இந்தியாவுக்காக ஆடுவது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமை- சச்சின்

மும்பை: கிரிக்கெட் விளையாட்டில் 20வது வருடத்தை தொட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், இந்தியாவுக்காக விளையாடுவது தனக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமை என்று கூறியுள்ளார்.
1989ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி பாகிஸ்தானில் நடந்த டெஸ்ட் போட்டியில் 16 வயது சிறுவனாக அறிமுகமானார் சச்சின். அன்று தொடங்கி இன்று வரை இந்திய கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் ஆதிக்கம்தான்.
அவரைச் சுற்றி ஏகப்பட்ட சாதனைகளும், விமர்சனங்களும் குவிந்து கிடக்கின்றன. இருப்பினும் சாதனைகள்தான் பெரிதும் பேசப்படுகின்றன. கடந்த 20 வருடங்களாக சச்சின் சளைக்காமல் விளையாடி வருவது அனைவருக்கும் வியப்பையும், ஆச்சரியத்தையும் அளிக்கத் தவறவில்லை.
இந்த நிலையில், தனக்குள் இன்னும் அந்த 16 வயது சச்சின் இருப்பதாக கூறியுள்ளார் டெண்டுல்கர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் இன்று பேசுகையில், 1989ம் ஆண்டு நான் பாகிஸ்தான் அணியுடன் ஆடியதை நான் மறக்கவில்லை. எனது வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம் அது.
இந்தியாவுக்காக முதல் முறையாக ஆடிய நாள் எனக்கு மிகவும் முக்கியமானது. இன்றும் இந்தியாவுக்காக ஆடி வருவதை எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமையாக, கெளவரமாக கருதுகிறேன்.
2003ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின்போது பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த சதம் எனது சதங்களிலேயே சிறப்பானது.
இத்தனை காலமாக எனக்கு ஆதரவளித்து வரும் இந்திய மக்களுக்கும், ரசிகர்களுக்கும், எனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.
எனது குடும்பம் எனது வளர்ச்சியி்ல் மிக முக்கியப் பங்காற்றியுள்ளது. இந்திய மக்கள் என் மீது கொண்டுள்ள அன்புக்கும், ஆதரவுக்கும் கடமைப்பட்டுள்ளேன். எனக்கென்று கோடானு கோடி ரசிகர்கள் கிடைத்திருப்பதும் பெருமையாக உள்ளது.
நான் எளிமையாக இருப்பதில் எந்தவித விசேஷமும் இல்லை. எனது குடும்ப பின்னணி அப்படி. வளர்ப்பிலேயே என்னை எளிமையான மனிதனாக வளர்த்து விட்டார்கள்.
ஒருவரது வாழ்க்கையில், கல்வி, இலக்கு, முன்னுரிமை மிகவும் முக்கியம். சிறந்த கிரிக்கெட் வீரராக என்னை நான் மேம்படுத்திக் கொண்டேன். எங்கெல்லாம் நான் பயிற்சிக்காக செல்கிறேனோ அதில் ஒரு இலக்கு இருக்கும். முன்னோக்கியே நமது பார்வை இருக்க வேண்டும்.
1989ம் ஆண்டு நான் கிரிக்கெட் விளையாட வந்தபோது இருந்ததற்கும் இப்போது உள்ள கிரிக்கெட்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் வந்து விட்டன. புதிதாக டுவென்டி 20 பிரபலமடைந்துள்ளது. அதை விட முக்கியமாக இப்போதெல்லாம் டெஸ்ட் போட்டிகளில் முடிவு தெரிந்து விடுகிறது என்றார் சச்சின்.
சச்சின் சாதனைகள்..
டெஸ்ட் போட்டிகள்- 159
ரன்கள் - 12,773
விக்கெட்கள் - 44
ஒரு நாள் போட்டிகள் - 438
ரன்கள் - 17,178
விக்கெட்கள் - 154.
முதல் தர போட்டிகள் - 261
ரன்கள் - 21,672
விக்கெட்கள் - 69
அதிகபட்ச ஸ்கோர்
ஒரு நாள் போட்டி - 186 (நாட் அவுட்)
டெஸ்ட் போட்டி- 248 (நாட் அவுட்)
முதல் தர போட்டி- 248 (நாட் அவுட்)
சதங்கள்
ஒரு நாள் போட்டி - 45
டெஸ்ட் போட்டி - 42
முதல் தரப் போட்டி - 69
டெஸ்ட் போட்டி அறிமுகம் - 15.11.1989
ஒரு நாள் போட்டி அறிமுகம் - 18.12.1989
டுவென்டி 20 போட்டி - 1
ரன்கள் - 10.
விக்கெட் - 1.
உலக சாதனைகள்
- அதிக டெஸ்ட் ரன்கள் (12,773)
- அதிக டெஸ்ட் சதங்கள் (42)
- அதிக ஒரு நாள் போட்டி ரன்கள் (17,178)
- அதிக ஒரு நாள் போட்டி சதங்கள் (45)
- அதிக உலகக் கோப்பை போட்டி ரன்கள் (1,796)
- ஐந்து முறை ஒரே ஆண்டில் 1000 ரன்கள் சேர்த்த பெருமை - 1997, 1999, 2001, 2002, 2008. (மாத்யூ ஹெய்டன், ரிக்கி பான்டிங், லாராவும் இதே சாதனையை வைத்துள்ளனர்)
- ஏழு முறை ஒரே ஆண்டில் 1000 ரன்கள் சேர்த்த பெருமை - 1994, 1996, 1997, 1998, 2000, 2003 and 2007. இது சச்சின் மட்டுமே படைத்த சாதனை.
- 50க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டி சதங்களை அடித்த முதல் வீரர். ஒரு நாள் போட்டிளில் 45, டெஸ்ட் போட்டிகளில் 42 - மொத்தம் 87.
0 Response to "இந்தியாவுக்காக ஆடுவது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமை- சச்சின்"
แสดงความคิดเห็น