jkr

மேல், மலையக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ் மக்களுக்கு நன்றி: மனோ கணேசன்


நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலிலே, இந்நாட்டின் மேற்கு, மலையக, வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் வாழும் தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்துள்ளார்கள். தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதில் நமது கட்சியும், நம்முடன் இணைந்து மலையகத்திலும், வடக்கிலும், கிழக்கிலும் செயற்பட்ட கட்சிகளும், மாணவர் மற்றும் சமூக அமைப்புகளும் பாரிய பங்களிப்புகளை வழங்கியுள்ளன என மனோ கணேசன் எம்.பி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை எமது கூட்டு செயற்பாடு பெற்றுக்கொடுத்தற்கு இணையாக, பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளை எமது கூட்டணிக்கு பெற்றுக்கொடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கும்;, ஜேவிபிக்கும், ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் முடியாமல் போனது ஏன் என நாம் சிந்திக்கவேண்டும்.

இதன் பின்னணி தேர்தல் முறைகேடுகளா? என்ற கேள்விக்கு விடைதேட வேண்டும். எனவே தமிழ் பேசும் மக்கள் சரத் பொன்சேகாவின் தோல்விக்காக ஒப்பாரி வைக்க முடியாது. ஏனென்றால் நாம் அடைந்துள்ளது தோல்வியல்ல, வெற்றியேயாகும். தமிழ் மக்களின் வாக்குகளை ஒருமுகப்படுத்தி எமது அடுத்தகட்ட நகர்விற்கு நாங்கள் தயாராகவேண்டும். இதுதொடர்பில் ஆராய்வதற்காக நமது கட்சியின் மத்தியக்குழு பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திரத் தினத்தன்று கொழும்பிலே கூடி முடிவெடுக்கும்.

ஆட்சி மாற்றம் என்ற கருத்தை நாடெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலே முன்னெடுப்பதில் எமது கட்சி முதலிடம் வகித்தது. தேசிய ரீதியாக இந்த கருத்தை தமிழ் மக்கள் மத்தியிலே நாங்கள் தமிழ் மொழியிலே கொண்டு சென்றோம். அதேவேளையில் சிங்கள மக்கள் மத்தியிலே தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையை சிங்கள மொழியிலே கொண்டுசென்றோம்.

இந்த அடிப்படையில் எமது கட்சி வடக்கிற்கும், தெற்கிற்கும் பாலமாக செயற்பட்டது. தமிழ் மக்களின் வாக்குகளை மாத்திரம் வைத்துக்கொண்டு ஒருபோதும் வெற்றிபெற முடியாது. தமிழ் மக்களின் வாக்குகள் பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளுடன் ஒன்று சேரும்போதே இந்த மாற்றத்தை ஏற்படுத்திட முடியும். இதை நாங்கள் தெளிவாக புரிந்துகொண்டு செயற்பட்டோம்.

சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுத்தருவது, ஐக்கிய தேசிய கட்சி, ஜேவிபி மற்றும் வேட்பாளர் சரத் பொன்சேகா ஆகியோரது பொறுப்புகளாகும். அதேபோல் தென்னிலங்கையில் சிங்கள மக்கள் அளிக்கும் வாக்குகளை பாதுகாப்பதும், தேர்தலிலே முறைகேடுகள் நடக்;காவண்ணம் அவதானத்துடன் எச்சரிக்கையாய் இருப்பதும் இந்த இரண்டு பெரும்பான்மை கட்சிகளின் பொறுப்பாகும். இந்த பொறுப்புகளை இந்த இரண்டு கட்சிகளும் சரிவர செய்துள்ளனவா என்பது பற்றிய விமர்சனம் இன்று எழுந்துள்ளது. இதற்கான விடைகளை சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் வேண்டி நிற்கின்றார்கள்.

கொழும்பு மாநகரத்தில் ஐந்து தொகுதிகளிலும், தெஹிவளை தொகுதியிலும் எமது கட்சியின் பொறுப்பாளர்கள் பிரசார பணிகளில் ஈடுபட்டார்கள். தமிழ் மக்கள் எமது கோரிக்கையை அடுத்து ஆர்வத்துடன் வாக்களித்துள்ளார்கள். இதனாலே இந்த ஆறு தொகுதிகளிலும் வெற்றி பெற முடிந்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் போது செயற்படாத எந்தவொரு கட்சியும், அரசியல்வாதிகளும் எமது மக்களின் வாக்களிப்பிற்கு உரிமைக்கோர முடியாது. அதேபோல் கம்பஹா மாவட்டத்தின் வத்தளை, நீர்கொழும்பு தொகுதிகளிலும், களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, மத்துகமை தொகுதிகளிலும் எமது பொறுப்பாளர்கள் பணியாற்றியதன் காரணமாக தமிழ் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளார்கள்.

அதேவேளையில் மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தில் எமது கட்சியும், தொழிலாளர் தேசிய சங்கமும், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியும் கூட்டாக செயற்பட்டுள்ளன. இந்த செயற்பாட்டின் காரணமாக நுவரெலியா மாவட்டத்தை வெற்றிக்கொள்ள முடிந்துள்ளது. அதுபோலவே கண்டி, இரத்தினபுரி, கேகாலை, பதுளை, குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் எமது பொறுப்பாளர்கள் பணியாற்றியுள்ளார்கள். இந்த மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளார்கள்.

வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், வன்னி ஆகிய மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் பால்வேறு இடறுபாடுகளுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளார்கள். வன்னி மாவட்டத்தின் மன்னார், வவுனியா ஆகிய தொகுதிகளிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு, மட்டக்களப்பு, கல்குடா தொகுதிகளிலும் அம்பாறை மாவட்டத்திலும் எமது கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் தேர்தல் பணியாற்றினார்கள்.

அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அரசாங்கத்தின் சார்ப்பிலே தமிழ் மக்களின் வாக்குகளை கோரிய அனைத்து மலையக அமைச்சர்களும், வடக்கு, கிழக்கு அமைச்சர்களும் தங்களது மாவட்டங்களிலே படுதோல்வியடைந்துள்ளார்கள். இந்த உண்மையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகத் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

இத்தகைய தமிழ் தலைவர்களுக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடையாது என்பதை இன்று தமிழ் மக்கள் அறிவித்து விட்டார்கள். இந்நிலையில் அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலையடுத்து பாராளுமன்ற தேர்தலிற்கு தயாராவதாக இன்று அறிவித்துள்ளது.

. எனவே நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காகவும், எமது கட்சியின் அடுத்த கட்ட நகர்வை தீர்மானிப்பதற்காகவும் நாடெங்கிலும் இருந்து பேராளர்கள் கலந்துகொள்ளும் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் பெப்ரவரி 4ஆம் திகதி கொழும்பிலே கூடுகின்றது. "எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "மேல், மலையக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ் மக்களுக்கு நன்றி: மனோ கணேசன்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates