jkr

செய்தியறிக்கை


தேர்தல் பிரச்சாரம்
தேர்தல் பிரச்சாரம்

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்கள் ஒத்திவைப்பு

ஆப்கானிஸ்தானில் மே மாதம் நடைபெறவிருந்த நாடாளுமன்ற தேர்தலை செப்டம்பர் மாதத்திற்கு அந்நாட்டின் சுயாதீனமான தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது.

நிதிப் பற்றாக்குறை, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காரணங்களால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமீத் கர்சாய் வென்ற அதிபர் தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதை தொடர்ந்து தற்போதைய தேர்தல் முறைகள் சீரமைக்கப்படும் வரையில் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.

அதிபர் தேர்தலில் இருந்து ஏராளமான பாடங்கள் கற்க வேண்டியிருப்பதாக ஐ.நா சிறப்புத் தூதர் கேய் எய்டி குறிப்பிட்டிருந்தார். அத்தோடு நிதி பற்றாக்குறை இருப்பதாக தான் நம்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இராக்கில் குண்டுகளை கண்டுபிடிக்கும் கருவி இயங்கவில்லை என குற்றச்சாட்டு

இராக்கில் சோதனைச்சாவடி ஒன்று
இராக்கில் சோதனைச்சாவடி ஒன்று

இராக்கின் தலைநகர் பாக்தாத் மற்றும் இதர பகுதிகளில் சோதனைசாவடிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் குண்டுகளை கண்டுபிடிக்கும் கருவியின் செயற்திறன் குறித்து பிபிசி எழுப்பிய சந்தேகத்தை அடுத்து பல்வேறு விசாரணைகள் ஆரம்பித்துள்ளன.

இந்த சோதனை செய்ய பயன்படும் கருவியை ஏற்றுமதி செய்வதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த கருவி லாயகற்றது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கருவியை தயாரிக்கும் பிரிட்டிஷ் நிறுவனத்தின் இயக்குநர் மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த கருவி இயங்காத காரணத்தினால் பல்வேறு குண்டு நிரப்பிய வாகனங்கள் சோதனைச்சாவடியை தாண்டி சென்றன என்றும், இதனால் பலர் கொல்லப்பட்டனர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


வசிரிஸ்தான் பழங்குடியின மக்கள் ஆயுததாரிகளால் கொலை - பாகிஸ்தான்

தலிபான்கள்
தலிபான்கள்

பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தானில் அமெரிக்காவுக்கு வேவு பார்த்ததாக குற்றம் சுமத்தி ஏராளமான பழங்குடியின மக்களை ஆயுததாரிகள் கொன்றுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிரன்ஷா நகரத்தின் தென்பகுதியில் இருக்கின்ற கிராமத்தின் சாலைப்புறத்தில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த உடல்கள் வீசப்பட்டு கிடந்ததாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். அவர்கள் அருகே உளவாளிகள் என்று குற்றம் சுமத்தும் காகிதங்கள் கிடந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

தெற்கு வசிரிஸ்தானில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தான் இராணுவம் நடத்தியிருந்த இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து ஏராளமான தலிபான்கள் தங்களுடைய முகாம்களை விட்டு வடக்கு பகுதிக்கு இடம்பெயர்ந்துவிட்டனர்.

இந்த பகுதியில் அமெரிக்காவும் ஆளில்லா விமானத்தின் தாக்குதலை அதிகப்படுத்தியிருந்தது.


டெட்ராய்ட் தாக்குதலை பெருமைப்படுத்தி ஒசாமா குரல் பதிவு

ஒசாமா பின் லேடன்
ஒசாமா பின் லேடன்

அல்குவைதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடனிடமிருந்து வந்ததாகக் கூறப்படும் குரல் பதிவொன்றில், கடந்தமாதத்தில் அமெரிக்க விமானமொன்றில் நடத்த முயற்சிக்கப்பட்டு தோல்வியடைந்த தாக்குதல் முயற்சியை பெருமை படுத்தி அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அல்ஜசீரா தொலைக்காட்சியில் ஒலிபரப்பான அந்தக் குரல்பதிவு மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது.

இந்த தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபரான உமர் பாருக் அப்துல் முத்தாலப் என்ற நைஜீரிய நாட்டு இளைஞர் முன்னர் யெமனுக்கு சென்றிருந்த போது அல்குவைதா தலைவர்களை சந்தித்துள்ளதாக யெமன் நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.

செய்தியரங்கம்
இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க
இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க

'சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு' - சந்திரிகா குமாரதுங்க

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவியான சந்திரிக்கா குமாரதுங்க, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறைகள் மற்றும் ஊழல் மோசடிகளால் கவலையடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதனை மாற்றியமைப்பதற்காக தனது ஆதரவாளர்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியாக 11 வருடகாலம் ஆட்சி செய்த சந்திரிகாவின் பகிரங்கமான இந்த அறிவிப்பு சரத் பொன்சேகாவுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உருவாக்கிய சந்திரிகாவின் தந்தையும், சந்திரிகாவின் தயாராரும் இலங்கையின் பிரதமர்களாக ஆட்சி நடத்தியவர்கள்.

இந்த பின்னணியில் சந்திரிகாவின் குடும்பத்துக்கு இலங்கையி்ல் பெரும் அரசியல் செல்வாக்கு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.


இலங்கை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களின் பிரச்சார செலவு 450 மில்லியன் ரூபாய் - ஊழல் கண்காணிப்பு அமைப்பு

ஜனவரி 26 அன்று தேர்தல்
ஜனவரி 26 அன்று தேர்தல்

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் பிரசாரப் பணிகளுக்காக மட்டும் 450 மில்லியன் ரூபாய் பணத்தை செலவிட்டுள்ளதாக இலங்கையில் ஊழல் மோசடிகள் குறித்து கண்காணித்து வரும் அமைப்பொன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

ட்ரான்பேரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ‘பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்கும் நிகழ்ச்சித் திட்டம் அமைப்பு, இரண்டு பிரதான வேட்பாளர்களுமே தமது இத்தகைய பெரும் செலவீனங்களுக்காக பணம் பெற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகள் குறித்து வெளிப்படுத்தவில்லையென சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் பிரசாரப்பணிகளுக்காக சுமார் 80 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்காக 378 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பு, இந்தளவு பணம் எங்கிருந்து பெற்றக்கொள்ளப்பட்டது என மக்கள் நிதி மீதான அக்கறையை மேற்கோள்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.


டெல்லியில் ஜெயலலிதா

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா
அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வைரவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா ஞாயிற்றுகிழமை பிற்பகல் டெல்லி வந்தடைந்தார்.

தேர்தல் ஆணைய வைரவிழாவை நாளை திங்கட்கிழமை குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீல் தொடங்கி வைக்கிறார். அதில் கலந்துகொள்ளுமாறு பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

தேர்தல் ஆணைய விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்கிறார். அப்போது ஜெயலலிதா அவரைச் சந்திக்கக்கூடும் என்று ஊகங்கள் வெளியாகி வருகின்றன. இந் நிலையில், இந்தப் பயணத்தின்போது அரசியல் சந்திப்புக்கள் இருக்குமா என்றும், தமிழக அரசியல் சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டா என்றும் செய்தியாளர்கள் கேட்டபோது, இப்போதைக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை என்றும், திங்கட்கிழமை பேசுவதாகவும் ஜெயலலிதா தெரிவித்தார்.

திமுக சார்பில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தேர்தல் ஆணைய விழாவில் கலந்துகொள்கிறார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates