செய்தியறிக்கை
டோனி பிளேர் |
இராக் யுத்தம் தொடர்பான விசாரணையில் டோனி பிளேர் சாட்சியம்
இராக் யுத்தம் தொடர்பான விசாரணையில் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் சாட்சியம் வழங்கியுள்ளார்.
இராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன் தொடரும் ஒரு அச்சுறுத்தலாக மாறிவந்தார். ஆதலால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரிட்டனும் அமெரிக்காவும் தயாராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று டோனி பிளேர் கூறியுள்ளார்.
சதாம் உசைன் தொடர்பான பிரிட்டனின் நிலைப்பாடு, 11 செப்டம்பர் 2001 அன்று அமெரிக்கா மீது அல்கைதா தாக்குதல் நடத்தியதை அடுத்து பெரிதும் மாறிவிட்டிருந்தது என பிளேர் குறிப்பிட்டார்.
போக்கிரி நாடுகள் பேரழிவு ஆயுதங்களை உருவாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. இல்லாவிட்டால் இவ்வகையான ஆயுதங்கள் பயங்கரவாதக் குழுக்களின் கைகளில் சென்று சேர்ந்துவிடும் என்று அவர் குறிப்பிட்டார்.
"இரானில் எதிர்க்கட்சி ஆர்வலர்கள் பலருக்கு மரண தண்டனையளிக்க வேண்டும்"- அதிகாரம் மிக்க மதகுரு அயதுல்லா
எதிரணி ஆர்ப்பாட்டக்காரர் |
இரான் அதிகாரிகள் சென்ற வருடம் காட்டிய பலவீனம்தான் கூடுதல் ஆர்ப்பாட்டங்களுக்கு இடமளித்திருந்தன என்று அயதுல்லா அஹ்மத் ஜன்னதி என்ற அந்த மதகுரு கூறியுள்ளார்.
தெஹ்ரானில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின்போது அவர் இவற்றைத் தெரிவித்திருந்தார்.
இரானின் இஸ்லாமிய அதிகாரக் கட்டமைப்பைக் குலைக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் வியாழக்கிழமை இருவர் தூக்கிலிடப்பட்டனர்.
அமெரிக்காவில் கடந்த வருடத்தின் இறுதிக் காலாண்டில் 5.7 வீத வளர்ச்சி
அமெரிக்க நாணயம் |
இது எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக வளர்ச்சியாகும். தவிர மோசமான பொருளாதார சரிவை எதிர்கொண்டுவந்த அமெரிக்கா அதிலிருந்து வெளிவந்து தொடர்ந்து இரண்டாவது காலாண்டிலும் வளர்ச்சி கண்டுள்ளது என்பதையும் காட்டுகிறது.
அமெரிக்காவில் நுகர்வு அதிகரித்துள்ளதையும் ஏற்றுமதிகள் உயர்ந்துவருவதையும் இது பிரதிபலிக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் பொருளாதாரச் சரிவின்போது மிகவும் குறைந்துபோன பெரிய தொழில்களின் சொத்து மதிப்புகள் திருத்தி மதிப்பிடப்படுவதே இந்த வளர்ச்சிக்குப் பெரும்பங்கு காரணம் என்பதால், இந்த அளவிலான வளர்ச்சி நெடுநாள் நீடிக்காது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கானோர் அஞ்சலி
மஹ்மூத் அல் மஹபு |
இவர் இஸ்ரேலிய உளவாளிகளால் கொல்லப்பட்டதாக ஹமாஸ் குற்றம் சாட்டிவருகிறது.
மஹ்புவின் மரணத்திற்கு அவரது மகன் பழி தீர்ப்பார் என்று ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் காலித் மெஷால் அங்கே குழுமியிருந்தவர்கள் மத்தியில் சூளுரைத்தார்.
துபாயில் வைத்து மஹ்பு கடந்த வாரம் கொல்லப்பட்டதாக ஹமாஸ் குற்றம் சாட்டிவருகிறது.
1980 களில் இரண்டு இஸ்ரேலிய ராணுவத்தினரை கடத்தியதிலும், இஸ்ரேல் மீதான வேறு பல தாக்குதல்களிலும் மஹ்பு முக்கிய பொறுபு வகித்ததாக ஹமாஸ் கூறுகிறது.
இது குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் கருத்து எதனையும் வெளியிடவில்லை.
சரத் பொன்சேகா |
சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் தேடுதல் - 13 பேர் கைது
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் அலுவலகம் அரச படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகாவின் அலுவலகம் அமைந்துள்ள வீதியை மறித்து ஊடகவியலாளர்கள் எவரும் உள்நுழையாதபடி தடுத்த விசேட அதிரடிப் படையினர் அங்கு சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சுமார் நாற்பது அதிகாரிகள் சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் சோதனை நடத்தி 13 பேரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
ஏற்கனவே தமது பாதுகாப்பு ஏற்பாடுகளை நான்கு பொலிசாராக குறைத்துள்ள அரச தரப்பு தற்போது தமது அலுவலகத்தை சோதனையிட்டு கணிணி உள்ளிட்ட உபகரணங்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் தம்முடன் இருந்தவர்களையும் கைது செய்து சென்றுள்ளதாகவும் தமிழோசைக்குத் தெரிவித்தார்.
