முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா - சரத் பொன்சேகா சந்திப்பு
எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா இன்று முற்பகல், ஹொரகொல்லையில் வைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு சுமார் அரை மணித்தியாலங்களாக இடம்பெற்றுள்ளது.
ஹொரகொல்லையில் உள்ள, முன்னாள் பிரதம மந்திரி எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்கவின் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்திய பின்னரே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை இந்த சந்திப்பு தொடர்பில் செய்தி சேகரிப்புக்காக சென்ற ஊடகவியலாளர்கள் இடையில் கடவத்தை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் தடுக்கப்பட்டதாகவும் பின்னர் செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சந்திரிகா பண்டாரநாயக்கவை சரத் பொன்சேகா சந்தித்தமையானது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் சந்திரிகாவுக்கு விசுவாசமான தரப்பினர் மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான வாக்குகளை சரத் பொன்சேகாவுக்கு பெற்றுக்கொடுக்கச்செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திரிக்கா குமாரதுங்க, சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக பிரசார மேடைகளில் ஏறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட போதும் அவர் அதனை மேற்கொள்ளாத நிலையில், எனினும் நேற்று தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்த அவர் நாட்டில் தற்போது ஆட்சி மாற்றம் ஒன்று அவசியம் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் குடும்ப ஆட்சி, ஊழல் மற்றும் துஸ்பிரயோகங்களுக்கு எதிராக இந்த ஆட்சி மாற்றம் அவசியம் என தெரிவித்துள்ள அவர், இதனை கருத்திற்கொண்டு எதிர்வரும் 26 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் செயற்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்தநிலையில் இன்று சரத் பொன்சேகா அவரை சந்தித்திருப்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
0 Response to "முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா - சரத் பொன்சேகா சந்திப்பு"
แสดงความคิดเห็น