தொடர்ந்து வந்த தொலைபேசி மிரட்டல் - நாட்டை விட்டு அவசரமாக வெளியேறினார் போத்தல

இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும் திறனாய்வு ஊடகவியலாளருமான போத்தல ஜெயந்த தனது மனைவி மற்றும் மகளுடன் நேற்று முன் தினம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
கடந்த ஜூன் முதலாம் திகதி, இவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னரும், 'தாம் கூறியவாறு வாயை அடக்கி கொள்ளவில்லை எனில் கொலை செய்யப்படுவாய்' என அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புக்கள் அவரை தொடர்ந்துவந்தது.
காவற்துறையினரிடம் இது பற்றி முறையிட்ட போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இன்னமும் 38 மணி நேரத்திற்குள் அவருக்கு உயிராபத்து ஏற்படும் எனக்கருதிய கொழும்பு அரசியல் ராஜ தந்திரிகள் சிலர் போத்தல, மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோரை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பாதுகாப்பாக அழைத்து சென்று, வெளிநாடொன்றிற்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நடவடிக்கையானது இலங்கையில் அரசியல் ஸ்த்திரத்தன்மை இல்லை என்பதை வெளிநாட்டு ராஜதந்திரிகள் உணர்ந்துகொள்ள கிடைத்திருக்கும் இன்னொரு சந்தர்ப்பம் என, இலங்கை மனித உரிமை சட்டத்தரணி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
'அரசாங்க ஊடக நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு, அரச படையினருக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் விமர்சிக்க வேண்டாம் எனவும், இராணுவத்தை நேசிக்கும் மக்கள் நாட்டில் இருப்பதாகவும் அவர்களினால் இந்த ஊடகவியலாளர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் அதனை நாம் பொறுப்பேற்க போவதில்லை எனவும், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால், கடந்த மே 28 ம் திகதி, மறைமுக அச்சுறுத்தலுக்கு உள்ளான போத்தல, அதன் பின்னரே கடுமையாக தாக்கப்பட்டு, வைத்திய சாலையில் அனுமதிக்கபப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சண்டே லீடர் பிரதான ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை, த நேசன் பத்திரிகையின் ஊடகவியலாளர் தாக்கபப்ட்டமை, சண்டே லீடர், யாழ், உதயன் பத்திரிகை ஆசிரியர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை, தமிழ் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை, என தொடரும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள், பக்க சார்பின்றி, நியாயத்தை எழுதி வருபவர்களுக்கு கிடைத்து வரும் வெகுமதியாகவும், அவர்களின் ஜனநாயா உரிமைகள் பறிக்கப்பட்ட முக்கிய நிகழ்வுகளாகவும் பதிவாகியுள்ளன.
Read Users' Comments (0)