செய்தியரங்கம்
![]() | ![]() |
இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் |
இந்திய சீன பிரதமர்கள் சந்திப்பு
அருணாசலப் பிரதேசம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக, சமீபத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அறிக்கைப் போராட்டம் நடைபெற்ற நிலையில், இரு நாட்டுத் தலைவர்களும் சனிக்கிழமை தாய்லாந்தி்ல சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.,
தாய்லாந்தில் நடைபெறும் ஆசியான் கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், சீனப் பிரதமர் வென் ஜியாபாவோவும் கலந்துகொண்டார்கள். அப்போது, இரு தலைவர்களும் தனியாகச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்கள்.
ஆனால், சர்ச்சைக்குரிய அருணாசலப் பிரதேசம் குறித்தோ அல்லது அடுத்த மாதம் அந்த மாநிலத்தின் தவாங் பகுதிக்கு தலாய் லாமா பயணம் செய்வது தொடர்பான சீன ஆட்சேபணை குறித்தோ இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பின்போது எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து செய்தியாளர்களிடம் விவரித்த கிழக்காசிய விவகாரங்களுக்கான இந்திய வெளியுறவுச் செயலர் என். ரவி, ' இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் உறுதியாக இருக்க, அரசியல் மட்டத்தில் இரு நாடுகளும் நல்ல புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.
இரு நாடுகளும், தங்களுக்கிடையிலான வேறுபாடுகள், ஒத்துழைப்புக்கு இடையூறாக இருக்க அனுமதித்துவிடக்கூடாது என்றும் பிரதமர் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு இந்த பிராந்தியம் மற்றும் உலக நலனைக் கருத்தில் கொண்டு அமைந்தது என்று வென் ஜியாபாவோ தெரிவித்த கருத்தையும் பிரதமர் ஆமோதித்தார்' என்றும் என். ரவி தெரிவித்தார்.
சீனப் பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தை சிறப்பாக இருந்ததாகவும், இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கையை வளர்க்க இருதரப்பும் ஒப்புக்கொண்டதாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், அருணாசலப் பிரதேசம், சீனா தனது எல்லைக்குள் உள்ள பிரம்மபுத்ரா ஆற்றில் அணை கட்டுவது தொடர்பான சர்ச்சை குறித்தோ, காஷ்மீர் குறித்த சீனாவின் நிலைப்பாடு குறித்தோ விவாதிக்கப்பட்டதாக இந்திய அதிகாரி தெரிவிக்கவில்லை. அவை பற்றி விவாதிக்கவில்லை என்று மட்டும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்காமல், ஒரு மணி நேரம் இரு தலைவர்களும பேச்சுவார்த்தை நடத்தியிருக்க முடியுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சீனப் பிரதமர் தவிர, ஜப்பான் பிரதமர் ஹதோயமாவுடனும் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தியுள்ளார். பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களில் இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் விவாதித்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கை போர் குற்றங்கள் குறித்து அறிய விசாரணை தேவை - ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம்
![]() | ![]() |
ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு |
இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் போர் குற்றங்கள் இடம்பெற்றதா என்பதை கண்டறிய விசாரணை தேவையாக இருக்கிறது என்று ஐ.நா மனித உரிமைகள் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையர் நவிபிள்ளை அவர்களின் சார்பில் பேசவல்லவர், பிபிசியிடம் கூறும்போது, சில குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை பார்க்கும் போது, காசா சண்டை குறித்து சமீபத்தில் நடைபெற்ற விசாரணை போல ஒரு விசாரணை தேவையாக இருப்பதாக கூறினார்.
முன்னதாக இந்த வாரத்தின் முற்பகுதியில் அமெரிக்க ராஜாங்கத்துறை போரின் இறுதியில் நடைபெற்ற சம்பவங்களை விவரித்து ஒரு அறிக்கை வெளியிட்டது, இவற்றில் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் இருக்கலாம் என்றும் கூறியிருந்தது.
தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க போவதில்லை - இலங்கை தமிழ் ஆய்வாளர் கார்த்திகேசு சிவத்தம்பி
![]() | ![]() |
பேராசிரியர் கார்த்திக்கேசு சிவத்தம்பி |
தமிழக அரசினால் நடத்தப்படவுள்ள உலகத் தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று இலங்கை தமிழ் ஆய்வாளரான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழர் அரசியல் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் திட்டவட்டமான நிலைப்பாடு எதனையும் எடுக்காதது குறித்து இலங்கை பலத்த விமர்சனம் இருப்பதாக கூறுகின்ற சிவத்தம்பி அவர்கள், இந்த நிலையில் தான் உலக தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் கலந்துகொள்வது சிரமமான விடயமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது நிலைப்பாடு தொடர்பாக மாநாட்டு உருங்கிணைப்பாளரான இராஜேந்திரன் அவர்களுக்கு தான் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
உலகத் தமிழர் தலைவராக தன்னைக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிற கருணாநிதி அவர்கள், இந்த விவகாரத்தில் ஒரு சாதகமான நிலைப்பாட்டினை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
செம்மொழி மாநாடு நடத்துவது மிகவும் பயனுள்ளது என்பதில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லாத போதிலும், அதில் அனைவரும் கலந்துகொள்வதற்கான சூழ்நிலையும் அவசியம் என்றும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கூறுகிறார்.
