மட்டக்களப்பு வந்தும் அகதி வாழ்க்கை தொடர்கிறது!

வவுனியா இடைத் தங்கல் முகாமிலிருந்து இரண்டாவது தொகுதியாக விடுவிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 123 குடும்பங்களும் இன்று காலை 10 பஸ்களில் மட்டக்களப்பை வந்தடைந்தன. எனினும் இது வரை அவர்கள் தமது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை . மட்டக்களப்பு சிங்கள மகாவித்தியாலயத்திலும், குருக்கள் மடம் கலைவாணி மகா வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ள இக்குடும்பத்தவர் ஓரிரு நாட்களின் பின்னரே சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று முற்பகல் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 123 குடும்பங்களைச் சேர்ந்த 367 பேரை சிவில் அதிகாரிகள் பொறுப்பேற்றனர். பாதுகாப்பு தரப்பினர் இவர்களது விபரங்களைப் பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதங்களினால் நேற்று நள்ளிரவே வவுனியாவிலிருந்து புறப்பட்டனர். இன்று காலை தான் மட்டக்களப்பை வந்தடைய முடிந்ததாக மாவட்ட செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இக்குடும்பங்களில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 238 பேர் சிங்கள மகா வித்தியாலயத்திலும் ,45 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேர் குருக்கள் மடம் கலைவாணி வித்தியாலயத்திலும் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள போதிலும் வெளியார் எவரும் அங்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இக்குடும்பங்கள் அழைத்து வரப்பட்டு வாழைச்சேனை கிறிஸ்தவ தேவாலயம், செங்கலடி மகா வித்தியாலயம், மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயம், குருக்கள் மடம் கலைவாணி வித்தியாலயம் ஆகியவற்றில் முதல் நாள் இரவு தங்க வைக்கப்பட்டு மறு நாள் வழமை போல் பிரதேச செயலாளர்கள் ஊடாக சொந்தக் கிராமங்களுக்கு அனுப்பி வைக்க உத்தேசிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இறுதி நேரத்தில் பாதுகாப்பு தரப்பினரால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானமொன்றின் பேரிலேயே குறிப்பிட்ட இரண்டு நிலையங்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் மற்றும் இராணுவம் இவர்களது விபரங்களைப் பதிவு செய்த பின்னரே, இவர்கள் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். இதன் காரணமாகவே ஓரிரு நாட்கள் மேற்படி குடும்பங்கள் இந்நிலையங்களில் தங்கியிருக்க வேண்டியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இன்று காலை சிங்கள மகா வித்தியாலயத்தில் தங்கியுள்ள இக் குடும்பங்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ,தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் ,மாகாண சபை உறுப்பினர் இரா.துரைத்தினம் ,மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் உட்பட சிவில் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சென்று சந்தித்து உரையாடினர் . மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தலைமையில் நடை பெற்ற கூட்டமொன்றிலும் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
0 Response to "மட்டக்களப்பு வந்தும் அகதி வாழ்க்கை தொடர்கிறது!"
แสดงความคิดเห็น