தமிழ் வேட்பாளரை நிறுத்தாவிடின் சுயேச்சையாக களமிறங்குவேன்- சென்னையில் சிவாஜிலிங்கம் எம்.பி. சூளுரை

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை தமிழ் வேட்பாளரை கூட்டமைப்பு தேர்தலில் நிறுத்தாவிட்டால் நானே சுயேற்சையாக களமிறங்கி போட்டியிடுவேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. ஜிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி ராஜபக்ஷவும், முன்னாள் தளபதி பொன்சேகாவும் எதிரெதிராக தேர்தல் களத்தில் நிற்கிறார்கள். இது தவிர தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த சிங்கள தலைவர் ஒருவர் இடதுசாரிகள் முன்னணி சார்பில் போட்டியிடுகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை ராஜபக்ஷவையோ, பொன்சேகாவையோ நிச்சயமாக ஆதரிக்க முடியாது. இனப்படு கொலை செய்த இவர்களை ஆதரிக்கக் கூடாது என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமாகும்.
ராஜபக்ஷவும், பொன்சேகாவும் தொடர்ந்து எங்களுக்கு தூது அனுப்பி வருகிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்கள். எந்த நிலையிலும் இவர்களை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.
எங்கள் கூட்டமைப்பின் சார்பில் ஒரு தமிழ் வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவோம். தமிழர் வெற்றி பெற முடியாத நிலை இருந்தாலும் இலங்கை தமிழர்களின் உணர்வுகளை உலகம் அறிய செய்வதற்காக இந்த போட்டி அவசியமாகும்.
இதனால் எத்தகைய நெருக்கடி ஏற்பட்டாலும் எங்கள் உயிரே போனாலும் நாங்கள் எந்த சமரசத்துக்கும் உடன்பட மாட்டோம்.தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்க வேண்டும். இதனை எங்கள் கூட்டமைப்பின் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன்.
ஒருவேளை எங்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தாவிட்டால் நானே சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன்.
0 Response to "தமிழ் வேட்பாளரை நிறுத்தாவிடின் சுயேச்சையாக களமிறங்குவேன்- சென்னையில் சிவாஜிலிங்கம் எம்.பி. சூளுரை"
แสดงความคิดเห็น