jkr

செய்தியறிக்கை


கோம் அணு உலையைக் காண்பிக்கும் படம்
கோம் அணு உலையைக் காண்பிக்கும் படம்

அணு ஆலைகள் குறித்து இரான் பதிலளிக்க வேண்டிய கேள்விகள் பல இருப்பதாக ஐ. நா கூறுகிறது

ஐ.நா மன்றத்தின் அணுசக்தி நிறுவனம், இரான் சமீபத்தில் அறிவித்த அணு சக்தி நிலையத்தின் நோக்கம் குறித்து, இன்னும் பதிலளிக்கப்படவேண்டிய கேள்விகள் இருப்பதாகக் கூறியுள்ளது.

முன்னதாக, கோம் என்ற இடத்தில் ஒரு யூரேனியச் செறிவூட்டும் உலை ஒன்று இருப்பது குறித்து இரான் அறிவிக்கத் தவறியமை, இரானில் வேறு ரகசியமான அணுசக்தி உலைகள் இருக்கும் சாத்தியக்கூறு குறித்த கேள்விகளை எழுப்புவதாக, தனது அறிக்கையில் ஐ.நா மன்ற அணுசக்தி நிறுவனம் கூறியது.

இந்த இடத்திற்கு தனது கண்காணிப்பாளர்கள் செல்ல முழு சுதந்திரம் கடந்த மாதம் தரப்பட்டது என்றும், அவர்கள் இந்த உலையின் கட்டுமான வேலைகள் பெருமளவு முடிந்துவிட்ட நிலையில் இருப்பதாகவும், இந்த உலை 2011 ஆம் ஆண்டில் இயங்கத் தொடங்கும் என்றும் கூறப்பட்டதாக ஐ.நா மன்ற அணுசக்தி நிறுவனம் கூறியது. இந்த உலை இருப்பதை இரான் செப்டம்பர் மாதத்தில்தான் அறிவித்தது.


இரானில் ரஷ்யா நிர்மாணிக்கும் அணு ஆலையில் தாமதம்

ரஷ்யாவின் தாமதம்
ரஷ்யாவின் தாமதம்
இதற்கிடையே, தெற்கு இரானில் ரஷ்யா கட்டிக்கொண்டிருக்கும் ஒரு அணு சக்தி நிலையம், திட்டமிட்டபடி, இந்த ஆண்டு தொடங்கப்படாது என்று ரஷ்யா கூறியுள்ளது.

புஷேர் என்ற இடத்தில் கட்டப்பட்டுவரும் இந்த நிலையம் தொடங்கப்படுவதில் தொழில் நுட்பக் காரணங்களால் தாமதம் ஏற்படுவதாக ரஷ்ய எரிசக்தி அமைச்சர் கூறினார்.

ஆனால் இரான் அதன் அணுசக்தி திட்டம் குறித்து தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டு வருவது குறித்து ரஷ்யா விரக்தி அடைந்திருப்பதையே இந்த நடவடிக்கை காட்டுவதாக பிபிசியின் மாஸ்கோ செய்தியாளர் கூறுகிறார்.

ஏவுகணை தற்காப்பு அமைப்பு குறித்த பிரச்சினையிலும் பதற்றம் அதிகரித்துள்ளது. ரஷ்யா இந்த தற்காப்பு அமைப்பை இந்த ஆண்டு முன்னதாகவே தந்திருக்கவேண்டும் என்று இரான் கூறுகிறது.


'உணவு உற்பத்தியில் பேராசை'- பாப்பரசர்

பாப்பரசர்
பாப்பரசர்
உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்வது குறித்த பிரச்சினையில், பேராசைதான் பெருமளவில் பங்காற்றுகிறது என்று ரோம் நகரில் கூடிய, உணவு குறித்த உச்சி மாநாடொன்றில் பேசுகையில், போப் 16வது பெனடிக்ட் கூறினார்.

இந்தப் பேராசைதான் தானியங்களை விற்பதில் ஊக வணிகத்துக்கு இடம் கொடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.

உணவு மானியங்கள் வழங்குவதை சீர்திருத்தம் செய்ய வேண்டிய தேவை இருப்பதாகக் கூறிய போப்பாண்டவர், இந்த மான்யங்கள் விவசாயத்துறைக்கு பெரும் ஊறுவிளைவிப்பதாகக் குறிப்பிட்டார்.

முன்னதாக, ஐ.நா மன்றத் தலைமைச் செயலர், பான் கி மூன், உலகின் மிக வறிய மக்கள், ஒரு மோசமான நிலையில் இருப்பதாகவும், இது பல லட்சக்கணக்கான உயிர்களை அச்சுறுத்துவதாகவும் கூறி, பசி குறித்த பிரச்சினைக்கு மேலும் கூடுதலாக ஒருங்கிணைக்கப்பட்ட அணுகு முறையைக் கோரினார்.


