மூன்று வருடங்களின் பின் மட்டு. திரும்பும் ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் நிலவிய சூழ்நிலை காரணமாகவும், தமக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாகவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், த.கனகசபை, தங்கேஸ்வரி கதிர்காமர், எஸ்.ஜெயானந்தமூர்த்தி (தற்போது லண்டனில்) ஆகியோர் கொழும்பில் தமது குடும்பத்தினருடன் தங்கியிருந்தனர்.
மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பா.அரியநேத்திரன், த.கனகசபை ஆகியோர் நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு திரும்பியுள்ளனர். மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமரும் ஓரிரு நாட்களில் மட்டக்களப்பு திரும்பவிருப்பதாகத் தெரிய வருகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் நேற்று திங்கட்கிழமை மாவட்ட செயலகத்திற்கு சென்று அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உட்பட பல அதிகாரிகளைச் சந்தித்தார்.
ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது, கிழக்கு மாகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து அவரது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதன் போது அங்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி மற்றும் உத்தரவாதங்களையடுத்தே குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு திரும்ப முடிவெடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
0 Response to "மூன்று வருடங்களின் பின் மட்டு. திரும்பும் ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்கள்"
แสดงความคิดเห็น