jkr

செய்தியறிக்கை


அலி அக்பர் சலெஹி - இரானின் அணுத் திட்ட பேச்சுவார்த்தை அதிகாரி
அலி அக்பர் சலெஹி - இரானின் அணுத் திட்ட பேச்சுவார்த்தை அதிகாரி

இரானின் அணுத்திட்டம் தொடர்பான கவலைகளை குறைக்க ஐ.நா வின் புதிய உடன்படிக்கை முன்வரைவு

ஐக்கிய நாடுகளின் அணுத்திட்ட முகவர் அமைப்பின் தலைவர் மொஹமட் எல்பரதே, இரானின் அணுத்திட்டம் தொடர்பான கவலைகளை குறைக்கும் நோக்குடனான உடன்படிக்கை முன்வரைவொன்றை இரானுக்கும் மூன்று உலக வல்லரசுகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இரான் தனது பெரும்பாலான யுரேனியங்களை தனது சொந்த உள்ளூர் ஆராய்ச்சி அணு உலைகளுக்கு அனுப்ப முன்பதாக, மேலதிக செறிவூட்டலுக்காக வெளிநாடுகளுக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கவேண்டுமென இந்த வரைவு வலியுறுத்துகின்றது.

பி.பி.சிக்கு கருத்து தெரிவித்த ரஷ்ய அணுக் கைத்தொழில்துறை அதிகாரிகள், இந்த உடன்படிக்கையின் படி, இரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேணியத்தில் 80 வீதத்தை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யவேண்டுமெனவும், பின்னர் பிரான்ஸ்க்கு அனுப்ப வேண்டுமெனவும், இதனால் பெருமளவு யுரேனியம் அங்கிருந்து வெளியேறுவதால் இரானால் அணு ஆயுதம் தயாரிப்பது சிரமமான காரியம் ஆகுமெனவும் குறிப்பிட்டனர்.


பாகிஸ்தானில் குண்டுத் தாக்குதல் அச்சம் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டன

பள்ளியொன்றின் காவல் கடமையில் படையதிகாரி
பள்ளியொன்றின் காவல் கடமையில் படைவீரர்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கு நாடாளாவிய ரீதியில் பாடசாலைகளையும் பல்கலைக்கழகங்களையும் மூடிவிடும் உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை வரை கல்வி நிலையங்கள் யாவும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சிந்து மாகாணத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் வியாழக்கிழமையிலிருந்து திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதல் நடைபெறும் வடக்கு மேற்கு பிரதேசங்களில் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் விநியோக மையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அந்த அமைப்பு ஆராய்ந்து வருகின்றது.


ஆப்கன் மறுதேர்தலில் மக்கள் பங்கு கொள்ள வேண்டும் - ஐநா சிறப்புத் தூதர் அழைப்பு

நாளிதழ்களில் மறு வாக்குப் பதிவு குறித்த செய்திகள்
ஆப்கன் நாளிதழ்களில் மறு வாக்குப் பதிவு குறித்த செய்திகள்

ஆப்கானில் விரைவில் நடக்கவுள்ள மறு தேர்தல் மிகவும் நேர்த்தியானதாக இருக்கும் என்று கூற முடியாது என்றாலும் மக்கள் இதில் பங்கு கொள்ள வேண்டும் என்று ஆப்கானுக்கான ஐநாவின் சிறப்புத் தூதர் காய் எடி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆப்கான் நாடு மோதல்கள் நிறைந்த ஒரு நாடு என்பதை மறக்கலாகது என்றும் அவர் கூறியுள்ளார்.

நவம்பர் 7 ஆம் தேதி மறு தேர்தல் நடக்கவுள்ள நிலையில்.
ஊழல் புகருக்குள்ளாகியுள்ள சுமார் 200 தேர்தல் அதிகாரிகளை மாற்றும் பணி ஏற்கனவே துவங்கியுள்ளதாக ஐ நா கூறியுள்ளது.

மீண்டும் அங்கே தேர்தல் முறைகேடுகள் நடைபெறும் என்பதற்கான அச்சங்கள் வெளியிடப்படும் சூழலில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

சர்வதேச அழுத்தங்களைத் தொடர்ந்து ஆப்கன் அதிபர் ஹமித் கர்சாய் தனது முக்கிய போட்டியாளர் அப்துல்லா அப்துல்லாவை மறு தேர்தலில் சந்திக்க செவ்வாய் கிழமையன்று ஒத்துக் கொண்டார்.


