மனித உரிமை மீறல் குறித்த அறிக்கை 21 ஆம் நாள் அமெரிக்கா காங்கிரசில் சமர்ப்பிப்பு: சிறிலங்காவுக்கு வாசிங்ரன் தெரிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரச படையினர் நடத்திய வலிந்த தாக்குதலின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை (21.09.09) அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை அமைச்சர் றொபேர்ட் ஓ பிளேக் இந்தத் தகவலை வாசிங்ரனில் உள்ள சிறிலங்கா தூதுவர் ஜாலிய விக்கிரமசிங்கவுக்கு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்ட ஒன்று, மனித உரிமைகளை முன்னிறுத்தி சிறிலங்கா மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் அதனது நோக்கத்தின் ஒரு பகுதியான நடவடிக்கையே இது என கொழும்பில் பாதுகாப்பு தரப்பினரும் அரச தரப்பினரும் தெரிவித்தனர்.
போருக்குப் பின்னரான முக்கிய பிரச்சினைகள் என ஐக்கிய நாடுகள் சபை கூறும் விவகாரங்கள் தொடர்பாக அதன் அரசியல் பொதுச் செயலாளர் லைன் பாஸ்கோவே கொழும்புக்கு வருகை தந்திருக்கும் தருணத்தில் அமெரிக்காவின் இந்த நகர்வு முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
ஐ.நா. அதிகாரியின் இந்தப் பயணத்தின்போது இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியமர்வு, இனங்களுக்கு இடையே கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை மீல்கள் தொடர்பாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான சிறந்த பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவது ஆகியன குறித்து சிறிலங்கா அதிகாரிகளுடன் பேசப்படும் என ஐ.நா. வட்டாரங்கள் கூறுகின்றன.
0 Response to "மனித உரிமை மீறல் குறித்த அறிக்கை 21 ஆம் நாள் அமெரிக்கா காங்கிரசில் சமர்ப்பிப்பு: சிறிலங்காவுக்கு வாசிங்ரன் தெரிவிப்பு"
แสดงความคิดเห็น