jkr

செய்தியரங்கம்

செய்தியரங்கம்
இந்திய சிறார்கள்
இந்திய சிறார்கள்

குழந்தைகளின் இறப்பு வீதத்தை பெருமளவில் குறைக்க குறைந்த பணமே போதும் என்கிறது சேவ் த சில்ட்ரன் அமைப்பு

உலக மட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குணப்படுத்தப்படக் கூடிய நோய்களாலேயே அநாவசியமாக இறப்பதை, ஒப்பீட்டளவில் சிறிய தொகை பணத்தின் மூலமே, பெருமளவில் குறைக்க முடியும் என்று பொதுமக்களை உணரச்செய்யும் தமது மிகப்பெரிய பிரச்சாரத்தை, சர்வதேச உதவி நிறுவனமான ''சேவ் த சில்ட்ரன்'' அமைப்பு ஆரம்பிக்கிறது.

நாலாயிரம் கோடி டாலர்கள் கூடுதல் நிதி இதனை எட்டப் போதுமானது என்று அது கூறுகிறது.

இந்தியாவில் சிறப்பான பொருளாதார வளர்ச்சி காணப்படுகின்ற போதிலும், அங்கு சிறார் இறப்பு வீதம் மற்றும் சிறார் போஷாக்கின்மை ஆகியன அதிர்ச்சி தரக்ககூடிய அளவில் இருப்பதாக அது குறிப்பிடுகிறது.

இந்தியாவில் பிறக்கின்ற குழந்தைகளில், பிறந்த முதல் நாளிலேயே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை வருடத்துக்கு 4 லட்சம் என்பதுடன், உலகில் குழந்தைகளின் இறப்பு வீதத்தில் 20 வீதத்தை இந்தியா கொண்டிருக்கிறது.


இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க பாஜக தேமுதிக எதிர்ப்பு

இந்தியாவில் உள்ள சில இலங்கை அகதிகள்
இந்தியாவில் உள்ள சில இலங்கை அகதிகள்
தமிழகத்தில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேலான இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டுமென்ற தமிழக முதல்வர் கருணாநிதியின் கோரிக்கைக்கு பாரதீய ஜனதாவும், தேசிய முற்போக்கு திராவிடர் கழகமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இலங்கை இனப்பிரச்சினையின் விளைவாக இந்தியாவில் தஞ்சம் புகுந்து, தமிழகத்தில் பத்துப் பதினைந்து ஆண்டுகளாக அரசு நடத்திவரும் முகாம்களிலும் வெளியேயும் வாழ்ந்து வரும் அகதிகள் அனைத்து உரிமைகளும் பெற்று இந்தியாவிலேயே தொடர்ந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களாக திமுக வற்புறுத்தி வருகிறது. இது தொடர்பாக முதல்வர் கருணாநிதியும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

பொதுவாக இக்கோரிக்கைக்கு தமிழகக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சரும் கோரிக்கை பரிசீலிக்கப்படுவதாகக் கூறியிருக்கிறார்.

அவ்வாறு இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உரிமை பெற்றுத்தருவது இலங்கையில் தமிழ் இனமே இருக்கக் கூடாது என்று செயல்பட்டு வரும் அதிபர் ராஜபக்ஷவுக்கு துணைப் போவதாக அமையும் என பாரதீய ஜனதா கட்சி கூறியிருக்கிறது.

நேற்று சென்னையில் நடைபெற்ற தமிழக பா.ஜ.க.வின் செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது கட்சியின் தமிழகப்பிரிவின் துணைத்தலைவர் எச். ராஜா இலங்கையின் பூர்வீக இனமான தமிழர்களை அந்த நாட்டிலேயே பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலையை மத்திய, மாநில அரசுகள் அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தினார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியேற்ற உரிமை வழங்குவது என்பது இலங்கையில் நடைபெறும் இனவெறி அரசின் கொள்கைகளை நாமே நிறைவேற்றி வைப்பதைப்போல் ஆகிவிடும், எனவே அத்தகைய கொள்கையினை தனது கட்சி ஒருபோதும் ஏற்காது என்றார்.


வவுனியா முகாம் மக்கள் மழைக்கு அஞ்சத் தேவையில்லை என்கிறது அரசாங்கம்

முகாம் மக்கள்
முகாம் மக்கள்
வட இலங்கையில் பருவமழைக் காலம் நெருங்கிவருவதால், அங்குள்ள பெரிய இடம்பெயர்ந்தோர் முகாம்கள் நிலை தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இடம்பெயர்ந்தோர் முகாம்களில் மழைக்காலத்தை கருத்தில்கொண்டு வெள்ள வடிகால் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

முகாம்களில் இருந்து மக்கள் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் என ஐ.நா.வும், இலங்கையின் எதிர்க்கட்சிகளும் கோருகின்றன. முகாம்வாசிகளில் பத்து வீதத்திற்கும் குறைவானவர்களே இதுவரையில் வெளியில் விடப்பட்டுள்ளர்கள் என்பதை இலங்கை அதிகாரிகள் ஒப்புகொண்டுள்ளனர்.

இதனிடையே, இடம்பெயர்ந்தோர் முகாம்கள் நிரந்தர குடியிருப்புகளாகவோ, ஓரளவு நிரந்தர குடியிருப்புகளாகவோ மாற்றப்பட்டுவருவது கவலையளிப்பதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தானில் அதிகரித்துவரும் வன்செயல்கள்- ஒரு ஆய்வு

இன்று தாக்குதல் நடந்த இடம்
இன்று தாக்குதல் நடந்த இடம்
பாகிஸ்தானில் உலக உணவுத்திட்டத்தின் அலுவலகத்தில் குண்டு ஒன்று வெடித்துள்ளது. அதில் மூவர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

அங்கு தலைநகரில் நடக்கும் தொடர்ச்சியான தாக்குதல்களில் தற்போது நடந்திருப்பது இது.

பெரும்பாலான இப்படியான தாக்குதல்கள் பாதுகாப்பு படைகளை இலக்கு வைத்ததாய் அல்லது மேற்குலகுடன் பலமான தொடர்புடைய வணிகங்கள் அல்லது அமைப்புக்களை இலக்கு வைத்ததாய் இருக்கும்.

கடந்த இரு வருடங்களில் தீவிரவாதிகளின் வன்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில், கிளர்ச்சிக்காரர்கள் நகரங்களில் உள்ள முக்கியமான இடங்களை இலக்கு வைத்து தாக்குவதில் அதிக கவனத்தைக் குவிக்கிறார்கள்.

இந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், தலிபான் ஆதரவு தலைவர் ஹக்கிமுல்லா மெஃசுட் அவர்களால் அண்மையில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை அடுத்து இது நடந்திருக்கிறது.

கடந்த ஆகஸ்டில் கொல்லப்பட்ட தீவிரவாதத் தலைவர், பைதுல்லா மெஃசுட் அவர்களின் மரணத்துக்கான பதிலடியாக, தாக்குதல்கள் அதிகரிக்கப்படுமென்று அவர் மிரட்டியிருந்தார்.

பழங்குடியினப் பகுதியில் நடத்தப்பட்ட வான் தாக்குதலுக்கு பதிலடி வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இவையனைத்தும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களை அதிகரிக்கச் செய்துள்ளன.

அமெரிக்கர்களின் ஆதரவுடன் தெற்கு வசிரிஸ்தானில், பாகிஸ்தான் படைகளால் முழுமையான இராணுவ நடவடிக்கை ஒன்று நடத்தப்படும் என்ற ஊகமும் அதிகரித்து வருகின்றது.

அங்கு கடந்த பல மாதங்களாக நடத்தப்பட்ட வான் தாக்குதல்கள் மற்றும் சிறிய அளவிலான தேடுதல்களை அடுத்து களத்தில் மேலும் கடுமையான நடவடிக்கை தேவை என்று அமெரிக்கா, பாகிஸ்தானை வலியுறுத்தி வருகின்றது.

பகிஸ்தானில் உள்ள தலிபான்கள்
பகிஸ்தானில் உள்ள தலிபான்கள்
முழு அளவிலான தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக பல பொதுமக்கள் ஏற்கனவே அங்கிருந்து இடம்பெயர்ந்துவிட்டார்கள்.

மிகவும் கரடுமுரடான மற்றும் ஒதுக்கப்புறமான இடமாக பிரபல்யமான அந்தப் பகுதியில், பனியும் கொட்ட ஆரம்பித்துவிட்டால், அங்கு எடுக்கப்படக் கூடிய நடவடிக்கை மிகவும் ஆபத்தானதாக அமையும்.

ஆகவே அமெரிக்க கூட்டணிக்கும், பாகிஸ்தானிய தலைவர்களுக்கும் இடையில் திரைமறைவில் போராட்டம் தீவிரமடைந்துவிட்டது.

தமது அரசாங்கத்துக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் உள்ள , பிரச்சினை மிக்க அந்தப் பிராந்தியத்தில், சக்தி மிக்க பழங்குடியினருக்கு எதிராக பெரும் போரை முன்னெடுக்க பாகிஸ்தானிய நிர்வாகம் இன்னமும் அச்சமிகு தயக்கத்துடனேயே இருக்கிறது.

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க எதிர்ப்புணர்வு காரணமாகவும் இந்த பதற்றம் மேலும் அதிகரிக்கிறது.

அங்கு வளர்ந்து வருகின்ற பாதுகாப்பின்மையாலும் மற்றும் அமெரிக்கர்கள் தலையீடு செய்கிறார்கள் என்று தாம் நம்புவதாலும், பலர் மத்தியில் மன அழுத்தம் அதிகரித்து வருகிறது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியரங்கம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates