சரத் பொன்சேகாவின் வெற்றி பிரிவினைக்கான அங்கீகாரம் :-எஸ்.பி திஸாநாயக்க
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் யுத்தத்தை வெற்றி கொண்டதால் தலைக்குனிவை சந்தித்துள்ள சர்வதேச நாடுகள், சரத் பொன்சேகாவைப் பயன்படுத்தி மீண்டும் நாட்டுக்குள் பிரிவினை வாதத்திற்கு வித்திடுகின்றன என்று முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மீண்டும் இணைந்துகொண்டவருமான எஸ்.பி. திஸாநாயக்க குற்றம் சாட்டினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவுகளால் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் பொன்சேகாவுக்கு கிடைக்கப் போவதில்லையென்றும் அவர் கூறினார். கொழும்பு ஜானகி ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே எஸ்.பி. திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். இங்கு இவர் மேலும் கூறியதாவது,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்றாகப் பிரிந்துள்ளது. 4 பேர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குகின்றனர். 4 பேர் பகிஷ்கரிக்க வேண்டுமென்கின்றனர். ஒருவர் தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றார். 7 பேர் பொன்சேகாவை ஆதரிக்கின்னர். எனவே தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் பொன்சேகாவுக்கு கிடைக்காது. பொன்சேகாவின் வெற்றியென்பது விடுதலைப் புலிகளுக்கும் கூட்டமைப்பின் இரகசிய ஒப்பந்தத்திற்கும் பிரிவினை வாதத்திற்கும் கிடைக்கும் அங்கீகாரமாகும்.
சர்வதேச ரீதியில் இயங்கும் புலி உறுப்பினர்களினதும் யுத்தத்தை வெற்றி கொண்டதால் தலைகுனிவை எதிர்நோக்கிய சர்வதேச நாடுகளினதும் ஒத்துழைப்புடனேயே இந்த நாட்டின் ஜனாதிபதியை வெளியேற்ற சதித் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. இராணுவத்தினர் சிறு பிழையைச் செய்தாலும் கடுமையான தண்டனை வழங்கும் மனப்போக்குடையவர். இவ்வாறான நபரொருவர் நாட்டின் ஜனாதிபதியானால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். 27ஆம் திகதி பதவியேற்றால் படை உயர் அதிகாரிகளின் சீருடைகளை கழற்றுவேன் என்கிறார். இப்போதே பழி தீர்க்கும் தனது குணாம்சத்தை வெளிக்காட்டுகிறார்.
இவர் எவ்வாறு சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்கப் போகிறார்? 17 ஆவது திருத்தத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவார். காபந்து அரசாங்கத்தில் பிரதமர் சரத் என் சில்வா என ஜே. வி. பி. தெரிவிக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க தானே பிரதமர் என்கிறார். இவ்வாறு இப்போதே குழப்பங்கள், முரண்பாடுகள் தோன்றியிருக்கின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தையும் செய்து கொண்டு மறுபுறம் பாரிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்தார். வேலையற்ற பிரச்சினைக்கு தீர்வு கண்டார். அதிவேகப் பாதைகள், மேம்பாலங்கள் என அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்று யுத்தம் முடிந்து விட்டது. இவ்வாறானதொரு நிலைமையில் மேற்கண்ட அபிவிருத்திகளை மேலும் துரிதகதியில் முன்னெடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்ய வேண்டும். ஊழல், மோசடிகளற்ற நல்லாட்சியை உருவாக்க பொன்சேகாவை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென வக்காளத்து வாங்குவோர் இன்று என்ன செய்கின்றனர்? 300 இலட்சம் கொடுத்து முஸ்ஸம்மில் எம்.பி.யை வாங்க முயற்சித்துள்ளனர்.
இவ்வளவு தொகை பணம் எங்கிருந்து கிடைத்தது? அது சர்வதேச ரீதியில் உள்ள புலிகளிடமிருந்து கிடைத்தது. ""அரச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி'' என்கிறார்கள். ஜனாதிபதி எளிமையான மக்களோடு மக்களாக வாழ்பவர். அவரது புதல்வர்கள் வெளிநாடு சென்றாலும் படையினர் பாதுகாப்பு வழங்குவதில்லை. ஆனால் பொன்சேகாவின் மகள் திருமணம் செய்து அமெரிக்கா சென்றார். அதன் போது படையினர் பாதுகாப்பிற்குச் சென்றனர்.
பொன்சேகா தளபதியாகவிருந்த போது 16 பெண் அதிகாரிகள் இருந்தனர். இவ்வளவு தொகை ஏன் என்பது எனக்குத் தெரியாது. தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்று எனது பழைய உரையொன்றை பயன்படுத்தி பொன்சேகாவுக்கு ஆதரவாக விளம்பரமொன்றை ஒளிபரப்புகின்றது. இதனை நிறுத்த வேண்டுமென எனது சட்டத்தரணியூடாக அறிவுறுத்தல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளேன்.
0 Response to "சரத் பொன்சேகாவின் வெற்றி பிரிவினைக்கான அங்கீகாரம் :-எஸ்.பி திஸாநாயக்க"
แสดงความคิดเห็น