jkr

அமெரிக்காவின் குற்றசாட்டுகளை விசாரித்து பொய்யென நிரூபிப்போம்- அரசாங்கம் அறிவிப்பு


இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றிருப்பதாக குறிப்பிட்டு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்நாட்டில் ஆய்வுகள் மற்றும் விசாரணைகளை நடத்தி அவற்றை பொய்யென நிரூபிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். காஸாவில் போன்று இலங்கையில் சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை கோரியுள்ளமையை வன்மையாக கண்டிக்கின்றோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இலங்கை தொடர்பில் காங்கிரஸுக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கை மற்றும் காஸாவில் போன்று இலங்கையில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று ஜெனிவா மனித உரிமை பேரவை கோரியுள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் 25 வருடகால யுத்தம் முடிவுறும் தறுவாயில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து விசாரித்து அவற்றுக்கு பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதுடன் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் தயாரிக்கப்படட்டுள்ள அறிக்கையும் காங்கிரஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் யுத்தக் குற்றச் செயல்கள் புரியப்பட்டனவா என்பதைக் கண்டறிவதற்கு, காஸாவில் இடம்பெற்ற யுத்தம் குறித்து நடத்தப்பட்ட விசாரணை போன்றதொரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த கோரிக்கைகள் குறித்து அமைச்சர் சமரசிங்க தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் கூறியதாவது

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் தயாரிக்கப்படட்டுள்ள அறிக்கை யில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்கள் நூறு வீதம் உறுதிபடுத்தப்பட்டவை அல்ல என்பதை திணைக்களமே ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த அறிக்கை முழுமையான சட்டத்தன்மையுடன் தயாரிக்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது. எனினும் இந்த அறிக்கைக்கு பதிலளிக்கவேண்டியதும் அந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று நிரூபிப்பதும் எமது பொறுப்பாகும். காரணம் இது வெறுமனே ஊடக அறிக்கையல்ல. மாறாக உலகின் மிகவும் வல்லமை பொருந்திய செல்வந்த நாடாக விளங்கும் அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களத்தினால் தாயரிக்கப்பட்டு காங்கிரஸுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையாகும்.

அத்துடன் காங்கிரஸிலிருந்து இந்த அறிக்கை செனட் சபைக்கு செல்லும் சாத்தியமும் இருக்கினற்து. எனவே இந்த அறிக்கை தொடர்பில் நாங்கள் அலட்சியத்துடன் இருக்க முடியாது. இதனை பொய்யென நாங்கள் நிரூபிக்கவேண்டும். இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கையில் காணப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்பதனை நிரூபிக்கவேண்டும். ஏற்கனவே செனல் 4 விவகாரம் பொய்யானது என்று ஆதாரங்களுடனேயே நிரூபித்தோம்.

எமது இராணுவத்தினர் எவ்வாறு ஒழுக்கத்துடன் செயற்பட்டனர் என்பது எங்களுக்கு தெரியும். எனவே நாங்கள் இந்த அறிக்கை தொடர்பில் நன்றாக ஆராய்ந்து விசாரணை நடத்தி குற்றச்சாட்டுக்கள் அனைத்து பொய்யானவை என்று அமெரிக்காவுக்கு நிரூபிக்கவேண்டும். இது எமது பொறுப்பாகும். ஏற்கனவே இந்த நடைமுறையை செனல் 4 விவகாரத்தில் கையாண்டோம்.

இதேவேளை காஸாவில் போன்று இலங்கையில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளதை இலங்கை அரசாங்கம் வன்மையாக கண்டிக்கின்றது. இவ்வாறு கோரிக்கை ஒன்றை விடுப்பதற்கு ஐ.நா. மனித உரிமை பேரவை பேச்சாளருக்கு எந்த உரிமையும் இல்லை.

இலங்கை விவகாரம் தொடர்பில் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையில் விசேட அமர்வு ஒன்று இவ்வருடம் நடத்தப்பட்டது. அதில் மேலதிக வாக்குகளை பெற்று நாங்கள் வெற்றியடைந்தோம். அதன்போது கருத்து வெளியிட்டு ஜெனிவாவுக்கான இந்திய வதிவிட பிரதிநிதி விசேட அமர்வு நடத்தப்பட்டமை குறித்து திருப்தியிவெளியிடும் மனித உரிமை பேரவை அமர்வின் முடிவை மதிக்கவேண்டும் என்று கூறியிருந்தார். அவரின் கூற்றை இங்கு நினைவூட்டுகின்றோம்.

அரசாங்கங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட இந்த அமர்வில் இலங்கை அரசாங்கம் வெற்றிபெற்றது. எனவே எமது வெற்றியை ஐ.நா. மனித உரிமை பேரவை மதிக்கவேண்டும். விசேட அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறும் வகையில் கூற்றுக்களை வெளியிடக்கூடாது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "அமெரிக்காவின் குற்றசாட்டுகளை விசாரித்து பொய்யென நிரூபிப்போம்- அரசாங்கம் அறிவிப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates