jkr

சர்வதேசத்துடன் முரண்பட்டு நிற்கும் சிறீலங்காவின் தற்போதைய தலைமையே எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பல வழிகளிலும் நன்மையானது.. –புலிகளின் உலகத் தமிழர் பேரவை

உயிரினும் மேலான எமது தாயக உறவுகளே! உலகத் தமிழர் பேரவையினராகிய நாம் எமது குரலை தாயகத்திலும் ஒலிக்கச் செய்யவேண்டிய அக-புற சூழ்நிலை தவிர்க்க முடியாததாகி விட்டது. இன்று எமது தமிழீழ விடுதலை வேள்வியில் ஓர் அங்கமான ஆயுதபோராட்டம் ஒரு தற்காலிக ஸ்தம்பிதநிலையை அடைந்துள்ளது வெளிப்படையானது. இருப்பினும் எமது தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனத்தால் புலம்பெயர்நாடுகளில் வாழும் உங்கள் இரத்த உறவாகிய நாம் ஓர் கட்டுக்கோப்பான, தடம்புரளாத அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளோம். புலம்பெயர் நாடுகளில் எமது இன்றைய செயற்பாடுகள் சர்வதேச சமூகத்தின் தீவிர கவனத்தை ஈழத் தமிழர்பால் ஈர்த்துள்ளதுடன் எமது ஜனநாயக வழிமுறைகளினூடான நாடுகடந்த தமிழீழ அரசு என்ற அரசியல் தளத்தை கோட்பாட்டளவில் ஏற்கவும் வைத்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசுக்கான புலம்பெயர் எமது உறவுகளின் ஆன்மபலமும் பேராதரவும் மலைப்பையேற்படுத்துமளவிற்கு வியாபித்து பரவி பரிணமித்து நிற்கிறது.

உலகத் தமிழர் பேரவை சிறீலங்கா அரச இராணுவம் எமது இனத்தின் மீது கட்டவிழ்த்து நடாத்தி முடித்த பாரிய போர்க்குற்றங்களை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்தி வருவதையும் அதன் பெறுபேறாக போர்க்குற்ற விசாரணைகளை சிறீலங்கா மீது ஆரம்பிக்க சர்வதேச சமூகம் தயாராகி வருவதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் சிறீலங்கா அரசின் தலைமைத்துவத்தில் மாற்றமேற்படுமானால் வரப்போகும் முதலாளித்துவ ய+.என்.பி. சார்பு அரசிற்கு வர்க்க நலனின் அடிப்படையில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் சார்பாகவே செயற்படும். அப்போது நாடுகடந்த தமிழீழ அரசு, போர்க்குற்ற விசாரணைகள் யாவுமே முடக்கப்படும் ஆபத்தை நாம் முன்கூட்டியே உணர்ந்து செயற்பட வேண்டும்.

தேசியத் தலைவரின் பணிப்பில் தேசியத்தின் பெயரால் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஆளுக்கொரு முடிவெடுத்து குழம்பி நிற்கின்றனர். எப்படியான மாற்றம்? எதனில் மாற்றம்? என்று தெளிவில்லாமல் சம்பந்தர் எந்தவகையில் இனவாத ஜே.வி.பி.யுடனும் தாய்மண்ணில் கொலைவெறி சதுராடிய சரத் பொன்சேகாவுடனும் கூட்டு வைத்தார்? (தேசியத் தலைவரின் கட்டளையையேற்று அன்றைய படைத்தளபதி சரத் பொன்சேகா, பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தாபய ராஜபக்சே மீது தற்கொடை போராளிகளாய் வெடித்துச் சிதறிய அந்த பெண் போராளிகளின் தியாகத்தை நாம் மறந்துவிடத்தான் முடியுமா? மாவீரர்களின் தியாகங்கள் கொச்சைப்படுத்தப்படலாமா?)
எமது தாயக உறவுகளே! சர்வதேசத்திற்கு எதிராக - சர்வதேசத்துடன் முரண்பட்டு நிற்கும் சிறீலங்காவின் தலைமையே எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பல வழிகளிலும் நன்மையானதென்பதை நாம் கவனத்தில் கொள்வோம். அதுவே சர்வதேசத்தின் நகர்வுகள் தொடர்ந்தும் எமக்கே சாதகமாக இருக்கச்செய்யும்.

எல்லாவற்றிற்கும் மேலாக சிறீலங்கா அரசின் தலைவருக்கான தேர்தலில் எமக்கு என்ன அக்கறை? அங்கு ஏற்படும் மாற்றம் எமக்கிடையே இருக்கும் குறைந்தபட்ச ஒற்றுமையையும் சிதறடித்து நாதியற்ற சமூகமாக எங்களை மாற்றிவிடும் என்பதை முன்னெச்சரிக்கையுடன் புரிந்துகொள்வோம்.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
சி. நமசிவாயம்.
தலைவர்
(நிறைவேற்றுக்குழு சார்பாக)
உலகத் தமிழர் பேரவை

gtf-mm

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "சர்வதேசத்துடன் முரண்பட்டு நிற்கும் சிறீலங்காவின் தற்போதைய தலைமையே எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பல வழிகளிலும் நன்மையானது.. –புலிகளின் உலகத் தமிழர் பேரவை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates