jkr

செய்தியறிக்கை


பாதிக்கப்பட்ட மக்கள்
பாதிக்கப்பட்ட மக்கள்

மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்துவிட்டன - ஹெய்ட்டி அரசு

ஹெய்ட்டியில் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் யாவும் முடிவடைந்துவிட்டதாக அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

சுமார் இரண்டு லட்சம் மக்களின் உயிர்களை காவு கொண்ட ஹெய்ட்டி பூகம்பம் நிகழ்ந்து 11 நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிபுணர்களின் கருத்துக்களைக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.நா பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

கடந்த மூன்று தினங்களில் எவரும் மீட்கப்பட்டமைக்கான அறிகுறிகள் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து இதுவரை 132 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளதாக ஐ.நா பேச்சாளர் தெரிவித்தார்.

இறுதியாக இருவர் வெள்ளிகிழமையன்று மீட்கப்பட்டனர்.

அநேகமான தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் ஹெய்ட்டியிலிருந்து வெளியேறிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.


ஹெய்ட்டி மக்களுக்கான பிபிசி வானொலியின் புதிய சேவை

ஹெய்ட்டி மக்களுக்கு அறிவிப்பு
ஹெய்ட்டி மக்களுக்கு அறிவிப்பு

ஹெய்ட்டியின் முக்கிய மொழிகளில் ஒன்றான கிரியோலில் பிபிசி வானொலி புதிய சேவையை ஆரம்பித்துள்ளது.

கனெக்ஷ்ன் ஹெய்ட்டி என்ற பெயரில் தினமும் சுமார் 20 நிமிடங்களுக்கு ஒலிபரப்பாகும் இந்த சேவையில் நிலநடுக்கத்தில் சிக்கி தப்பியவர்களுக்கு அடிப்படை வசதிகள் தொடர்பான மிக சமீபத்திய தகவல்கள் அறிவிக்கப்படும்.

குறிப்பாக உணவு, சுகாதாரமான குடிநீர், மருத்துவ மற்றும் கூடார வசதிகள் எங்கு கிடைக்கும் என்பது தொடர்பான தகவல்கள் ஒலிபரப்பப்படும்.


போனஸ்களை ஒத்திவைப்பதாக பார்கிளேஸ் வங்கி அறிவிப்பு

பார்கிளேஸ் வங்கி
பார்கிளேஸ் வங்கி

பிரிட்டனின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியான பார்கிளேஸ் தன்னுடைய சர்வதேச முதலீட்டு பிரிவில் பணிபுரியும் 20,000 க்கும் அதிகமான பணியாளர்களுக்கு போனஸ் தொகை கொடுப்பதை ஒத்தி வைத்துள்ளது. கிட்டதட்ட மூன்றாண்டு காலத்திற்கு ஒத்தி வைக்கும் இந்த திட்டம் மூத்த நிர்வாகிகளுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

கடந்தாண்டு சிக்கலில் மாட்டி கொண்ட பல்வேறு நிதி நிறுவனங்கள் பொது மக்களின் பணத்தால் மீட்கப்பட்டன. இந்த நிலையில் சமீபத்தில் நிதி நிறுவனங்கள் மீண்டும் தன்னுடைய பணியாளர்களுக்கு மிக அதிக அளவில் போனஸ் தொகையை கொடுக்க ஆரம்பித்தன. இதனால் பிரிட்டன் மற்றும் அமெரிக்க மக்களிடையே முணுமுணுப்பு ஏற்பட்டது.

இத்தகைய நிலையில் இவ்வாறு அறிவித்துள்ள பார்கிளேஸ் நிறுவனம், தான் பிரிட்டன் மற்றும் ஜி20 நாடுகள் குறிப்பிட்ட சட்டத்திட்டங்களை விட கட்டுப்பாடாக இருப்பதாக கூறியுள்ளது.


நைஜீரியாவில் கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மோதல்

நைஜீரிய வரைப்படம்
நைஜீரிய வரைப்படம்

மத்திய நைஜீரியாவி்ல் ஜோஸ் நகரில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களில் கொல்லப்பட்ட நூற்றுக்கும் அதிகமானவர்களின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

ஜோஸ் நகரிலிருந்து முப்பது கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள கரு கரமா என்ற கிராமத்தில் பாழடைந்த கிணறுகள் மற்றும் பற்றைக்காடுகளிலிருந்து பலரது சடலங்களை மீட்புப்பணியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

சில சடலங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றன.

தொடரும் வன்முறைகளை நிறுத்த அரசியல் தீர்வுத்திட்டமொன்று அவசியம் என்று அங்குள்ள கத்தோலிக்க பேராயர் பி.பி.சியிடம் தெரிவித்துள்ளார்.

செய்தியரங்கம்
 தேர்தல் கோலம்
தேர்தல் கோலம்

இலங்கை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில் தீவிர பிரச்சாரம்

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார பணிகள் யாவும் இலங்கை சனிக்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்ற நிலையில் இரண்டு பிரதான வேட்பாளர்களும் தமது இறுதிக் கட்ட பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொண்டனர்.

இரண்டு பிரதான வேட்பாளர்களின் ஆதரவுப் பிரசாரங்களும் எதிரணியினர் மீது பரஸ்பரம் குற்றஞ்சாட்டும் விதமாகவும் வெற்றி தமக்கே என முழங்கும் விதமாகவும் அமைந்திருந்ததைக் காணமுடிந்தது.

இலங்கையின் தெற்கே ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் திஸ்ஸ மஹாராம என்ற இடத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பேசினார்.

மகிந்த ராஜபக்ஸவின் இறுதி பிரசாரக்கூட்டம் என்பதால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் பெருமளவில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் அதிகாரம் பெற்றுள்ள திஸ்ஸ மஹாராம பிரதேச சபைக்குட்பட்ட மைதானமொன்றில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய மகிந்த ராஜபக்ஸ மக்கள் விடுதலை முன்னணியையும் கடுமையாக சாடிப் பேசியிருந்தார்.

இதற்கிடையே கொழும்பில் சனிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய எதிரணிகளின் பிரதான வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தாம் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெறவுள்ளதாக புள்ளிவிபரம் ஒன்றை மேற்கோள் காட்டி கருத்து வெளியிட்டார்.

தேர்தல் தொடர்பாக கிண்ணியா முஸ்லிம் மக்கள் மற்றும் தென்னிலங்கை சிங்கள மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


ஜனாதிபதி தேர்தல் - தமிழகத்தில் இருக்கும் இலங்கை தமிழர்களின் பார்வை

இரு வேட்பாளர்களும்
இரு வேட்பாளர்களும்

இலங்கையின் கடந்த கால போர்ச்சூழலால் இடம்பெயர்ந்து தமிழகத்தில் அகதிகளாக பல வருடங்கள் வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்கள் மத்தியிலும் இம்முறை ஜனாதிபதி தேர்தல் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த வரும் ஜனாதிபதி யார்? தமது உரிமைகளுக்கு இலங்கை அரசால் வைக்கப்படும் தீர்வு திட்டம் என்ன என்பது போன்ற கேள்விகள் இலங்கை தமிழ் அகதிகள் மத்தியில் நிலவுகின்றன.

இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி தேர்தல் பற்றி இவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வாங்க முயற்சித்தவர்களுக்கு சிறை

ஆயுதங்கள்
ஆயுதங்கள்

விடுதலைப்புலிகளுக்காக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் இதர இராணுவ உபகரணங்களை வாங்க முயற்சித்தமைக்காக இருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் மிக நீண்டகால சிறைத்தண்டனைகளை விதித்துள்ளது. சதாஜன் சரசந்திரன் மற்றும் யோகராசா நடராசா ஆகிய இருவருக்கும் முறையே 26 மற்றும் 14 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு ஆயுதங்கள் வாங்க முயற்சித்த போது அமெரிக்காவின் எஃப் பி ஐ புலனாய்வு அமைப்பு வைத்த பொறியில் நான்கு பேர் சிக்கி கைதானார்கள்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates