கடந்த கால தேர்தல்களை விடவும் இம்முறை வன்முறைகள் அதிகரிப்பு ஆசிய தேர்தல் அதிகார அமையம்
கடந்த கால தேர்தல்களை விடவும் இம்முறை தேர்தலில் வன்முறைகள் அதிகரித்துள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ள ஆசிய தேர்தல் அதிகார அமையம் வாக்களிப்பு நிலையங்களையும் வாக்கெண்ணும் நிலையங்களையும் நாம் கண்காணிப்போம் என்றும் தெரிவித்துள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைகளை சகல மாவட்டங்களிலும் மேற்கொள்வோம் எனினும் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களுக்கும் செல்லமுடியாது என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக வருகைதந்துள்ள 13 நாடுகளை சேர்ந்த 40 கண்காணிப்பாளர்கள் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியது. அந்த மாநாட்டில் கலந்துகொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
தாய்வான் தேர்தல் ஆணையாளர் கலாநிதி பன் வெல்டா தலைமையில் செயற்படுகின்ற ஆசிய தேர்தல் அதிகார அமையத்தில் ஆப்கானிஸ்தானில் இருவர், பங்களாதேஷிலிருந்து நால்வரும்,பூட்டானிலிருந்து மூவரும், கம்போடியாவிலிருந்து மூவரும் இந்தியாவிலிருந்து நால்வரும், இந்தோனேசியாவிலிருந்து ஒருவரும், கஸகஸ்தானிலிருந்து மூவரும் கொரியாவிலிருந்து மூவரும், மலேசியாவிலிருந்து இருவரும், நேபாளிலிருந்து மூவரும், பாகிஸ்தானிலிருந்து நால்வரும், தாய்வானிலிருந்து ஐவரும், பப்புவா நியுகினியனிலிருந்து இருவருமாக உயர்மட்ட அதிகாரிகள் அடங்குகின்றனர்.
ஊடகவியலாளர் கேட்ட கேள்விகளுக்கு அமையத்தின் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில்,
சுயாதீனமான நிறுவனங்களாகவே ஆசிய தேர்தல் அதிகார அமையம் செயற்படுகின்றது. அமையத்தில் அங்கம் வகிக்கின்றவர்கள் கடந்த 18 ஆம் திகதி முதல் வருகைதந்தனர். 25 மாவட்டங்களுக்கும் நாளை( இன்று சனிக்கிழமை) செல்லவுள்ளனர். கடந்த காலங்களை விடவும் இந்த தேர்தலில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றாலும் வெளிப்படையாகவே நாம் செயற்படுவோம்.
வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்கெண்ணும் நிலையங்களிலும் என்ன? நடைபெறுகின்றது என்பதனை கண்டறிவதற்கே நாம் வருகைதந்துள்ளோம் ஏனைய விடயங்கள் எமக்கு தெரியாது. அதற்கு நாம் பொறுப்பல்ல. ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் செல்வோம் ஆனால் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களுக்கும் எம்மால் செல்லமுடியாது என்றனர்.
0 Response to "கடந்த கால தேர்தல்களை விடவும் இம்முறை வன்முறைகள் அதிகரிப்பு ஆசிய தேர்தல் அதிகார அமையம்"
แสดงความคิดเห็น