நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த சந்தர்ப்பம் தாருங்கள் - ஜெனரல் சரத் பொன்சேகா

தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்வதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்தார்.
“நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாதொழிப்போம்” என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தோருடனான கூட்டம் இன்று கொழும்பு ஜே.ஆர். ஜயவர்தன நிலையத்தில் நடைபெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கரு ஜயசூரிய, பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் பங்கேற்ற ஜெனரல் சரத் பொன்சேகா,
"நான் முன்னர் வகித்த பதவிகளில் அதற்குரிய சலுகைகள் கிடைத்தன. அவை போதாது என்பதைக் காரணம் காட்டி ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட வரவில்லை. எனக்கு எந்தவிதப் பிரச்சினையும் இருக்கவில்லை. நான் இறுதியாக அரசாங்க பதவி வகித்த காலத்தில் பாதுகாப்புக்கென 25 வாகனங்களுடன் 600 படையினர் வழங்கப்பட்டிருந்தார்கள்.
எனக்கென தனிப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் அந்தச் சலுகைகள் அனைத்தும் எனது தராதரத்தில் இருந்த அனைத்து உயரதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டிருந்தன.
எனக்கு அந்தப் பதவியில் இருந்து அனைத்து சலுகைகளையும் அனுபவித்திருக்க முடியும். அமைச்சுப் பதவியொன்றை வழங்குவதற்குக் கூட ஜனாதிபதியின் செயலாளர் என்னிடம் வந்து கதைத்தார். ஆனால், இவை எல்லாவற்றையும் விடுத்து மக்கள் நலனுக்காக களமிறங்கத் தீர்மானித்தேன்.
நாட்டில் ஜனநாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதிலும் நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன்.
வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு சரியானதொரு தீர்வு எட்டப்பட வேண்டும். நான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட பின்னர் வாழ்க்கைச் செலவுகளை குறைத்து பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தை ஏற்படுத்த உழைப்பேன்.
பெண்களின் உழைப்பை குறைத்து மதிப்பிட முடியாது. யுத்தத்தில் கூட பெண்களுக்கு மிக முக்கியமானதொரு பங்கு உண்டு. இலங்கையில் ஐம்பது வீதத்திற்கு மேற்பட்டோர் பெண்களே இருக்கின்றனர். எனக்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு தேவை. ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக என்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்யும்படி நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
0 Response to "நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த சந்தர்ப்பம் தாருங்கள் - ஜெனரல் சரத் பொன்சேகா"
แสดงความคิดเห็น