jkr

செய்தியறிக்கை


இராக்கில் குண்டுத்தாக்குதல்
இராக்கில் குண்டுத்தாக்குதல்

இராக் தலைநகரில் குண்டுத்தாக்குதல்களில் 130 பேர் பலி, பலர் காயம்

இராக் தலைநகர் பாக்தாத்தின் மத்திய நகர்ப்பகுதியில் இரண்டு அரச கட்டடங்களை இலக்கு வைத்து இந்த இரண்டு பாரிய குண்டுத் தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல்கள் தற்கொலைக் குண்டுதாரிகளால் நடத்தப்பட்டதாகக் கூறும் இராக் பொலரிசார் மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.

மத்திய பக்தாத்தில் மிக சன சந்தடி மிக்க பகுதியொன்றில் இன்று காலை நேரத்தில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

வெடிமருந்துகளால் நிரப்பப்பட்ட இரண்டு வாகனங்கள் சிறு விநாடிகள் நேர வித்தியாசத்தில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன.

நீதியமைச்சுக் கட்டடத்தின் மீது மோதிய முதல் வாகனம் அமைச்சுக் கட்டடத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாவது குண்டு உள்ளூர் ஆளுநர் அலுவலகத்திற்கு அருகில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

தாக்குதல்களால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டே நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், காயமடைந்தவர்களை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வண்டிகள் வீதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதமடைந்ததாகவும் பொலிஸார் மேலும் விளக்கினர்.


இரானின் அணு செறிவாக்கும் ஆலையை பார்வையிட்டுள்ளார்கள் கண்காணிப்பாளர்கள்

அணு செறிவாக்கும் ஆலை
அணு செறிவாக்கும் ஆலை

மேற்கத்தைய நாடுகள் இடையே புதிய சந்தேகங்களை ஏற்படுத்திய இரானின் அணு செறிவாக்கும் உலை ஒன்றை சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

கடும் பாதுகாப்பு நிறைந்த இந்த உலை புனித நகரான குவாமின் மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ளது, இந்த உலைக்கு சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆய்வாளர்கள் சென்றுள்ளனர்.

இந்த உலையை இதுவரையில் வெளி உலகத்தின் பார்வைக்கு காண்பிக்காமல் வைத்து இருந்தது இரான்.

இதற்கிடையே, செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை வெளியே அனுப்பி அவற்றை எரிபொருளாக மாற்றும் சர்வதேச திட்டத்திற்கு இரானில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு ஒரு முடிவை இந்த வாரத்தில் கூறுவதாக அரசாங்கம் உறுதி கூறியுள்ளது.


அல் அக்சாவில் மோதல்

அல் அக்சா
அல் அக்சா

ஜெருசேலத்திலுள்ள அல் அக்சா பள்ளி்வாசலுக்கு அருகில் பாலஸ்தீனிய வழிபாட்டாளர்களுக்கும் இஸ்ரேலிய பொலிசாருக்குமிடையில் மூண்ட மோதல்களையடுத்து குறைந்தது 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெற்றோல் குண்டுகளாலும் கற்களாலும் தம்மீது தாக்குதல் நடத்தி கலகத்தில் ஈடுபட்டவர்களை பள்ளிவாசலுக்கு வெளியே இரண்டு தடவைகள் கலைத்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கலகத்தை தூண்டிய குற்றச்சாட்டில், ஜெருசலேம் விவகாரங்களுக்கான பலஸ்தீனிய அமைச்சர் ஹட்டம் அப்தல் காதரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றார்.

யூத கடும்போக்காளர்கள், டெம்பிள் மௌண்ட் வளாகத்துக்குள் உள்நுழைந்து அதன் புனிதத் தன்மையைக் கெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக பாலஸ்தீனியர்கள் மத்தியில் பல வாரங்களாக உலாவிய வதந்தியை அடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


எகிப்து ரயில் விபத்து குறித்து விசாரணை

எகிப்து ரயில் விபத்து
எகிப்து ரயில் விபத்து

எகிப்தில் இருபத்தைந்து பேர் பலியாவதற்கு காரணமான இரு ரயில்கள் மோதி கொண்ட விபத்தை ஆராய ஆரம்பித்துள்ளார்கள் எகிப்திய அதிகாரிகள். தெற்கு கெய்ரோவில் இருக்கின்ற கிசா என்ற பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மாடு ஒன்றின் மீது மோதியதால் முதலாவது ரயில் உடனடியாக நின்றுள்ளது. இதனையடுத்து இரண்டாவது ரயில் அதிவேகமாக முதலாவது ரயில் மீது மோதியுள்ளது.

விசாரணை தொடங்கியிருப்பதாகவும், இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் மொஹமது மன்சூர் கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக எகிப்தில் ரயில்கள் விபத்துகளில் சிக்கியுள்ளன.

செய்தியரங்கம்
இடம்பெயர்ந்த மக்கள்
இடம்பெயர்ந்த மக்கள்
மீள்குடியேற்றத்திற்கு மேலதிகமான மக்களை அனுப்ப நடவடிக்கை - அரச அதிகாரிகள்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்திற்கு இரண்டாம் தொகுதியாக ஆயிரம் பேர் மீள்குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த வியாழக்கிழமை முதல் தொகுதியாக துணுக்காய் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 297 குடும்பங்களில் 75 வீதமானவர்கள் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த பாடசாலைகளில் இருந்து தமது வீடுகள் காணிகளுக்குச் சென்று விட்டதாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

வவுனியா மனிக்பாம் முகாம்களில் தங்கியுள்ள யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் பத்து நாட்களுக்குள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இதுபற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


திருகோணமலைக்கு அனுப்பட்டவர்களில் புலி உறுப்பினர்கள் கைது - இலங்கை இராணுவம்

இராணுவத்தினர்
இராணுவத்தினர்

வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் பலர் இராணுவத்தினரால் கைது செய்யப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து இலங்கை இராணுவத்தின் பதில் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவிடம் வினவப்பட்ட போது, அதனை உறுதிப்படுத்தும் முகமாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் திருகோணமலைக்கு கொண்டு வந்ததன் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் அங்கு வைத்தும் அடையாளம் காணப்படுகின்றார்கள் என்றும் அவ்வாறு அடையாளம் காணப்பட்டதன் பின்னர் அவர்களை கைது செய்து வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கை அரசு மீது தடை விதிப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் - ஆஸ்திரேலிய பசுமை கட்சி

தஞ்சம் கோருவது அதிகரிப்பு
தஞ்சம் கோருவது அதிகரிப்பு

இலங்கை தமிழர்கள் நடத்தப்படும் விதம் குறித்து கவலைகள் இருக்கும் நேரத்தில் இலங்கை மீது தடைகள் விதிப்பது குறித்து ஆஸ்திரேலிய அரசாங்கம் ஆலோசனை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய பசுமை கட்சியின் தலைவர் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் இலங்கையை விட்டு வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவதை தடுக்க வேண்டுமானால் மேலதிகமான நடவடிக்கை தேவையாக இருப்பதாக பசுமை கட்சியின் தலைவர் பாப் பிரவுன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை இந்த ஆண்டின் முற்பகுதியில் இலங்கை அரசு முடிவுக்கு கொண்டு வந்தது. இதன் பின்னர் தஞ்சம் கோரும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் 75க்கும் மேற்பட்ட தஞ்சம் கோரும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற கப்பலை ஆஸ்திரேலிய கடற்படை மீட்டு இருந்தது.


இலங்கையின் கிழக்கே சந்தேக படகில் சோதனை

மட்டக்களப்பில் சந்தேக படகு
மட்டக்களப்பில் சந்தேக படகு

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு பெரிய கல்லாறு கடலோரம் சட்ட விரோத ஆட் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஆழ் கடல் மீன்பிடிப் படகொன்று கைவிடப்பட்ட நிலையில் கரையொதுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் சனிக்கிழ மை மாலை மட்டக்களப்பு பெரிய கல்லாறு கடலோரப்பகுதிக்கு சென்ற களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் அங்கிருந்த படகை சோதனையிட்ட போது ஒரு தொகுதி மருந்துப் பொருட் கள், தண்ணீர் போத்தல்கள், எரிபொருள் நிரப்பப்பட்ட கொள் கலன்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள், மற்றும் அரிசி, கடலை பிஸ்கட் உட்பட உணவுப் பொருட்கள் ஆகியவற்றை அந்த படகில் கண்டெடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குறிப்பிட்ட படகில் வெளிநாட்டு பயணமொன்றின் நிமித் தம் சட்ட விரோத குடியேற்றக்காரர்கள் பயணம் செய்திருக்க லாம் என பரவலாக ஊகங்கள் நிலவுகின்ற போதிலும் தமது விசாரணைகள் நிறைவடைந்த பின்னரே இது பற்றிய தகவல் களை தங்களால் உறுதியாக தெரிவிக்க முடியும் என காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பிட்ட படகில் சுமார் 18 முதல் 20 பேர் வரை பயணம் செய்திருக்கலாம் என தாம் கருதுவதாகவும் குறித்த படகு தொடர்பாகவும் அதில் பயணித்தவர்கள் தொடர்பாகவும் விசாரனைகள் தொடர்வதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates