விடுதலைப்புலிகளை ஒழித்தது போன்று ஊழல் மோசடிகளையும் ஒழிப்பேன் :-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை இன்று வறிய நாடல்ல. அது மத்திய தர வருமானம் உள்ள நாடாகுமென உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இது ஆச்சரியமிக்க வெற்றியாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். விடுதலைப்புலிப் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்தது போன்று, 27ஆம் திகதிக்குப் பின்னர் ஊழல் மோசடிகளையும் ஒழிப்பேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை பிலியந்தலை சோமவீர சந்திரசிறி மைதானத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில், இதுவரையில் உலக நாடுகளின் வறிய நாடுகள் பட்டியலில் இருந்த நாங்கள் இன்று உலகில் மத்தியதர வருமானம் பெறும் பட்டியலில் இடம்பிடித்துள்ளோம். இதனை சர்வதேச நாணயநிதியமும் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, உண்மையான மாற்றம் எமது மேடையிலேயே இருக்கிறது. எனவே, இதனை அனுபவிக்க ஆயத்தமாவோம்.
ஊடகச் சுதந்திரம் மனித உரிமைகள், நாட்டில் சுதந்திரம் தொடர்பாகக் குரல்கொடுப்பவர்களென தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோர் இன்று ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர். இவ்வாறு இன்று பலர் தோன்றியுள்ளனர். இவர்கள் அனைவரது கைகளிலும் இரத்தம் தோய்ந்துள்ளது. இரத்த வாடை வீசுகின்றது. எனவே, அச்சுறுத்துவதென்பது இவர்களுக்கு பெரியதொரு விடயமல்ல. மனித உரிமைகளை, ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாக்க இந்த மஹிந்த ராஜபக்ஷ அர்ப்பணிப்பு செய்வான்.
இந்த நாட்டை அபிவிருத்தி செய்து, உலகிலேயே உத்தமமான நாடு என்ற பெயரை பெற்றுக் கொடுப்பதற்கு எம்மோடு கைகோர்த்துக் கொள்ளுங்கள். குரோதம் கொண்ட அரசியல் பரப்புவதைக் கைவிட்டு, அன்பைப் பரப்பும் அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம். சமாதானமான தேர்தலுக்குப் பின்பு நாட்டில் இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்காது ஜனநாயக ஆட்சிக்கு வழிவகுப்போம். இதற்காக ஒன்றிணைவோம். ஐ.தே.கட்சியில் எஞ்சியுள்ளோரையும் எம்மோடு இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
நாட்டில் சிறந்த சுகாதார சேவை, கல்வி முறைமையை உருவாக்குவதற்கு நீங்கள் அனைவரும் தயாராக வேண்டும். சிங்கப்பூரைப் போன்று முன்னேறிச் செல்ல வேண்டும். அதற்காகப் பாடுபடுவோம். ஒழிக்கப்பட்ட பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை. எம்மிடம் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டம் ஒன்றுள்ளது. இதற்காக 27ஆம் திகதியிலிருந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இச்செய்தியை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். 27ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் விருப்புவாக்கு முறைமை இருக்காது, விருப்பு வாக்குகளுக்காக சண்டையிட்டுக் கொள்ளும் நிலைமை உருவாகாது. விருப்புவாக்கு முறைமையை இரத்துச் செய்வேன் என்றார்.
0 Response to "விடுதலைப்புலிகளை ஒழித்தது போன்று ஊழல் மோசடிகளையும் ஒழிப்பேன் :-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ"
แสดงความคิดเห็น