மனிக்பாம் நிவாரண கிராமத்தில் மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்; இருவர் அனுராதபுரதம் வைத்தியசாலையில்

வவுனியா மனிக்பாம் இராமநாதன் நிவாரண கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் மரம் ஒன்று முறிந்து கொட்டில் ஒன்றின் மீது வீழ்ந்ததில் அதிலிருந்த மூவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை பெய்த காற்றுடன் கூடிய சிறிது நேர கடும் மழையையடுத்து, மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் கொட்டில் ஒன்று சேதமாகியது. அதில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்து செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் இவர்கள் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
அன்னலிங்கம் நந்தகுமார் (34), அவரது மாமியாராகிய சின்னராசா மணி (56) மைத்துனியாகிய சின்னராசா பிரியா (18) ஆகிய மூவருமே இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களில் அன்னலிங்கம் நந்தகுமாருக்கு இரு கால்களிலும் முறிவு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இவர்களில் சின்னராசா மணி உடனடியாக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். புதன்கிழமை காலை அன்னலிங்கம் நந்தகுமாரும் அனுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தச் சம்பவத்தையடுத்து உடனடியாக அவ்விடத்திற்குச் சென்ற அதிகாரிகள் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இந்தச் சம்பவம் குறித்து இராமநாதன் நிவாரண கிராம பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
0 Response to "மனிக்பாம் நிவாரண கிராமத்தில் மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்; இருவர் அனுராதபுரதம் வைத்தியசாலையில்"
แสดงความคิดเห็น