தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை பேணுவதன் மூலம் எதிர்வரும் தேர்தல்களிலும் நாம் சாதிக்கலாம் :-சம்பந்தன்
தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணையக் கூடியததொரு தருணத்தை ஜனாதிபதித் தேர்தல் எமக்குத் தந்திருக்கின்றது. எதிர் காலங்களிலும் இந்த இணைப்பினைப் பேணுவதன் மூலம் எதிர்வரும் தேர்தல்களிலும் நாம் சாதிக்கலாம். பெருந்தன்மையுடன் முஸ்லிம்கள் விடயத்தில் விட்டுக் கொடுப்புக்களோடு நடந்துகொள்ள நாம் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து எதிரணியின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நேற்று முன்தினம் நடத்திய கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், எம்.பி.க்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட இரு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை, மாநகர சபை உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினர். கல்முனை மாநகர சபையின் 2010ஆம் ஆண்டுக்கான உயர் விருதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தமிழ் பேசும் மக்களின் தலைமகன் விருது கல்முனை மாநகர மேயர் எச்.எம்.எம். ஹரீஸால் வழங்கி வைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய சம்பந்தன் எம்.பி. கூறியதாவது: கல்முனை மண்ணில் இன்று எனக்கு அளிக்கப்பட்டுள்ள கௌரவம் எனக்குரியதல்ல. தமிழ் முஸ்லிம் உறவை எதிர்பார்த்து நிற்கும் அனைவருக்கும் உரியதாகும். அரசியலில் நேர்மை. உண்மை என்பவற்றைக் கொண்ட பாரம்பரியத்துடன் நான் கடந்து வந்த பாதைக்குக் கிடைத்த கௌரவம் என்றே இதனைக் கருதுகின்றேன். எங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள இவ் ஒன்றிணைவின் மூலம் தமிழ் முஸ்லிம் உறவைக் கட்டிக் காத்து, நாமே நம்மை ஆள வேண்டிய நிலையினை உருவாக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவோ ஏனைய ராஜபக்ஷக்களோ எம்மை ஆள நாம் இடமளிக்க கூடாது. பஞ்சாப், ஆந்திரா, தமிழ்நாடு எனத் தனித்தனியான மாநில ஆட்சிகள் நடைபெற்றாலும் இந்தியாவின் முழு ஆட்சியினையும் அது பாதிக்கவில்லை. அது சிதறவும் இல்லை. மாறாக முன்னேற்றமே அடையும். இவ்வாறானதொரு ஆளுமையினையே இங்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.
தமிழ் முஸ்லிம் மக்கள் உண்மைக்கு உண்மையாக நேசிக்க வேண்டும். இதன் மூலமே நிரந்தர உறவினைப் பேண முடியும். சிங்கள மக்களை நாம் மதிக்கின்றோம். ஆனால், அவர்களுக்கொரு மண், பண்பாடு, மொழி இருப்பது போல் தமிழ் பேசும் மக்களுக்கும் இருக்கின்றது என்பதை அவர்கள் உணர வேண்டும். ஜனாதிபதி மஹிந்தவைப் பொறுத்தவரை அவருக்கு அடிபணியக் கூடிய, அவர் சொல்வதற்கு ஆமாம் போடுகினற தலைவர்களையே அவருக்குப் பிடிக்கும். இதற்கு மாற்றமான தலைவர்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வதில்லை.
எமது மக்களின் பிரச்சினை எதுவென்பதை அறிந்து அதனை பேசித் தீர்க்கக் கூடியவர்களே அரசியலில் இறக்க வேண்டும். இது பற்றித் தெரியாதவர்கள் இதில் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது. மனிதாபிமானமில்லாத தலைவராகவே ஜனாதிபதியை நாம் காண்கின்றோம். பாராளுமன்றத்தில் வாக்களிக்க முடியாமல் இரண்டு மூன்று தடவைக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கடத்தி அவர்களின் குடும்பங்களைப் பயமுறுத்தும் காரியத்தை இவ் அரசு செய்தது. இதுவெல்லாம் ஜனநாயகமா? என நாம் கேட்கின்றோம்.
எடுத்த எடுப்பில் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை நாம் எடுக்கவில்லை. அலசி, பேசி ஆராய்ந்தே இந்த முடிவை எடுத்தோம். வட மாகாண முஸ்லிம்கள் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும். தங்களது பிரச்சினைகளை நாங்களே தீர்மானிக்க வேண்டும். காணி, கல்வி, தொழில் இவைகளைப் பற்றியெல்லாம் ஜனாதிபதியிடம் பேசினோம். ஆனால் அவர் இவைகளையெல்லாம் இழுத்தடிப்புச் செய்தார். பொன்சேகாவுடன் பேசியபோது சாதகமான சமிக்கை கிடைத்தது. அதன் பின்னரே எமது முடிவை அறிவித்தோம்.
நான் தான் யுத்தத்தை வென்றவன் என மார்பு தட்டிக்கொண்டு இருந்த ஜனாதிபதிக்கு அவருக்குள்ளிருந்தே பொது வேட்பாளரை எதிரணியினர் தேர்வு செய்துள்ளனர். இதனால் மிகவும் சாதாரணமாக நினைத்த ஜனாதிபதித் தேர்தல் இன்று ஜனாதிபதிக்குப் பெரும் தலையிடியாக மாறியுள்ளது. சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்த பின்னும் எமது உரிமைகள் வெல்லப்படவில்லையாயின் 2010ஆம் ஆண்டு தமிழ் முஸ்லிம்கள் இணைந்து அதனைப் பெற முயற்சிக்க வேண்டும். இவைகளினூடாகவே தமிழ் முஸ்லிம் சமூகம் தலைநிமிர்ந்து வாழ முடியும் என்றார்.
0 Response to "தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை பேணுவதன் மூலம் எதிர்வரும் தேர்தல்களிலும் நாம் சாதிக்கலாம் :-சம்பந்தன்"
แสดงความคิดเห็น