ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நிலவரங்கள் : யாழில் 15 விழுக்காடு, நாடு தழுவிய ரீதியாக 70வீத வாக்கு பதிவாகியுள்ளது
"மன்னார் மாவட்டத்தில் மக்கள் உற்சாகமாக வாக்களிக்கின்றனர். மன்னார் மாவட்டத்தில் 85,122 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
மன்னாரில் 28 வாக்களிப்பு நிலையங்களும், மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் 42 வாக்களிப்பு நிலையங்களும் மொத்தமாக 70 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 103 வாக்களிப்பு பெட்டிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, தூர இடங்களில் வாக்களிப்பவர்களுக்கான போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. வன்முறைகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லை. எனினும் வாக்களிப்பு நிலையங்களுக்கு இடைநடுவே சில குழுக்கள் வாக்களிக்கச் செல்லும் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றனர்."
யாழ்ப்பாணம் "காலையில் சற்று மந்தமாக காணப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் தற்போது சுறுசுறுப்பு காணப்படுகின்றது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் வாக்களிக்க வருகை தந்து கொண்டிருக்கின்றனர். காலையில் சற்று பதட்டமான நிலை காணப்பட்ட போதிலும், தற்போது மக்கள் கூட்டம் கூட்டமாக வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்து வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர்."
"மலையக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுகின்றனர். இன்று பெரும்பாலான தோட்டங்களில் காலையில் வேலைக்குச் சென்று 11.00 மணியளவில் திரும்பி வந்து வாக்களிக்க ஆரம்பித்துள்ளனர்.
பொகவந்தலாவை, ஹட்டன், மஸ்கெலியா போன்ற நகரங்களில் வர்த்தக நடவடிக்கைகள் மந்தகதியிலேயே இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. வாக்களிப்பு நிலையங்களுக்கருகில் பொலிஸ், இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வாக்களிப்பு வீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது."
பிந்திய செய்தி
சிறிலங்காவில் ஆறாவது அரசதலைவரை தேர்ந்தெடுக்கும் இன்றைய தேர்தலில் வாக்களிப்பு நிறைவாகும் தறுவாயில் மாலை 3.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் 15 விழுக்காடு வாக்களிப்பே இடம்பெற்றிருப்பதாக தேர்தல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு 70 விழுக்காடாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 40 விழுக்காடு வாக்குப்பதிவும் வன்னியில் 45 விழுக்காடு வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று மதியம் வரை எவரும் வாக்களிக்கவில்லை என்றும் அங்குள்ள வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, வவுனியாவில் இன்று முற்பகல் இரண்டு கிரனேட் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற இந்த சம்பவங்களில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் இந்த தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இறுதியாக கிடைத்த தகவல்களின்படி, தற்போது வாக்களிப்பு நிலையங்கள் யாவும் சிறிலங்கா நேரப்படி 4 மணிக்கு மூடப்பட்டுள்ளன. வாக்குப்பெட்டிகள் யாவும் வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்கு அனுப்பிவைப்பதற்காக சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இன்று முன்னிரவு முதல் ஆரம்பமாகவுள்ள வாக்கு எண்ணும் நடவடிக்கை பின்னிரவளவில் நிறைவு பெறும் என்றும் சிறிலங்கா நேரப்படி நாளை அதிகாலையளவில் தேர்தல் முடிவுகள் தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கொழும்பு வடக்குப் பகுதியில் இதுவரையில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என தேர்தலை கண்காணிப்பதற்கான பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. மக்களும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர். வழமையைவிட மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
0 Response to "ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நிலவரங்கள் : யாழில் 15 விழுக்காடு, நாடு தழுவிய ரீதியாக 70வீத வாக்கு பதிவாகியுள்ளது"
แสดงความคิดเห็น