யுத்தம் முடியமுன் முடிவடைந்து விட்டதாக கூறி, ஜனாதிபதி விமான ஓடுபாதையை முத்தமிட்டார்: சரத் பொன்சேகா
யுத்தம் முடிவடைவதற்கு முன்னரே யுத்தம் முடிவடைந்து விட்டதாக கூறி ஜனாதிபதி விமான ஓடுபாதையை முத்திட்மிட்டுவிட்டதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்தமது ஜாதகத்தை மஹிந்த ராஜபக்சவே அதிக தடவை பார்த்திருப்பதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தாம் 10 வீத மேலதிக வாக்குகளால் வெற்றிப்பெறப்போவதாக பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எனினும், யாழ்ப்பாணம் உட்பட்ட நாடளாவிய ரீதியில், வாக்கு மோசடிகள் ஏற்படுத்தப்படக்கூடிய ஏதுநிலைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளமை குறித்து அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் இராணுவ அதிகாரிகள் சிலர் இடமாற்றம செய்யப்பட்டமை இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ வாழ்க்கையில் உயரதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றும் பண்புகளே அதிகமாக காணப்படுகின்றன. எனினும் அரசியல் வாழ்க்கையில் அது மாறிக்காணப்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சொல்வதையெல்லாம் இலங்கை மக்கள் நம்புகிறார்களா என்பது கேள்விக்குரியதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ராஜபக்ச ஏற்கனவே இந்த தேர்தலில் தோல்வி ஏற்படப்போகிறது என்ற சந்தேகத்தில் உள்ளார். எனவேதான் அவர், வாக்குப்பெட்டிக் கொள்ளைகளில் ஈடுபட முயற்சிக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ள சரத் பொன்சேகா, நாட்டின் 85 வீத மக்கள் நாளை மறுதினம் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களித்தால் தாம் 55 வீத வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ச 45 வீத வாக்குகளையும் பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பொறுப்பாக இருந்த இராணுவக் கட்டளையதிகாரி தேர்தல் தினத்தன்று பங்களாதேஸுக்கு அனுப்பப்படவுள்ளார்.
அதேநேரம் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் எனக்கூறி கொள்ளுப்பிட்டியில் கைது செய்யப்பட்ட அதிகாரி ஒருவர், இவர் பாதுகாப்பு செயலாளாரின் வலதுகையாக செயற்படுபவர். இந்தநிலையில் கிளிநொச்சியில் பொறுப்பாக உள்ள இவரை யாழ்ப்பாணத்தின் கடமைகளையும் பொறுப்பேற்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
வடமராட்சிக்கு பொறுப்பாகவிருக்கும் படையதிகாரி, கொழும்புக்கு உடனடியாக மாற்றம் பெற்றுள்ளார்.
இவையாவும் அரசாங்கம் தேர்தலில் வாக்குமோசடிகளில் ஈடுபடப்போவதை சுட்டி நிற்பதாக சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
தாம் ஒரு நியாயமான அரசியல்வாதியாக நடந்துக்கொள்ள முனைவதாக குறிப்பிட்டுள்ள அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாம் பின்னிற்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். தாம் ஆட்சிக்கு வந்ததும் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அங்கு இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றச்சாட்டுக்கள் என்பவை தொடர்பில் உரிய விளக்கங்களை வழங்கப்போவதாக தெரிவித்துள்ளார் சரத்பொன்சேகா.
மஹிந்த ராஜபக்சவுக்கு எவ்வாறு யுத்தம் மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியாது. அவர் தமது ( மம பப்புவ தெனவா) இதயத்தை தருவதாக கூறினாலும் போர் எவ்வாறு நடத்தப்பட்டது என்பது தெரிந்திருந்தால், போர் குற்றச்சாட்;டுகளுக்கு உரிய முறையில் விளக்கமளித்து இலங்கையின் பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்கியிருக்கலாம். ஆனால் அதனை அவர் செய்யவில்லை. இந்தநிலையில் அதனை உரியமுறையில் கையாண்டு இலங்கைக்கு கிடைக்கவேண்டிய ஜிஎஸ்பி பிளஸ் ஆடைக்கோட்டா சலுகையை பெற்றுக்கொடுக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் வாய்மூலமான சில விடயங்கள் ஏற்றுக்கொள்ள்ப்பட்டுள்ளன. ஊழல்களை ஒழித்தல், சம உரிமை, இனங்களுக்கு இடையில் இணக்கத்தை ஏற்படுத்துதல், போன்ற விடயங்களில் தமக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இணக்கங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் மஹிந்த ராஜபக்ச, இதனை பயங்கரமானதாக காட்டி, இனங்களுக்கு இடையிலான உறவை பிரச்சினைக்கு உள்ளாக்கப்பார்க்கிறார் என சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
தமக்கு வழங்கப்பட்டுள்ள தபால் மூல வாக்களிப்பின் போது படையினர் மற்றும் பொலிஸ் தரப்பில் இருந்து 80 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அதில் மின்னேரிய முகாமில் அளிக்கப்பட்ட 195 வாக்குகளில் தமக்கு 192 வாக்குகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 51 வது படைப்பிரிவில் அளிக்கப்பட்ட 82 வாக்குகளில் தமக்கு 72 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் முடிவடைவதற்கு இரண்டு மூன்று இருக்கும் வேளையிலேயே இலங்கைக்கு ஜோர்தானில் இருந்து வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, களத்தில் இருந்த கட்டளைத் தளபதி சவேந்திர சில்வாவை தொடர்புகொண்டு யுத்தம் முடிவடைந்து விட்டதா எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர், இன்னும் இரண்டு நாட்கள் எடுக்கும் எனப் பதிலளித்துள்ளார்.
இந்தநிலையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சயுத்தம் முடிவடைந்து நாட்டை மீட்டுவிட்டதாக, விமான ஓடு பாதையை முத்தமிட்டதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
தமது ஜாதக நிலைமைகள் நன்றாக இருப்பதாக கூறியுள்ள சரத் பொன்சேகா, தம்மை விட தமது ஜாதகத்தை மஹிந்த ராஜபக்சவே அதிகமாக பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
0 Response to "யுத்தம் முடியமுன் முடிவடைந்து விட்டதாக கூறி, ஜனாதிபதி விமான ஓடுபாதையை முத்தமிட்டார்: சரத் பொன்சேகா"
แสดงความคิดเห็น