அடையாள அட்டைகளை அபகரிப்பதற்கு முயற்சி :- அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குற்றச்சாட்டு
எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் வாக்காளர்களின் தேசிய அடையாள அட்டைகளை அபகரிப்பதற்கு அல்லது விலைக்கு வாங்குவதற்கு முயற்சி ஒன்று மேற்கொள்ளப்படுகின்றது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் அறிவித்துள்ளோம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செயலாளரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். தேசிய பிரச்சினை தீர்வுக்கான வெளிமாதிரித் திட்டத்தை மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் ஊடாக முன்வைத்துள்ளோம். எனினும் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் செல்வதா? இல்லையா? என்பதனை அரசியலமைப்பு மாற்றத்துடன் ஏற்படுத்தப்படுகின்ற தேசிய இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே தீர்மானிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: இதுவரை எமது இரண்டு ஆதரவாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளோம். அமைதியான தேர்தலை ஒன்றை நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.
மேலும் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் வாக்காளர்களின் தேசிய அடையாள அட்டைகளை அபகரிப்பதற்கு அல்லது விலைக்கு வாங்குவதற்கு முயற்சி ஒன்று மேற்கொள்ளப்படுகின்றது. இது தொடர்பில் உரிய தரப்புக்கு அறிவித்துள்ளோம். அடையாள அட்டை இன்றி வாக்களிக்க முடியாது என்பது உங்களுக்கு தெரியும். ஒருகாலத்தில் வன்முறையில் ஈடுபட்ட மற்றும் அடையாள அட்டைகளை பறித்த கட்சி இன்று எதிரணியில் இருக்கின்றமையும் குறிப்பிடவேண்டும்.
வறியவர்களுக்காக குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டிருப்பவர்கள் இன்று டை கோர்ட் உடைக்கு மாறியுள்ளனர். இதேவேளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கவேண்டும் என்பதே மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பத்தில் முன்வைத்த தர்க்கமாகும். ஆனால் எதிரணி வேட்பாளர் வெற்றிபெற்றால் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுமே தவிர முழுமையாக நீக்கப்படமாட்டாது என்று எதிரணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் பிரதம நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.
அப்படியானால் தற்போது மக்கள் விடுதலை முன்னணி என்ன கூறவிரும்புகின்றது? கட்சியின் நிலைப்பாடு என்ன? ஜனாதிபதியினால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க முடியாது என்று ஆரம்பத்திலிருந்து நாங்கள் கூறிவந்தோம். இதுவே யதார்த்தம். எனவே மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று எதிரணியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
தேசிய பிரச்சினை தீர்வுக்கான வெளிமாதிரித் திட்டத்தை மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் ஊடாக முன்வைத்துள்ளோம். அதனை மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் செய்ய முடியும். ஏனைய விடயங்களை பாராளுமன்றத்திலேயே செய்ய முடியும். கடந்த 2005 ஆம் ஆண்டு தேர்தலின்போது முன்வைக்கப்பட்ட மஹிந்த சிந்தனையிலும் இந்த விடயத்தை தெளிவாக குறிப்பிட்டிருந்தோம். சமாதான பேச்சுக்களிலும் ஈடுபட்டோம். ஆனால் அவை தோல்வியடைந்தன. மேலும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு தனது பணியில் ஈடுபட்டுவருகின்றது. அதற்கிடையில் தற்போது தேர்தல் வந்துள்ளது.
நாங்கள் இம்முறை மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு வேலைத்திட்டத்திலும் சில யோசனைகளை முன்வைத்துள்ளோம். அதாவது செனட் சபை மக்கள் சபைகள் உள்ளிட்ட பல விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் செல்வதா? இல்லையா? என்பதனை அரசியலமைப்பு மாற்றத்துடன் ஏற்படுத்தப்படுகின்ற தேசிய இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே தீர்மானிக்க முடியும். அது தொடர்பில் தற்போது கூற முடியாது.
அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளமை போன்று தனியார் ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்குவதற்கான அடித்தளத்தை இட்டுள்ளோம். கடந்த காலங்களில் தொழில் அமைச்சு தலையிட்டு இவ்வாறு சம்பள உயர்வை வழங்க நடவடிக்கை எடுத்தது. நிதி ஊழல் மற்றும் ஏனைய மோசடிகள் குறித்து பேசப்படுகின்றது. ஆனால் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவைவிட இலஞ் ஊழல் தடுப்பு திணைக்களம் சிறந்தது என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும். காரணம் முன்னர் அதில் வேலைத்திட்டங்களை நாங்கள் மேற்கொண்டோம்
0 Response to "அடையாள அட்டைகளை அபகரிப்பதற்கு முயற்சி :- அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குற்றச்சாட்டு"
แสดงความคิดเห็น