jkr

செய்தியறிக்கை


எல்லைப் பகுதியில் இடம்பெயரும் மக்கள்
எல்லைப் பகுதியில் இடம்பெயரும் மக்கள்

பாகிஸ்தான் தெற்கு வாசிரிஸ்தான் பகுதியில்
பாரிய படைநடவடிக்கை

பாகிஸ்தானில் ஆப்கானிய எல்லையை ஒட்டிய தெற்கு வாசிரிஸ்தான் பகுதியில் அல்கைதாவினர் மற்றும் தாலிபான்கள் வலுவாகவுள்ள பிரதேசங்களில் இராணுவத்தினர் பல்லாயிரக்கணக்கானோர், டாங்கிகள், ஆர்டில்லரி எறிகுண்டுகள் சகிதம் எதிர்பார்க்கப்பட்டிருந்த ஒரு தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

தீவிரவாதிகள் கடுமையான எதிர்த் தாக்குதல்களை நடத்திவருவதாகவும், தற்போதைய நடவடிக்கை ஆறு முதல் எட்டு வாரங்கள் வரையில் நீடிக்கும் என்றும் பாகிஸ்தான் இராணுவம் சார்பாகப் பேசவல்ல மேஜர் ஜெனரல் அதர் அப்பாஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அப்பகுதியில் அனைத்து சாலைகளையும் இராணுவத்தினர் அடைத்துவிட்டுள்ளனர் என்பதால் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் மோதல் பிரதேசங்களில் இருந்து வெளியேறுவதற்கு சிரமப்படுகிறார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்பகுதியில் ஆயுததாரி இலக்குகள் மீது வாரக்கணக்கில் விமான மற்றும் எறிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்து தரைவழித் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


"ஜிம்பாப்வேயில் நீதித்துறை சுயாதீனத்தின் அறிகுறி தென்படத் தொடங்கியுள்ளது" - விடுதலையான ராய் பென்னெட்

ஜிம்பாப்வேயில் அடக்குமுறைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்று
ஜிம்பாப்வேயில் அடக்குமுறைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்று
ஜிம்பாப்வேயில் பிரதமர் மார்கன் சாங்கிராய்யின் மூத்த ஆலோசககரான ராய் பென்னெட் இரண்டு நாள் சிறைவைப்புக்குப் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீதித்துறை சுயாதீனமாக செயல்பட ஆரம்பித்துள்ளதற்கான அறிகுறி தென்பட ஆரம்பித்துள்ளதாக விடுதலையான பென்னெட் கூறியுள்ளார்.

ஆயுதம் வைத்திருந்த குற்றம் மற்றும் பயங்கரவாத குற்றம் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு ராய் பென்னெட் கைதாகியிருந்தார்.

நம்பகத்தன்மை மிக்க நீதிபதிகள் ஜிம்பாப்வேயில் முன்னிலைக்கு வருகிறார்கள் என்று பென்னெட் குறிப்பிட்டுள்ளார்.

பென்னெட் விடுதலை ஆகியிருந்தாலும் அமைச்சரவை கூட்டங்களில் பங்கேற்பதை ஜனநாயக மாற்றத்துக்கான இயக்கம் தவிர்க்கும் என சாங்கிராய் சார்பாக பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


கினி மீது ஆயுதத்தடை

கினியில் இராணுத்தினர்
கினியில் இராணுத்தினர்
கினி இராணுவ ஆட்சியாளர்களால் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் கொடுமைகளைக் கண்டித்து அந்நாட்டின் மீது ஆயுதத்தடையை விதிப்பதற்கு மேற்கு ஆபிரிக்க பிராந்திய அமைப்பான எக்கோவாஸி்ன் உறுப்பு நாடுகள் தீர்மானித்துள்ளன.

கினி படையினர் எதிர்க்கட்சிப் பேரணி மீது கடந்த மாதம் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கண்டித்து நைஜீரியாவில் இடம்பெற்ற எக்கோவாஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நூற்று ஐம்பதுக்கும் அதிகமான பொதுமக்கள் இதில் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்புகள் குற்றஞ்சாட்டின.

ஆனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதனைவிட குறைவானது என்று கினி அரசாங்கம் கூறுகிறது.


வியட்நாமில் கடத்தப்படும் காட்டுப்புலிகள்

வியட்நாமில் வேட்டையாடப்படும் புலிகள்
வியட்நாமில் வேட்டையாடப்படும் புலிகள்
வியட்நாமில் தலைநகர் ஹனோய் நோக்கி வாடகை வாகனம் ஒன்றில் பனிக்கட்டிகளில் உறையச் செய்யப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு புலிகளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

வாகன சாரதி உட்பட நான்கு பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வியட்நாமில் காட்டுப்புலிகள் மிக அரிதாகவே காணப்படுவதாக நம்பப்படுகிறது.

புலித் தோல் மற்றும் அதன் உடல் பாகங்கள் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட, சட்டத்தால் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு வியட்நாம் கறுப்பு சந்தையில் பெரும் கிராக்கி நிலவுகிறது.

இந்த நடவடிக்கை தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் பெரும் கடத்தல் வலையமைப்புடன் தொடர்பு பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த புலிகள் பெரும் பண்ணைகளில் கூடுகளில் அடைக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருக்கலாம் என கைப்பற்றப்பட்ட புலிகளை பரிசோதனை செய்துள்ள நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

செய்தியரங்கம்
வவுனியா இடைத்தங்கல் முகாம்
வவுனியா இடைத்தங்கல் முகாம்

"சொந்த வீடுகளில் தீபாவளிக் கொண்டாட வேண்டும் என்பதே பிரார்த்தனை" - வவுனியா முகாம் மக்கள்

இலங்கையின் வடக்கே இம்முறை பட்டாசு வெடிகளுடன் தீபாவளி கொண்டாடப்பட்டிருக்கின்றது. இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்தபின்னர் கொண்டாடப்படுகின்ற முதலாவது தீபாவளி இது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் அச்சமின்றி கோவில்களுக்குச் சென்று வந்ததாகவும் தீபாவளியை அமைதியான முறையில் அனுஸ்டித்ததாகவும் பலரும் தெரிவிக்கின்றனர்.

எனினும் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் தீபாவளி பண்டிகையைவிட அதனுடன் சேர்ந்து வந்துள்ள கெளரி காப்பு விரதத்திற்காகப் பலரும் கோவில்களுக்குச் சென்று வழிபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முகாம்களிலும் சிறு சிறு கோவில்கள் அமைக்கப்பட்டு, அங்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள்.


இலங்கை முகாம்களிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் - லண்டனில் பேரணி

லண்டன் பேரணியொன்று - (ஆவணப் படம்)
லண்டன் பேரணியொன்று - (ஆவணப் படம்)
இலங்கையின் வடக்கே வவுனியாவில் இலங்கை அரசு அமைத்துள்ள முகாம்களில் உள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிககையை முன்வைத்து லண்டனில் சனிக் கிழமையன்று ஒரு பேரணி நடைபெற்றது. அகதிகள் முகாம்களை வதை முகாம்கள் என்று பேரணியில் கலந்து கொண்டவர்கள் வர்ணித்தனர்.

இலங்கை இராணுவம் முகாமில் உள்ளவர்களை துன்புறுத்துவது போன்ற காட்சிகளையும் பேரணியில் வந்தவர்கள் நடித்து காட்டினார்கள். இந்தப் பேரணியில் புலம் பெயர் தமிழர்கள் தவிர பிரிட்டனில் உள்ள பசுமைக் கட்சியைச் சேர்ந்தவர்களும் சில இடது சாரி அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று இருந்தனர்.

சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் இந்தப் பேரணி நடைபெற்றது. வரும் நாட்களில் இந்தப் பிரச்சனைகள் குறித்து பிரிட்டிஷ் பிரதமரிடம் மனு ஒன்றை அளிக்கவும் .திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பேரணியின் நோக்கங்கள் குறித்து பிரிட்டனிய தமிழர் பேரவையின் ஊடகத் துறையைச் சேர்ந்த சாம் கிருஷ்ணா கூறிய கருத்துக்களை இன்றைய நிகழ்சியில் நேயர்கள் கேட்கலாம்


தமிழகத்தில் பட்டாசு விபத்து - 32 பேர் பலி

மீட்பு நடவடிக்கை
மீட்பு நடவடிக்கை
தமிழக ஆந்திர எல்லையில் உள்ள பள்ளிப்பட்டு என்ற ஊரில் முறையாக அனுமதி எதையும் பெறாமல் இயங்கி வந்த ஒரு பட்டாசுக் கடையில் வெள்ளிக் கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் இறந்தனர். 3 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்மந்தப்பட்ட கடை முறையான அனுமதி எதையும் பெறாமல் இயங்கி வந்ததாகவும், மின் கசிவு காரணமாகக் கூட இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதாகவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். இச் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்


அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தமிழ் வர்த்தகர் மீது குற்றச்சாட்டு

ராஜ் ராஜரட்ணம்
ராஜ் ராஜரட்ணம்
இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் பங்கு சந்தை வர்த்தக முதலீட்டாளராக விளங்கும் ராஜ் ராஜரட்ணம் என்ற தமிழர் உட்பட ஆறு பேர் மீது நியூயார்க்கின் நீதிமன்றம் ஒன்று குற்றச்சாட்டொன்றை (Hedge fund insider trading scheme) சுமத்தியுள்ளது.

அதிக லாபம் ஈட்டித்தரும் முதலீட்டு வகைகளில் இரகசியத் தகவல்களை சட்டவிரோதமாகக் கசியவிட்டு சந்தை நிலவரத்தை செயற்கையாக மாற்றி இலாபம் தேடியது என்ற குற்றத்தை பங்கு சந்தை சரித்திரத்தில் இதுவரை இல்லாதபடிக்கு மிகப் பெரிய அளவில் இவர்கள் செய்துள்ளார்கள் என்று கருதப்படுகிறது.

அமெரிக்காவின் மிகப் பெரியப் பணக்காரர்களில் ஒருவராகப் பெயர் பெற்றவர் இந்த ராஜ் ராஜரட்ணம்.

இது பற்றிய மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


நீருக்கடியில் ஒரு அமைச்சரவைக் கூட்டம்

நீச்சலுடையில் மாலைதீவுகளின் அமைச்சரவை
நீச்சலுடையில் மாலைதீவுகளின் அமைச்சரவை
இந்து மா சமுத்திரத்தின் தீவுக்கூட்டங்களான மாலைதீவுகள், காலநிலை மாற்றம் மற்றும் கடல் மட்டம் அதிகரிப்பதால் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலை அடையாளப்படுத்தும் முகமாக, அந்நாட்டின் அமைச்சரவைக்குழு நீருக்கடியில் கூட்டமொன்றை நடத்தி முற்றிலும் மாறப்பட்ட விழிப்புணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த நாட்டின் அனேகமான பாகங்கள் கடல் மட்டத்திலிருந்து ஒரு மீற்றருக்கும் குறைவான உயரத்திலேயே அமைந்துள்ளதால், கடல் மட்ட அதிகரிப்பு காரணமாக 2100 ம் ஆண்டளவில் தீவுக்கூட்டங்கள் வசிப்பதற்கு உகந்ததல்லாதவையாக மாறக்கூடிய அச்சுறுத்தல் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மாலைதீவுகளின் அதிபர், துணை அதிபர் மற்றும் பெண் ஒருவரை உள்ளடக்கிய அமைச்சரவைகுழு முழுமையும் இந்த கூட்டத்தில் பங்கெடுத்துள்ளது.

வாயு மண்டலத்தில் காபனீர் ஒட்சைட் வெளியேற்றத்தை மிக பாதுகாப்பான மட்டத்திற்கு, அதாவது இன்றுள்ள ஒவ்வொரு பத்து லட்சத்திலும் 387 துகள்கள் என்ற அளவிலிருந்து 351 துகள்களாக குறைக்குமாறு உலகத்தை கேட்டுக்கொளும் ஆவணம் ஒன்றும் இந்த அமைச்சரவைக்கூட்டத்தில் கைச்சாத்தாகியுள்ளது.

இந்த நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தமது நாடு முழுமையும் நீரில் மூழ்கிவிடும் அபாயம் நேரக்கூடும் என மாலைதீவுகளின் இளந்துடிப்பு மிக்க அதிபர் மொஹமட் நஷீட் தெரிவித்தார்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates