jkr

இறுதி முடிவுகளை அறிவிக்காது இராணுவரீதியில் நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்த அரசு திட்டம் தலைநகருக்குள் கவசவாகனம் எதற்கு; ரணில் விக்கிரமசிங்க கேள்வி


நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் இறுதி முடிவுகளை அறிவிக்காது இருப்பதற்கும் அதேவேளை, எதிர்வரும் 27 ஆம் திகதியின் பின்னர் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதற்கு திராணி இல்லாது தொடர்ந்தும் அதிகாரத்தை நீடித்துக் கொள்ளும் பொருட்டும் இராணுவ ரீதியிலான நிர்வாக கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்று ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

பயங்கரவாதம் அற்றுப்போயுள்ள சூழலில் யுத்த நடவடிக்கைகளுக்காக பாவிக்கப்படுகின்ற 15 கனரக கவச வாகனங்களை கொழும்பின் முக்கிய பகுதியான முகத்துவாரத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியதன் அவசியம் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். வடக்கில் கடமையில் இருந்த இராணுவ அதிகாரிகள் மூவரை அங்கிருந்து இடம் மாற்றி கொழும்புக்கு அழைத்து வந்து பங்களாதேஷக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்குகொண்ட விசேட செய்தியாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜெனரல் பொன்சேகாவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த செய்தியாளர் மாநாட்டில் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, ஜே.வி.பி.யின் பாராளுமன்ற குழுத் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளர் மங்கள சமரவீ ர ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில், நாளைய தினம் நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை எதிர்கொள்ள முடியாத அரசாங்கம் தற்போது அசாதாரண சூழல்களை உருவாக்கி வருகின்றது. தேர்தல் ஒன்றில் மக்கள் எவ்வாறான தீர்மானத்தை அளிக்கின்றார்களோ அதனை ஏற்றுக்கொள்வதுதான் ஜனநாயகமாகும். அதனை விடுத்து நாளை தேர்தலின் முடிவுகள் தமக்கு சாதகமற்றதாக அமையப் போவதை உணர்ந்துள்ள அரசாங்கம் மக்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளாதிருப்பதற்கும் அதேநேரம் தமது அதிகாரத்தை தொடர்ந்தும் நீடித்துக் கொள்வதற்குமான மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது தொடர்பில் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

அரசியல் அமைப்பின் 31ஆம் பிரிவின் பிரகாரம் மக்களின் தீர்ப்புக்கு அமைய வெற்றியோ தோல்வியோ எதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதே முறையாகும். இது இவ்வாறிருக்க யாழ்ப்பாணம், பூநகரி, வடமராட்சி மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ உயரதிகாரிகள் திடீரென இடம் மாற்றப்பட்டு அவர்களை தலைநகருக்கு அழைத்து வந்திருந்தனர். அதுமட்டுமல்லாது டபிள்யு. இசட் 551 ரக 15 கவச வாகனங்கள் முகத்துவாரம் இராணுவ முகாமில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் இந்த வாகனங்கள் யுத்த காலத்தின்போதே பாவிக்கப்படுபவை. யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் அதுவும் தலைநகருக்குள் இவ்வாறான வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? என கேட்க விரும்புகிறேன்.

தேர்தல் காலத்தில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவது இயல்பானதாகும். எனினும், பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் தலைநகருக்குள் இடம்பெறுவதில்லை. வெளிப் பிரதேசங்களில் சில சம்பவங்கள் இடம்பெறலாம். இருப்பினும் நாளைய தினம் நடைபெறவிருக்கின்ற தேர்தலின் போது எந்த விதமான வன்முறைகளிலும் எவரும் ஈடுபடக்கூடாது என நாம் தெளிவாக பொது மக்களுக்கு அறிவித்திருக்கின்றோம். இந்நிலையில், வன்முறைகள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. அவ்வாறு வன்முறைகள் இடம்பெறுமானால் அது அரசாங்கத்தையே சாரும்.

இதேவேளை, நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்க வேண்டாம் என தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனம் உள்ளிட்ட அரச ஊடகங்களில் அத்தியாவசிய சேவையாளர்களை தவிர ஏனையோருக்கு விடுமுறை வழங்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக விரோத செயற்பாடாகும்.

தேர்தல் முடிவுகள் தமக்கு நிச்சயமாக தோல்வியிலேயே அமையும் என்பதை தெளிவாக உணர்ந்துள்ள அரசாங்கம் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பின்படி முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது இதன் பின்னணியில் இருந்து செயற்பட்டு வருகின்றது. ஆனால், எம்மைப் பொறுத்தவரையில் நாம் தேர்தலின் எந்த முடிவுகளையும் எதிர்கொள்வதற்கும் அதனை ஏற்றுக்கொள்வதற்கும் தயாராகவே இருக்கின்றோம். அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் தொடர்பிலான அனைத்து தகவல்களும் ஜனநாயகத்தை ஆதரிக்கின்ற பொலிஸார், இராணுவ அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஊடாகவே எமக்கு கிடைக்கின்றன.

எனவே, அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கும் மக்களின் தீர்ப்புகளுக்கும் மதிப்பளிக்காதவர்கள் தொடர்பிலும் அதேவேளை, நடைபெறவிருக்கின்ற தேர்தலையும் அதன் பின்னரான நடவடிக்கைகளையும் குழப்பியடித்து வன்முறைகளில் ஈடுபடுவோர் தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தி அதற்கு இடமளிக்காதவாறு பொலிஸார், முப்படையினர், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும் என சகலரிடமும் கோரிக்கை விடுக்கிறோம். அத்துடன், வன்முறைக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இறுதி முடிவுகளை அறிவிக்காது இராணுவரீதியில் நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்த அரசு திட்டம் தலைநகருக்குள் கவசவாகனம் எதற்கு; ரணில் விக்கிரமசிங்க கேள்வி"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates