ராஜபக்ஷ வெற்றி
தேர்தல் முடிவை ஏற்க மறுக்கிறார் சரத் ஃபொன்சேகா |
இலங்கை ஜனாதிபதி தேர்தல்: முடிவுகளை ஏற்க மறுக்கிறார் ஃபொன்சேகா
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய அதிபர் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பதிவான வாக்குகளில் 58 சதவீதமானவை ராஜபக்ஷவுக்கு விழுந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட முக்கிய போட்டியாளரான ஜெனரல் சரத் ஃபொன்சேகா 40 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
ஆனால் இந்த முடிவுகளை தான் ஏற்கவில்லை என்றும், இந்த முடிவுகள் ரத்துசெய்யப்படும் நோக்கில் சட்ட நடவடிக்கைகளைத் தான் தொடுக்கவிருப்பதாகவும் தேர்தல் ஆணையத்துக்கு தான் எழுதிய கடிதத்தில் சரத் ஃபொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரச ஊடகங்கள் போன்றவற்றை தனக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யப் பயன்படுத்தியது, அரச நிதிகளை தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்தியது, இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் வாக்களிக்க விடாமல் தடுத்தது போன்ற விதிமீறல்களை செய்ததாக மஹிந்த ராஜபக்ஷ மீது சரத் ஃபொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.
சிறுபான்மையினர் வாக்குகள்
தீவிர பாதுகாப்புக்கு இடையில் வவுனியாவில் வாக்களிக்கச் செல்லும் தமிழ் பெண்கள் |
யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திகமதுள்ள, திருகோணமலை போன்ற வடக்கு கிழக்கு தேர்தல் அலகுகளிலும், சிறுபான்மை மக்கள் அதிகம் வாழும் நுவரேலியா மத்திய மாகாண தேர்தல் அலகிலும் மட்டுமே மஹிந்த ராஜபக்ஷவை விட கூடுதலான வாக்குகளை சரத் ஃபொன்சேகா பெற்றுள்ளார்.
நாட்டின் ஏனைய தேர்தல் மாவட்டங்கள் அனைத்திலும் மஹிந்த ராஜபக்ஷ கூடுதலான வாக்குகளைப் பெற்றுள்ளது அவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வழிவகுத்துள்ளது.
தலைவர்கள் கருத்து
தனது தேர்தல் வெற்றி குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, போருக்குப் பின் நடந்த முதல் தேர்தலில் மக்கள் தன்னைத் தேர்ந்தெடுத்து, நாட்டை மீள் நிர்மாணிக்க தனக்கு ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளனர் என்று கூறினார்.
இலங்கை மக்கள் அரசியல் ரீதியாக முதிர்ச்சி பெற்றுள்ளனர் என்பதையும் இந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் முடிவுகளை எதிர்த்து முறையிடப்போவதாகக் கூறியுள்ள எதிர்க்கட்சி வேட்பாளர் ஜெனரல் சரத் ஃபொன்சேகா, இலங்கை மக்களின் எண்ணங்கள் ஈடேறவில்லை என்பதால் தான் வருத்தம் அடைந்துள்ளதாகக் கூறினார்.
அரசாங்கத்தினர் தனக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தர் |
விடுதியின் வெளியே இராணுவத்தினர் |
உயிரச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன்: சரத் ஃபொன்சேகா
தனக்கு உயிரச்சம் இருப்பதாகவும், இதனால் நாட்டை விட்டு வெளியேறப் போவதாகவும் கொழும்பு விடுதியில் இருந்து வீடு திரும்பிய எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
"இலங்கையில் சட்டம் ஒழுங்கு கிடையாது. நான் விமான நிலையத்துக்கு செல்வதும் தடுக்கப்பட்டுள்ளது. நாட்டை விட்டு செல்ல எனக்கு அனுமதி அளிக்கப்படக் கூடாது என்று அவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு கூறியுள்ளனர். இது பற்றி ஏதும் சொல்ல முடியாது." என பிபிசியின் சந்தன கீர்த்தி பண்டாராவுக்கு பிரத்யேக செவ்வியளித்த சரத் ஃபொன்சேகா கூறினார்.
நான் மக்களை மறக்க மாட்டேன். ஆனால் நான் உயிர் வாழ சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. எந்த நாட்டுக்குப் போகப் போகிறேன் என்பது பற்றி நான் கூற முடியாது. மக்களுடன் தொடர்பில் இருப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தேர்தலில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அவர் பிபிசிடம் தெரிவித்தார்.
விடுதியில் முற்றுகை
முன்னதாக கொழும்பு நகரில் ஃபொன்சேகா மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கியிருந்த விடுதியைச் சுற்றிலும், ஆயுதம் தாங்கிய ராணுவத்தினர் சுமார் 100 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர்.
ஆனால், இதுபற்றி ராணுவப் பேச்சாளர் உதய நாணயகார கூறும்போது, ஃபொன்சேகாவைக் கைதுசெய்யும் எண்ணம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
இராணுவப் பணியை பாதியில் விட்டுச் சென்றவர்கள் உள்பட சுமார் 400 பேருடன் சரத் ஃபொன்சேகா அந்த விடுதியில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்திருப்பதாகவும், அவர்கள் சரணடைய வேண்டும் என்று தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் உதய நாணயகார தெரிவித்தார்.
இருந்தபோதும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள், ஃபொன்சேகா கைதுசெய்யப்படலாம் என்று அச்சம் வெளியிட்டிருந்தனர்.
விடுதிக்கு வெளியே இராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்ததால், அங்கு பதற்றம் நிலவியது.
விடுதிக்கு வெளியிலிருக்கும் இராணுவத்தினர் திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் இப்படியான பதற்றம் மற்றும் இழுபறிக்குப் பின்னர் சரத் ஃபொன்சேகா விடுதியிலிருந்து வெளியேறி வீடு திரும்பியுள்ளார்.
0 Response to "ராஜபக்ஷ வெற்றி"
แสดงความคิดเห็น