முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடன் ஜெனரல் சரத் பொன்சேகா சந்தித்துப் பேச்சு ,ஆதரவு வழங்கவும் இணக்கம்; பண்டாரநாயக்காவின் சமாதிக்கும் அஞ்சலி
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவியுமான திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவை எதிரணி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா நேற்றுக்காலை சந்தித்து உரையாடினார். இச்சந்திப்பில் தனது ஆதரவை ஜெனரல் பொன்சேகாவுக்கு வழங்குவதாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மேலும், இச்சந்திப்பின்போது நான்கு வருடகால மௌனத்துக்குப் பின்னர் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் வன்முறைகள், தும்புறுத்தல்கள் மற்றும் ஊழல்கள் காரணமாக தான் மிகுந்த கவலை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா நேற்றுக்காலை கொரகொல்லைக்குச் சென்று அங்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார்.
இதற்கு முன்னதாக ஜெனரல் சரத் பொன்சேகா, கொரகொல்லையிலுள்ள முன்னாள் பிரதமரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகருமான அமரர் எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதனையடுத்து ஊடகவியலாளர் மத்தியில் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா நான்கு வருடகால மௌனத்துக்குப் பின்னரே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். வன்முறைகள், துன்புறுத்தல்கள் மற்றும் ஊழல்களால் நான் மிகுந்த கவலை கொண்டுள்ளளேன். எனது ஆதரவாளர்களை எதிரணி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு நான் கோருகிறேன் என்றார்.
இச்சந்திப்பில் ஜெனரல் பொன்சேகாவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் தலைவரும் எம்.பி.யுமான மங்களசமரவீர உள்ளிட்ட எதிரணி முக்கியஸ்தர் பலர் கலந்துகொண்டு முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்கவை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடியமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேகா கொரகொல்லையிலுள்ள பண்டாரநாயக்காவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வைப் படம் பிடிக்கும் பொருட்டு பஸ்ஸில் சென்ற ஊடகவியலாளர்கள் கடவத்தையில் வழி மறிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் கடவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 Response to "முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடன் ஜெனரல் சரத் பொன்சேகா சந்தித்துப் பேச்சு ,ஆதரவு வழங்கவும் இணக்கம்; பண்டாரநாயக்காவின் சமாதிக்கும் அஞ்சலி"
แสดงความคิดเห็น