அமரர் சந்திரசேகரனின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றுங்கள் : திருமதி சந்திரசேகரன்

அமரர் பெ.சந்திரசேகரனின் விருப்பத்திற்கேற்ப எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிப்பெறச்செய்வதற்கு மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் செயற்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவி சாந்தினிதேவி சந்திரசேகரன் தெரிவித்தார். தலவாக்கலை கதிரேசன் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவரைத்தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :
"தலைவனை இழந்து விட்ட துயரிலும் கூட, நீங்கள் அனைவரும் காட்டும் ஆர்வமும், துடிப்பும் கட்சியை காப்பற்றவேண்டும் என்ற உணர்வும் என்னை உங்களின் பக்கம் மேலும் பாசம் கொள்ள செய்கின்றது.
உங்களின் தலைவன் மலையக மக்கள் முன்னணி என்ற அமைப்பை ஆரம்பிக்கும் போது அவரது பின்னால் சென்ற உங்களில் பலர் முகம் கொடுத்த துன்பங்களையும், இழப்புகளையும் அவர் என்னிடம் பல முறை கூறியுள்ளார்.
உங்களில் பலர் உயிரை இழந்துள்ளீர்கள், உடல் அவயங்களை இழந்துள்ளீர்கள், - குடும்பங்களை இழந்துள்ளீர்கள் ஆனால் எவருமே நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. எமது மறைந்த தலைவரின் அரசியலுக்கு பின்னால் உங்கள் ஒவ்வொருவரினதும் இதய துடிப்புக்கள் இருந்துள்ளன. அவரது செயற்பாடுகளுக்கு பின்னால் உங்கள் ஒவ்வொருவரினதும் தியாகங்கள் இருந்துள்ளன.
மலையக மக்கள் முன்னணியின் வளர்ச்சியில் பெருந்தோட்டத்துறை பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. தலைவர் அவர்கள் நடத்திய எல்லா போராட்டங்களிலும் நமது பெண்கள் விலைமதிக்க முடியாத பங்களிப்பினை மேற்கொண்டுள்ளார்கள்.
அவரை நீங்கள் நம்பியது போலவே அவர் மக்களை நம்பினார். அவர் குடும்பத்திற்காக செலவிட்ட நேரங்களை விடவும் - அரசியலுக்காக செலவிட்ட நேரங்களே அதிகம். அவர் குடும்பத்தை நேசித்ததைவிடவும் அரசியலையும் கட்சியையும் தான் அதிகம் நேசித்தார்.
அவர் கட்சியை ஆரம்பிக்கும் போது தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆகுவேன் என்றோ, அமைச்சராகுவேன் என்றோ நினைத்து செயல்படவில்லை. எப்போது பொலிஸ் வரும், எப்போது இராணுவம் வரும், எப்போது சிறைசெல்வோம் - எப்போது விடுதலையாவோம் என்ற நிலையில் தான் நீங்களும் இருந்தீர்கள் அவரும் இருந்தார். எமது தலைவர் அவர்கள் ஒவ்வொரு முறையும் சிறை செல்லும் போதும் திரும்பி வருவார் என்று நாங்கள் நினைத்ததேயில்லை. ஆனால் நீங்கள் காட்டிய ஒற்றுமையான எதிர்ப்பு நடவடிக்கை ஊடாகத்தான் அவர் ஒவ்வொரு முறையும் விடுதலையாகி வெளியே வந்தார்.
மலையக மக்கள் முன்னணி தியாகத்தினூடாக வளர்க்கப்பட்ட கட்சி – நீங்கள் அனைவரும் அவரை அண்ணன் என்று அழைக்கும் அளவுக்கு அவர் உங்கள் மீது பாசமுள்ள உறவைத்தான் வைத்திருந்தார். அவரது மரணத்தின் போது மலையகத்தின் சகல பிரதேசங்களிலிருந்தும் வந்த இலட்சோப இலட்ச மக்கள் அடைந்த வேதனையை சகலரும் அறிவார்கள்.
மலையக மக்கள் முன்னணியை காப்பாற்ற வேண்டும் எங்களுடைய செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் - தலைவனின் பணியை தொடரவேண்டும் என்ற உங்களின் எண்ணத்தை புரிந்துக் கொண்ட பின்னர்தான் கட்சி பணிகளில் என்னையும் தொடர்ச்சியாக இணைத்துக் கொள்ளவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.
நீங்கள் காட்டிய தியாகத்தை மதிக்கின்றேன், நீங்கள் காட்டிய பாசத்தை மதிக்கின்றேன், நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை மதிக்கின்றேன். உங்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பினை புரிந்துக் கொள்ளுகின்றேன். மலையக மக்கள் முன்னணி தொடர்ந்தம் உத்வேகத்துடன் செயற்படவேண்டும் என்ற அர்த்தத்தை விளங்கி கொள்கின்றேன். ஆகவேதான் நான் இந்த தலைமை பதவியை ஏற்றுள்ளேன். என் முழு நம்பிக்கையும் நீங்கள் மட்டும்தான்.உங்கள் அனைவரினதும் அசைக்கமுடியாத நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புகனையும் மதிக்கின்றேன். அதனை எனது சக்திக்கேற்ப காப்பாற்றுவேன்.
தலவாக்கலை நகருக்கும் எமது மறைந்த தலைவரின் அரசியலுக்கும் இடையில் மிக நெருங்கிய வரலாறு உள்ளது. அவர் பல போராட்டக் களங்களைக் கண்டது தலவாக்கலை தான். ஓவ்வொரு முறையும் சிறை சென்றதும் கைது செய்யப்பட்டதும் தலவாக்கலையில் வைத்துதான்.
அவரது கல்வி, கட்சி, குடும்பம் அனைத்தும் சங்கமமானது தலவாக்கலையில் தான். ஆகவேதான் உங்கள் அனைவரையும் தலவாக்கலையில் சந்திப்பதில் பெருமை கொள்கின்றேன். இந்த நேரத்தில் உங்கள் அனைவரிடமும் உருக்கமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் ஒரு வேண்டுகோளினை விடுக்கின்றேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது தலைவரின் கொள்கைகளுக்கு தொடர்ந்தும் உயிரூட்டுவோம்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது தலைவர் நேசித்த மலையகத்தை உருவாக்குவோம். ஒரு மாதத்திற்கு முன்னர் உங்கள் அனைவரையும் அட்டனில் சந்தித்த எமது தலைவர் ஐனாதிபதி தேர்தல் சம்பந்தமாக எமது முடிவை அறிவித்தார். நாங்கள் ஏன் ஐனாதிபதியை ஆதரிக்கவேண்டும் என்பதிற்கான விளக்கத்தை கொடுத்தார்.
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்பந்தமாகவும், மலையகத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் அமைப்பது பற்றியும், மலையக தமிழ் இளைஞர்களின் விடுதலை சம்பந்தமாகவும் எமது தலைவர் முன்வைத்த கோரிக்கைகளை ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஸ் ஏற்றுக்கொண்டார்.
ஏற்கனவே மலையக பகுதிக்கு பலகோடி ரூபா செலவில் ஐனாதிபதி அவர்கள் மேற்கொண்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு மேலதிகமாக இன்னும் தொடர்ந்தும் அபிவிருத்தி செய்ய கூடிய நிலை உள்ளது. எனவே எமது தலைவரின் இறுதி முடிவின் படியே நீங்கள் அனைவரும் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஸ அவர்களையே ஆதரிக்கவேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்." எனத்தெரிவித்தார்
0 Response to "அமரர் சந்திரசேகரனின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றுங்கள் : திருமதி சந்திரசேகரன்"
แสดงความคิดเห็น