"பெரும்பாலான வறிய நாடுகளைச் சேர்ந்த சிறுவர்களுக்கே முக்கிய தடுப்பு மருந்துகள் அளிக்கப்படவில்லை" - உலக சுகாதார ஸ்தாபனம்

சொட்டு மருந்து பெறும் நைஜீரியக் குழந்தை
சொட்டு மருந்து பெறும் நைஜீரியக் குழந்தை
பெரும் எண்ணிக்கையான சிறுவர்களுக்கு கடந்த வருடத்தில் உயிராபத்து மிக்க நோய்களுக்கான தடுப்பு மருந்து அளிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகின்றது.

160 மில்லியன் சிறுவர்கள் சின்னம்மை வியாதிகள், ஏற்பு நோய்கள் போன்ற தொண்டைக் கரப்பான் போன்ற நோய்களுக்காக தடுப்பூசி ஏற்ற்ப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும், சிறுவர்களில் ஐந்தில் ஒருவருக்கு, அனேகமாக வறிய நாடுகளைச் சேர்ந்த சிறுவர்களுக்கு தடுப்பு மருந்து அளிக்கப் படவில்லையென அந்த அமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

90 வீதமான சிறுவர்களுக்கு ஆண்டுதோறும் தடுப்பு மருந்து அளிக்கப்பட்டால் இரண்டு மில்லியன் உயிர்களை காப்பாற்ற முடியும் என அந்த அமைப்பு கணித்துள்ளது.

புதிய மற்றும் மிக விலை அதிகமான தடுப்பு மருந்துகளின் வளர்ச்சி காரணமாக மிக அதிகமான நிதியை இதற்காக ஒதுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

செய்தியரங்கம்
இந்திய உச்ச நீதிமன்றம்
இந்திய உச்ச நீதிமன்றம்

முல்லைப் பெரியாறுக்கு பதிலாக புதிய அணை கட்டப்படுவதற்கு இடைக்காலத் தடை கோரிய தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு

முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட கேரள அரசுக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கொடுத்த அனுமதிக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

பூர்வாங்க ஆய்வு நடத்த அனுமதியளிக்கப்பட்டிருந்தாலும், ஒரே இரவில் அணை கட்டிவிடப் போவதில்லை என்றும், அதனால் ஆய்வுக்குத் தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

புதிய ஆய்வுக்குத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு, நீதிபதி டி.கே. ஜெயின் தலைமையிலான பெஞ்ச் முன்பு புதன் கிழமை விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பராசரன், கேரளத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், புதிய அணை கட்டியே தீருவோம் என்று வெளிப்படையாகக் கூறியிருப்பதாகத் தெரிவித்தார்.

ஆனால், அமைச்சர்கள் சொல்வதை வைத்து தாங்கள் முடிவெடுக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

கேரளம் அணை கட்ட ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் உள்ளதாக பராசரன் தெரிவித்தார். அப்போது கேரள அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரகாஷ், ஆய்வுப் பணிகளை முடிக்க கேரளத்துக்கு 6 மாதங்கள் தேவைப்படும் என்று தெரிவித்தார்.

கேரள அரசு அணை கட்ட நடவடிக்கை எடுத்தால், அந்த நிலையில் தமிழகம் நீதிமன்றத்தை நாடலாம், அப்போது தமிழ்நாட்டின் நலனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது அச்சப்படுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில், புதிய அணை கட்ட ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதியளித்திருப்பதால், ஏற்கெனவே உள்ள முல்லைப் பெரியாறு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கேரள அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.


முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அமைச்சரின் நடவடிக்கையை கண்டித்து மதுரையில் கூட்டம் நடத்த தி.மு.க தீர்மானம்

மு.கருணாநிதி
மு.கருணாநிதி
முல்லைப்பெரியாறு பிரச்சினையில் மத்திய அமைச்சர் ஒருவர் நடந்து கொண்ட முறையினைக் கண்டித்து திமுக சார்பாக மதுரையில் எதிர்வரும் நவம்பர் ஒன்றாம் நாள் பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதாகவும், அக்கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு கருணாநிதி கலந்துகொள்ளவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த ஆற்றின் குறுக்கே புதியதோர் அணைகட்டுவதற்கான ஆய்வுப்பணிகள் நடத்த கேரளாவிற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சு அனுமதி அளித்ததற்காக அமைச்சர் ஜெயராம் ரமேஷ், தமிழக முதல்வர் உட்பட பல்வேறு தரப்பினரின் கண்டனங்களுக்குள்ளாயிருக்கிறார் என்பதும், தமிழகத்தின் ஆட்சேபணைகளை மீறி கேரளா ஆய்வுப்பணிகளைத் துவங்கியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


"இந்திய அதிகார வர்க்கத்தில் கேரள மாநிலத்தவரின் ஆதிக்கம்"- என்கிறார் ராமதாஸ், மறுக்கிறார் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.ரகுநாதன்
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.ரகுநாதன்
இதனிடையே இந்திய அரசு நிர்வாகத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பலர் முக்கிய பொறுப்பு வகிப்பதால்தான் தமிழகத்திற்கு நீதி மறுக்கப்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இங்கு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கூறியிருக்கிறார்.