தஞ்சம் நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை ஆஸ்திரேலியா திருப்பியனுப்புகிறது

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி இந்த ஆண்டின் முற்பகுதியில் அங்கு படகு மூலம் வந்து சேர்ந்த இலங்கையர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, முப்பத்தைந்துக்கும் அதிகமானவர்கள் இலங்கைக்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் இலங்கையிலிருந்து 50 பேர்களை ஏற்றிக் கொண்டுவ வந்த படகினனை ஆஸ்திலேயிய ரோந்து படகினர் கிறிஸ்துமஸ் தீவுக்கு அருகில் மறித்தனர்.

சர்வதேச நடைமுறைகளுக்கு அமைய ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத் தேவை என்று கண்டறியப்பட்டவர்கள் மட்டுமே அங்கு தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் குடியுரிமைக்கு பொறுப்பான அமைச்சர் கிறிஸ் இவான்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் மட்டும் தமது நாட்டுக்கு படகு மூலம் வந்த சுமார் 127 பேர் தமது நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று ஆஸ்திரேலியா கூறுகிறது.

செய்தியரங்கம்
வவுனியா முகாம்
வவுனியா முகாம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வவுனியா முகாம்களுக்கு விஜயம்

வவுனியா முகாம்களில் வாழும் மக்களின் நிலைமை தன்னை நெகிழ்ச்சி கொள்ளச் செய்ததாக அவர்களைச் சென்று பார்வையிட்டுத் திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்க்ள் கொண்ட குழு ஒன்று இலங்கை அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இன்று வவுனியாவில் உள்ள முகாம்கள் மற்றும் வன்னியில் மக்கள் சிலர் மீள்குடியேற்றப்பட்ட இடங்கள் ஆகியவற்றைச் சென்று பார்வையிட்டுத் திரும்பியது.

அந்தக் குழுவில் இடம்பெற்ற செல்வம் அடைக்கலநாதன் அவர்கள், தமிழோசையிடம் பேசுகையில், அந்த மக்களை உடனடியாக மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அரசாங்கத்துக்கு தாம் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கவிருப்பதாக தெரிவித்தார்.

தற்போதை மழை காரணமாக முகாம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஆயினும், தமது உடனடி மீள்குடியேற்றத்தையே அந்த மக்கள் அவசரமாகக் கோருவதாகவும் தெரிவித்தார்.

இவை குறித்த அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சிகளில் கேட்கலாம்.


சரத் பொன்சேகா பதவி விலகினார்

சரத் பொன்சேகா
சரத் பொன்சேகா
இலங்கையின் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா அவர்கள், தான் கேட்டதற்கும் இரு வாரங்கள் முன்னதாகவே பதவியில் இருந்து உடனடியாக விலக உத்தரவிடப்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளை வெற்றிகொண்ட இராணுவத்தின் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, அந்தப் போரின் வெற்றியை அடுத்து பதவிமாற்றம் செய்யப்பட்டதால், அதிருப்தி அடைந்ததாக அரசாங்கத்துக்கு கடந்த வாரம் ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார். அத்துடன் இந்த மாத முடிவுடன் தான் தனது பதவியை இராஜினாமா செய்வதாகவும் அவர் அதில் கூறியிருந்தார்.

இருந்தபோதிலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை அவருக்கு இலங்கை ஜனாதிபதியின் செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில், அவர் உடனடியாக பதவியில் இருந்து விலகிச் செல்லலாம் என்று கூறப்பட்டிருந்தது.

அதற்கமைய இன்று நடந்த ஒரு பிரியாவிடை வைபவத்துடன் அவர் தனது அலுவலகத்தில் இருந்து விலகிச் சென்றதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விரைவில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதி தேர்தலில் இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து சரத் பொன்சேகா போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சரத் பொன்சேகா, தனது அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து மூன்று நாட்களில் அறிவிப்பதாகக் கூறியுள்ளார்.


'நீலகிரி நிலச்சரிவால் வீடிழந்தவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும்' கருணாநிதி

முதல்வர் கருணாநிதி
முதல்வர் கருணாநிதி
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு காரணமாக வீடுகளை இழந்த 1,869 குடும்பங்களுக்கு தற்காலிக குடியிருப்புகள் 15 நாட்களுக்குள் கட்டித்தரப்படும் என்றும் அடுத்த 6 மாதங்களுக்குள் அவர்கள் அனைவருக்கும் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் எனவும் தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

அந்த மாவட்டத்தில் அண்மையில் பெய்த கன மழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு ஏராளமான வீடுகள் புதையுண்டன. சுமார் 53 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மழைச் சேதம் குறித்து முதல்வர் கருணாநிதி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டடத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தற்காலிக வீடுகளை உடனேயே கட்டித்தர முடிவெடுக்கப்பட்டதாகவும், அவ்வாறு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ. 70,000 வரை வீதம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

இந்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதும் தற்போது முகாம்களில் தங்கியுள்ளவர்கள் அவற்றில் போர்க்கால அடிப்படையில் குடியமர்த்தப்படுவர்.

தவிரவும் அதற்கு அடுத்த ஆறு மாத காலத்திற்குள் இவர்களுக்கு நிரந்தரமான புதிய வீடுகளைக் கட்டித் தரவும் முதல்வர் உத்தரவிட்டிருப்பதாக அந்தச் செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates