும், மக்களின் இயல்பு வாழ்வுக்கும் அவர் அனுமதி வழங்க விரும்பவில்லை.
மூதூர் கிழக்கில் இருந்து இடம்பெயரச் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதிக்கு கூறினேன். தேர்தல் முடிந்த பின்னர் படிப்படியாக அதனைச் செய்யலாம் என்றார். அதற்கு முன்னர் செய்ய வேண்டும் என்று கேட்டேன், அதனை அவர் மறுத்தார். வன்னிப் பிரதேசத்தில் இராணுவ கட்டுமானங்கள் நடைபெறுகின்றது. அதனை சீன தேசத்தவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள் என்று நம்பத்தக்க தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளது.
தமிழர்களின் காணிகள் சிங்களவர்களால் பிடிக்கப்பட்டு வருகின்றது. அமைச்சர் ஒருவரின் இணைப்பு உத்தியோகத்தரான பெண் ஒருவர் விளாங்குளத்தில் உள்ள தமிழர்களின் காணியை தற்போது பிடித்து வைத்துள்ளார். தம்பலகாமத்தில் தமிழர்களுக்கு சொந்தமான 80 ஏக்கர் காணி சிங்கள வர்த்தகர் ஒருவருக்கு வழங்கப்பட்டு ஆடைத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புல்மோட்டையில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் வகை தொகையின்றி பறிபோய்க் கொண்டிருக்கின்றது.
நாட்டின் சிறுபான்மையினர் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் அங்கும் அவர்கள் சிறுபான்மையினராக ஆக்கப்படல் வேண்டும் என்ற அடிப்படையில் அரச இயந்திரம் செயற்பட்டு வருகின்றது. ஜனாதிபதியின் ஆலோசகர் இனிய பாரதி ஆலையடிவேம்பு, அம்பாறை, அக்கரைப்பற்று பகுதிகளில் எமது ஆதரவாளர்களை பயமுறுத்தி, தாக்கி வருகின்றார். இந்நிலையில் அம்பாறையில் நீதியான தேர்தலை எப்படி நடத்த முடியும். மஹிந்த ராஜபக்ஷவை மீளத் தெரிவு செய்வது தற்கொலைக்கு சமமானது.
சரத் பொன்சேகா நல்லவர் என்றோ புனிதமானவர் என்றோ நான் சொல்லவில்லை. ஆனால் மஹிந்தவை அவரது ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர சரத் பொன்சேகா வெற்றி பெறச் செய்யப்பட வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். தமிழ் மக்களின் வாக்குகளால் சரத்பொன்சேகா வெற்றி பெறும் அதேவேளை வடக்கு கிழக்கு தமிழ் பேசும் வாக்குகளால் மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்தார் என்ற செய்தி வெளி உலகிற்கு தெரியப்படுத்தப்படல் வேண்டும்.
சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்த பின்னர் நாம் பல இடங்களுக்கு சென்றோம். அங்கெல்லாம் எமது மக்கள் கூறியது என்னவென்றால், இந்த முடிவை நீங்கள் எடுக்காதிருந்தால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் முற்றாக உங்களைப் புறக்கணிப்பதோடு மட்டுமல்லாது, உங்கள் முகத்தில் காறித் துப்பி இருப்போம்'' என்றனர்.
மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்து சரத் பொன்சேகா வெற்றி அடைந்தால் ஒரு கதவு நமக்கு திறக்கப்படும். ஒரு வழி மீண்டும எமக்கு கிடைக்கும். தமிழர் வாழ்வில் மீண்டும் இயல்பு நிலை தோன்றும். எனவே இம்முறை நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். முழுமையாக வாக்களிக்க வேண்டும். திருகோணமலை நகர மக்கள் வாக்களிப்பில் அதிக அக்கறை காட்டுவதில்லை. என்ற குறை நீண்டகாலமாக உள்ளது? சல்லி, திரியாய் மக்கள் முழுமையாக வாக்களிப்பது வழமை. இம்முறை நகரம், கிராமம் என்றில்லாமல் அனைவரும் முழுமையாக வாக்களிப்பில் ஈடுபட வேண்டும். அதன் மூலம் சரத் பொன்சேகாவை மிகப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்ய வேண்டும்'' என்றார்.
0 Response to "வரலாற்றுக் கடமையை நாம் தவறவிடக் கூடாது தவறிழைத்தால் வருந்த வேண்டிய நிலை ஏற்படும் திருகோணமலையில் சம்பந்தன் எம்.பி. தெரிவிப்பு"
แสดงความคิดเห็น