ஆனால், தமிழ் ஆய்வு மாநாட்டை அரசியலாக பார்க்கக்கூடாது என்று கூறுகிற தமிழக திட்டக்குழுவின் துணைத் தலைவரான நாகநாதன் அவர்கள், சிவத்தம்பியின் கருத்துடன் முறண்படுகிறார்.
இவர்கள் இருவரது செவ்விகளை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
![]() | ![]() |
கொட்கையில் மோதல் |
தலிபான்களின் முக்கிய நகரை கைப்பற்றியுள்ளதாக பாக் இராணுவம் கூறுகிறது
பாகிஸ்தானின் தெற்கு வசிரிஸ்தான் பழங்குடியினப் பிராந்தியத்தில் பெரும் எடுப்பிலான தாக்குதலை ஆரம்பித்து ஒரு வாரகாலத்தின் பின்னர், தலிபான் தலைவரான ஹகிமுல்லா மெஃதுத் அவர்களின் சொந்த ஊரான கொட்கையை கைப்பற்றியுள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் கூறுகிறது.
தலிபான்களின் மற்றுமொரு மூத்த தளபதியான குவாரி ஹுசைன் அவர்களுக்கும் சொந்த இடமான அந்த நகரை கைப்பற்றுவதற்கான மோதல்களில் 3 சிப்பாய்களும், 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இந்த தகவல்களை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.
பாகிஸ்தானிய அதிகாரிகளால் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல் என்று கூறப்படும் பிறிதொரு தாக்குதலில், பஜாவூர் பழங்குடியின மாவட்டத்தில், தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 14 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கான் அதிபர் இரண்டாம் சுற்றுத் தேர்தல் பிரச்சாரங்கள் சுறுசுறுப்பு
![]() | ![]() |
முதற்கட்ட தேர்தலின் போது |
ஆப்கானின் அதிபர் ஹமீது கர்சாய்க்கும், முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா அப்துல்லாவுக்கும் இடையிலான தேர்தலுக்கான அதிகாரபூர்வ பிரச்சாரங்கள் இடம்பெற்று வருகின்றன.
வாக்கெடுப்பு இன்னும் இரண்டு வாரங்களில் நடக்கவிருக்கிறது. ஆனால், பல ஆப்கானியர்கள் இந்த தேர்தல் நடைமுறைகள் குறித்து குழப்பமான நிலையில் இருப்பதாக காபூலுக்கான பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
இந்த தேர்தலில் பங்கேற்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று தலிபான்கள் மிரட்டியுள்ளனர்.
ஆகஸ்ட் மாதத்தில் நடந்த இந்தத் தேர்தலின் முதல் கட்டம் பரவலாக நடந்த முறைகேடுகளால் பாதிக்கப்பட்டது.
இந்தச் சுற்றின் போது ஆப்கானின் தேர்தல் ஆணையம் ஆயிரக்கணக்கான அதிகாரிகளை பணி நீக்கம் செய்ததுடன், முறைகேடுகள் நடந்த பல வாக்குச் சாவடிகளை இல்லாது ஒழித்துள்ளது.
ஜிம்பாப்வேவில் எம் டி சி கட்சியினரின் வீடுகளில் சோதனை
![]() | ![]() |
ஜிம்பாப்வே பிரதமர் மோர்கன் ஸ்வாங்கிராய் |
ஜிம்பாப்வே பிரதமர் மோர்கன் ஸ்வாங்கிராய் கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் பயன்படுத்திய வீட்டில் பொலிஸார், ஆயுதங்களை தேடுவதாக கூறி சோதனை செய்துள்ளதாக அக்கட்சி கூறியுள்ளது.
ஐம்பதுக்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இந்த வீட்டை துவம்சம் செய்து, ஆவணங்களை எடுத்து சென்றதாக எம் டி சி கூறுகிறது.
எம் டி சி கட்சியினரை அச்சப்படுத்துவதற்காகவே இந்த சோதனை இடம்பெற்றுள்ளதாக கட்சியின் சார்பின் பேசவல்லவரான நெல்சன் சாமிஸா கூறியுள்ளார்.
முன்னதாக தேசிய ஒற்றுமை கொண்ட அரசங்கத்தில் தன்னிச்சையாக இருந்து கொண்டு தேச நலனில் மோர்கன் ஸ்வாங்கிராய் அக்கறை இல்லாமல் இருக்கிறார் என்று அதிபர் ராபர்ட் முகாபே குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனால் தங்களுடைய கட்சி இது போன்ற அழுத்தங்களுக்கு அடிபணியாது என்றும் அவர் அரச நாளிதழுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
உலகமெங்கும் புவி வெப்பமடைதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
![]() | ![]() |
தொழிற்சாலைகளால் புவி வெப்பமடைகிறது |
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புவி வெப்பமடைவதால் ஏற்படும் ஆபத்து குறித்து உணர்த்துவதற்காக உலகம் முழுவதும் கண்கவரும் வகையிலான நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
கேப்டவுனின் டேபிள் மலையில் இருந்து மாபெரும் விளம்பர துணி ஒன்றை தொங்கவிட்டவர்கள், கரியமில வாயு வெளியேற்றத்தை பத்து கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளனர்.
லெபனானின் மத்திய பெய்ரூட் பகுதியில் ரோமன் காலச்சுவடுகள் அமைந்துள்ள இடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் சுவாச முகமூடிகளை அணிந்து கொண்டு குழுமியிருந்தனர்.
இதே போன்று ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரை முதல் இமாலய மலை வரையில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
0 Response to "செய்தியரங்கம்"
แสดงความคิดเห็น