சரத் பொன்சேகாவின் செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இதுதொடர்பாக இலங்கை அரச அதிகாரி லக்ஷ்மன் ஹுலுகல்லவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, விசாரணை நடவடிக்கைகள் தொடர்வதாக மட்டும் கூறினார். சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் தேடுதல் நடத்தப்பட்டது பற்றியோ, எது குறித்து விசாணை நடத்தப்படுகிறது என்பது பற்றியோ ஹுலுகல்ல உறுதிப்படுத்தவில்லை.
இந்திய இராணுவத் தளபதியின் இராணுவச் செயலர் மீது விசாரணை
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் தீபக் கபூர் |
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் தீபக் கபூர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராணுவத்தில், மூன்று நட்சத்திர அந்தஸ்துடைய உயர் அதிகாரி ஒருவர் இத்தகயை நடவடிக்கையை எதிர்நோக்குவது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த மாதம் 31-ம் தேதி அவர் ஓய்வு பெற உள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராணுவச் செயலர் மீதான குற்றச்சாட்டை அடுத்து, முதலில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ராணுவத் தளபதி உத்தரவிட்டார்.
ஆனால், இரு தினங்களுக்கு முன்பு பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி, அந்த அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கைக்குப் பதிலாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அந்தக் குற்றச்சாட்டில் தொடர்புடைய மற்ற ராணுவ அதிகாரிகள் மீது வேறு வகையான நடவடிக்கை எடுக்கப்படும்போது, ராணுவச் செயலர் அவதேஷ் பிரகாஷுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு என்று அவர் கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது.
அதைத் தொடர்ந்து ராணுவத் தளபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ராணுவத் தளபதியின் உத்தரவை நிராகரித்து, பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிடுவது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் சுக்னா ராணுவ நிலையம் அருகே அமைந்துள்ள நிலத்தை தனியார் ஒருவருக்கு விற்க, ஆட்சேபணையில்லா சான்றிதழ் வழங்க, அவதேஷ் பிரகாஷ், மற்ற நான்கு ராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் எஞ்சியுள்ள அஸ்தி தென்னாபிரிக்காவில்
இலா காந்தி- காந்தியின் பேத்தி |
ஆனால் அப்போது தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கொள்கையை கடைப்பிடித்த அரசாங்கம் ஆட்சியில் இருந்ததால் அந்த அஸ்தியை அந்நாட்டு அரசாங்கம் பெற்றுக் கொள்ளாமையால் அங்குள்ள ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் காந்தியின் அஸ்தி அங்கே கொண்டுசெல்லப்பட்டது.
காந்தி தென் ஆப்ரிக்காவில் 21 ஆண்டுகள் வாழ்ந்ததால் அவரது அஸ்தியின் ஒருபகுதியை அங்கே அனுப்புவதற்கு இந்திய அரசும் ஒப்புக்கொண்டது. அப்படி கொண்டுவரப்பட்ட காந்தியின் அஸ்தி அவர் தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்த அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.
அப்படி வைக்கப் பட்டிருந்தபோது, விலாஸ் மெஹதா என்கிற காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான நண்பர் அந்த அஸ்தியிலிருந்து ஒரு பகுதியை எடுத்து காந்தியின் நினைவாக தம்மிடம் வைத்துக் கொண்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். இறக்கும் தருவாயில் இந்த அஸ்தியை அவர் தமது மருமகளிடம் கொடுத்து அதை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அந்த அஸ்தியை சில ஆண்டுகாலம் வைத்திருந்த அந்த மருமகள் அதனை காந்தி குடும்பத்திடம் கையளித்துள்ளார்.
காந்தியின் அஸ்தியை கண்காட்சியிலோ அல்லது தனிநபர்களிடமோ வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அதை கடலில் கரைப்பது தான் சரி என்றும் முடிவு செய்யப்பட்டு எதிர்வரும் சனிக்கிழமை அஸ்தி கடலில் கரைக்கப்படவுள்ளது.
தென் ஆப்ரிக்க கடற்படையின் வாகனத்தில் அஸ்தியுடன் தாமும் உடன் சென்றுகடலில் கரைக்கவுள்ளதாகவும் இது முழுமையான அரசு மரியாதையுடன் செய்யப்பட இருப்பதாகவும் தென்னாபிரிக்காவிலுள்ள காந்தியின் பேத்தியான இலா காந்தி தமிழோசையிடம் கூறினார்.
இலா காந்தி தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
0 Response to "செய்தியறிக்கை"
แสดงความคิดเห็น