இந்தியாவின் மத்திய ஆட்சிப்பணியில் ( ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.எப்.எஸ் போன்ற துறைகளில்) , கேரள மாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்ற பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் கருத்து சரியானதல்ல என்று டில்லி நிர்வாகத்தில் தலைமைச்செயலராக இருந்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான எஸ்.ரெகுநாதன் குறிப்பிட்டுள்ளார் .

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் தேர்வு முறை மற்றும் பயிற்சி முறை, அவர்களை தேசிய கண்ணோட்டத்தையே ஊட்டியிருக்கிறது என்றும், அதிகாரிகள் எந்த ஒரு பிரச்சினையையும் நாட்டின் நலன் என்ற கண்ணோட்டத்திலேயே அணுகுவதாகவும், பிராந்திய கண்ணோட்டத்துடன் பார்ப்பதில்லை என்றும், நடுநிலையாகவே செயல்படுகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

அதிகாரிகள் நடுநிலை தவறி செயல்படவிடாமல் தடுக்கும் அமைப்பு ரீதியான பாதுகாப்புகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மத்திய நீர்வளத்துறை செயலராக இருந்து ஓய்வு பெற்ற ஒரு தமிழ் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் நடத்தை நடுநிலையாக இருந்ததால், காவிரி நீர்ப்பிரச்சினை இருந்தபோதுகூட அவர் மீது கர்நாடக , கேரள அரசுகள் குறை கூறவில்லை என்று அவர் கூறினார்.

ரெகுநாதனின் பேட்டியை இன்றைய தமிழோசையில் நேயர்கள் கேட்கலாம்


உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான அமெரிக்க விஞ்ஞானியால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை - இஸ்ரோ தகவல்

சந்திரயான் விண்கலம்
சந்திரயான் விண்கலம்
சந்திரனை ஆராய இந்தியா அனுப்பிய விண்வெளிக் கலமான சந்திரயானில் சென்ற அமெரிக்க உபகரணங்களைக் கொண்டு ஆய்வு நடத்திய அமெரிக்க விஞ்ஞானி ஸ்டீவர்ட் டேவிட் நோசட் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இருந்தும் இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுருத்தலும் ஏற்படாது என்று இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இது பற்றி தமிழோசையிடம் பேசிய, இஸ்ரோவின் செய்தித் தொடர்பாளர் சதிஷ், ஏற்கனவே பல பாதுகாப்பு நடைமுறைகள் இஸ்ரோவில் அமலில் இருப்பதாகவும் ரகசிய விடயங்கள் தொடர்பான ஆவணங்கள் ஏதும் இவருக்கு கிடைக்க வாய்பில்லை என்றும் தெரிவித்தார்.

டேவில் நோசட் மேற்கொண்ட ஆய்வு குறித்த முழு விபரங்கள் இஸ்ரோவுக்குத் தெரியும் என்றும், ஆனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளது சந்திரயான் தொடர்பான திட்டங்களுக்காக அல்ல என்றும் அவர் மேலும் கூறினார்.


வட இந்தியாவில் ரயில் விபத்து - 22 பேர் பலி

இந்திய மீட்புப் பணியாளர்கள் ( ஆவணப்படம்)
இந்திய மீட்புப் பணியாளர்கள் ( ஆவணப்படம்)
வட இந்தியாவில் நடைபெற்ற ரயில் விபத்தொன்றில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதே எண்ணிக்கையிலானோர் காயமடைந்துள்ளனர்.

மதுரா நகர் அருகே நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது கோவா எக்ஸ்பிரஸ் மோதியதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இரண்டு ரயில்களும் டில்லியை நோக்கி சென்று கொண்டிருந்தன.

மோதமாக உடைந்து நொறுங்கிப் போயுள்ள ரயில் பெட்டிகளை உடைத்து அதில் சிக்குண்டுள்ள மக்களை மீட்க, மீட்புப் பணியினர் திணறிவருகின்றனர்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates