jkr

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தரைமட்டமான குன்னூர் ரிசார்ட்- பலரின் கதி என்ன?

குன்னூர்: நிலச்சரிவுகளால் பெரும் உயிர்ச்சேதங்களைக் கண்டு சோகத்தில் மூழ்கியுள்ளக குன்னூரில் இன்னொரு சோகமாக, அங்குள்ள தனியார் ரிசார்ட் ஒன்று, காட்டாற்று வெள்ளத்தி்ல் தரைமட்டமானது. அங்கு தங்கியிருந்த பலரது கதி என்ன என்று தெரியவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கொட்டிய கன மழையால் நீலகிரி மாவட்டம் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கேத்தி உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நிலச்சரிவுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரியில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 634 செ.மீ., மழை பெய்துள்ளது. இதில் கேத்தியில் மட்டும் அதிகபட்சமாக ஒரே நாளில் 82 செ.மீ., மழை பெய்தது.

பலத்த மழை காரணமாக, மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நிலச்சரிவுகளில் சிக்கியும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் 43 பேர் இறந்துள்ளனர்.

ஊட்டியில் இருந்து கோத்தகிரிக்கு செல்லும் சாலையும், குன்னூருக்கு செல்லும் சாலையும் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலையில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.

ரிசார்ட் தரைமட்டம்...

இதற்கிடையே குன்னூரில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.

குரும்பாடி என்ற இடத்தில் அந்த ரிசார்ட் உள்ளது. பெங்களூரைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது. காட்டாற்று வெள்ளத்தில் அந்த ரிசார்ட்டின் பெரும் பகுதி வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டு விட்டது.

அந்த சமயத்தில் அங்கு 50 பேர் வரை இருந்தனர் என்று கூறப்படுகிறது. அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை.

ரிசார்ட் இருந்த இடம் இப்போது வெறும் மண் மேடாகக் காட்சி அளிக்கிறது.

நேற்று நீலகிரி வந்த மத்திய, மாநில அமைச்சர்களான ராசா, வீரபாண்டி ஆறுமுகம், பொங்கலூர் பழனிச்சாமி, ராமச்சந்திரன் ஆகியோர் சேதப் பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வை முடித்துக் கொண்ட பின்னர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையிலான அமைச்சர்கள் குழு சென்னை திரும்பி முதல்வர் கருணாநிதியை சந்தித்து சேத விவரம், வெள்ள பாதிப்பு குறித்து அறிக்கை கொடுத்தனர்.

வரலாறு காணாத சேதம்...

நீலகிரி மாவட்டத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள துணை ராணுவம் , தமிழக காவல்துறையின் அதிரடிப்படை ஆகியவை வரவழைக்கப்பட்டுள்ளது.

சாலைகள் அனைத்தும் மிக மோசமான முறையில் சேதமடைந்துள்ளது அவர்களை அதிர வைத்துள்ளது.

பெட்ரோல், டீசலுக்குத் தட்டுப்பாடு...

வாகனப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், ஊட்டி, குன்னூர் நகர்களில் பெட்ரோல், டீசலுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் வரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஒட்டுமொத்தமாக அலங்கோலமாகிக் கிடப்பதால் சேதத்தை சரி செய்ய நீண்ட நாட்களாகும் எனக் கருதப்படுகிறது.

மலை ரயில் காலவரையின்றி ரத்து...

ரயில் பாதை பெருமளவில் பல இடங்களில் சேதமடைந்திருப்பதால், ஊட்டி மலை ரயில் சேவை காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது.

முழு வீச்சில் சீரமைப்பு பணி:

இந் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் முழு வீச்சில் சீரமைப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

சேதமடைந்துள்ள 105 கிலோமீட்டர் சாலையை சீரமைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. விழுந்து கிடக்கும் மரங்கள், கட்டட இடிபாடுகளை அகற்றும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

துணை ராணுவத்தினரும் இப்பணியில் முழு அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பெட்ரோல், டீசலுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு சற்று குறைந்திருக்கிறது. தற்போது மழையும் ஓய்ந்திருப்பதால் குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் மெதுவாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தரைமட்டமான குன்னூர் ரிசார்ட்- பலரின் கதி என்ன?"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates