jkr

செய்தியறிக்கை


தாக்குதல் நடைபெற்ற இடம்
தாக்குதல் நடைபெற்ற இடம்

பாகிஸ்தான் - குண்டு தாக்குதலில் 20 பேர் சாவு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் தெற்குப் பகுதியில், வாசிரிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியான டேரா காசி கானில் ஒரு சக்தி வாய்ந்த கார் குண்டுத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

இதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஐம்பது பேர் வரை காயமடைந்துள்ளனர்.

ஒரு அங்காடிப் பகுதிக்கு அருகில் இருக்கும் ஒரு அரசியல்வாதியில் இல்லத்தை குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் அந்த அங்காடிப்பகுதிக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதது, அதே போன்று அந்த அரசியல்வாதியின் வீடும் சேதமடைந்துள்ளது. அந்தப் பகுதியில் இருந்த மேலும் பல கட்டிடங்களும் தாக்குதலில் அழிந்துள்ளன.

அந்த இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர்.

தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தானிய இராணுவம் மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் பகுதிக்கு அருகில் இந்தக் கார் குண்டுத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.


தாலிபான்கள் பிடியில் உள்ள கைதிகளை செஞ்சிலுவை சங்கம் பார்வையிட்டது

ஆப்கான் விவகாரங்களில் ஐ சி ஆர் சி முக்கியப்பங்காற்றுகிறது
ஆப்கான் விவகாரங்களில் ஐ சி ஆர் சி முக்கியப்பங்காற்றுகிறது

ஆப்கானிஸ்தானில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்தினர் 2001 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் தடவையாக தலிபான்களால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளை சென்று பார்த்திருக்கிறார்கள்.

நாட்டின் வடமேற்குப் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் அந்த கைதிகள் அனைவரும் ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த கைதிகளை பார்வையிட்டதை ஒரு திருப்பு முனை என்று காபூலில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமைப் பிரதிநிதியான ரெட்டோ ஸ்டொக்கர் விபரித்துள்ளார்.

தலிபான்களாலும், ஏனைய கிளர்ச்சிக்குழுக்களாலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளை பார்வையிடும் நடவடிக்கை தொடரும் என்று தான் நம்புவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.


ஆப்கானில் உள்ள பிரிட்டிஷ் படைகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள்

சினூக் ஹெலிகாப்டர்
சினூக் ஹெலிகாப்டர்

ஆப்கானிஸ்தானில் தனது இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக ஒரு பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகையில், கூடுதலாக 22 சினூக் ரக போக்குவரத்து ஹெலிகாப்டர்களை தாங்கள் வாங்கவுள்ளதாக பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு தேவையான பணத்துக்காக இதர இராணுவ செலவினங்களை குறைக்க பாதுகாப்பு அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக வாங்க முடிவு செய்யப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டர்களில் முதலாவது 2013 ஆண்டில் செயற்படத் தொடங்கும்.

ஆப்கானிஸ்தானில் இருக்கும் அதன் இராணுவ வீரர்களுக்கு போதிய அளவில் ஹெலிகாப்டர்கள் வழங்கப்படவில்லை என்று பிரிட்டிஷ் அரசு மீது குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.

அங்கு பிரிட்டிஷ் இராணுவத்தினர் உயிரிழக்க முக்கிய காரணமாக இருக்கும் சாலையோர வெடிகுண்டுகளை எதிர்த்து சமாளிப்பதற்கு மேலும் கூடுதலாக 250 மில்லியன் டாலர்கள் செலவழிக்கப்படும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தது.

செய்தியரங்கம்
போர் பகுதியில் சரணடைய முற்பட்டவர்களை இலங்கை இராணுவம் சுட்டதாக சேனல்4 செய்திவெளியிட்டது
போர் பகுதியில் இருந்து வெளியேறும் மக்கள்

இலங்கையில் தமிழர் சுட்டுக் கொல்லப்படும் வீடியோ உண்மை -பிரிட்டிஷ் பத்திரிக்கை

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போரின் இறுதிக் காலப்பகுதியில், இலங்கை இராணுவத்தினர் கைதிகளை சுட்டுக் கொல்லுவதாக குற்றஞ்சாட்டி அது தொடர்பில் வெளியான வீடியோப் படங்கள் ஆதாரமானவையே என்று பிரிட்டிஷ் நாளிதழ் ஒன்று கூறுகிறது.

ஜனவரியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோ ஐரோப்பாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு மனித உரிமை அமைப்பு வெளியிட்டிருந்தது.

இந்த வீடியோப் படப்பதிவில் இலங்கை இராணுவ சீருடையில் இருப்பதைப் போன்று தோன்றும் ஒருவர் நிர்வாணமாகவும், கண்கள் கட்டப்பட்ட நிலையிலும் இருந்த இருவரை சுட்டுக் கொல்வதாக காண்பிக்கிறது.

பிபிசி உட்பட இந்த வீடியோப் படப் பதிவு பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியது.

ஆனால் இந்த வீடியோ புனையப்பட்ட ஒன்று என்று இலங்கை இராணுவம் கூறுகிறது.

எனினும் சுயாதீனமான தடயவியல் நிபுணர் ஒருவர் நடத்திய ஒரு ஆய்வில் அந்த வீடியோ படப்பதிவில் ஏமாற்றும் செயலோ அல்லது ஒட்டி வெட்டும் வேலையோ இடம் பெறவில்லை என்று தெரியவந்துள்ளதாக அந்த அந்த நாளிதழ் கூறுகிறது.


ஐனாதிபதித் தேர்தலில் போட்டி -சிவாஜிலிங்கம் அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்
நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்

இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அறிவித்திருக்கிறார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் எந்த நிலைப்பாட்டை எடுப்பது என்று இதுவரை அறிவிக்காத நிலையில். சிவாஜிலிங்கம் அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இப்போது இருக்கும் பிரதான இரு வேட்பாளர்களில் ஒருவரை ஆதரிக்கக் கூடிய சூழலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லை என்று அவர் தெரிவித்தார்.

தமிழ் இனத்தின் பேரம் பேசும் திறனை அதிகப்படுத்தவே தான் போட்டியில் இறங்குவதாக அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய நடவடிக்கையின் ஒழுங்கு நடவடிக்கையை தான் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறிய சிவாஜிலிங்கம், தான் டெலோ அமைப்பில் வகித்து வந்த அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விலகப்போவதாகவும் அறிவித்துள்ளார்.


கீரிமலை சிவன்கோயில் திறப்பு

கீரிமலை ஆலயம்
கீரிமலை ஆலயம்

இலங்கையில் உள்ள மிகவும் தொன்மை வாய்ந்த சிவத்தலங்களில் ஒன்றாகிய யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்குப் பொது மக்கள் இன்று முதல் இராணுவத்தின் முன்னனுமதியின்றி சென்று வரலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்த ஆலயம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் பணிப்புரைக்கமைய பொதுமக்கள் சென்று வழிபடுவதற்காகத் திறந்துவிடப்பட்டிருக்கின்றது என வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்திருக்கின்றார்.

சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், சேந்தான்குளத்திலிருந்து கீரிமலைக்குச் செல்லும் வீதியை இன்று காலை வைபவரீதியாகத் திறந்து வைத்து நகுலேஸ்வரம் ஆலயத்திற்கான பொதுமக்களின் பிரயாணத்தை ஆரம்பித்து வைத்தார். இந்த வைபவத்தில் யாழ் அரச அதிபர் கே.கணேஸ், முக்கிய இராணுவ அதிகாரிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். ஆலயத்தைச் சென்றடைந்த இவர்கள் அங்கு இடம்பெற்ற விசேட பூசையில் கலந்து கொண்டார்கள்.

யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம்
யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம்

ஆலயத்திற்குச் செல்கின்ற பொதுமக்களின் வசதிக்காக யாழ்ப்பாணத்திலிருந்து பேருந்து போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன. எனினும் அங்கு எவரும் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பத்தொன்பது வருடங்களின் பின்னர் பொதுமக்கள் சென்று வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ள இந்த ஆலயம் பெரும் அழிவுக்கு உள்ளாகியிருந்ததாகவும் தற்போது அது புனரமைக்கப்பட்டு வருவதாகவும், ஆலய கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தின் ஆதீனகர்த்தா நகுலேஸ்வரக் குருக்கள் தெரிவித்திருக்கின்றார்.

இதுபற்றிய மேலதிகத் தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "செய்தியறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates