jkr
แสดงบทความที่มีป้ายกำกับ ஐரோப்பிய ஒன்றியம் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ ஐரோப்பிய ஒன்றியம் แสดงบทความทั้งหมด

இலங்கைக்கு எதிராக தடை விதிக்கும் திட்டமில்லை : ஐரோப்பிய ஒன்றியம்


இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கும் திட்டமெதுவும் இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் தடைகள் விதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது :

"மனித உரிமை மீறல் பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ச்சியாக ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இலங்கையின் உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக பயணத் தடைகள் விதிக்கப்படலாம் என வெளியான செய்திகளில் உண்மையில்லை.

இலங்கைக்கு எதிராக தடைகளை விதிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்விதத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்ட நீடிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. குறித்த சலுகைத் திட்டம் மறுக்கப்பட்ட போதிலும், அதனை அடிப்படையாகக் கொண்டு தடைகள் விதிக்கப்பபட மாட்டாது.

பயணத் தடைகள் விதிக்கப்பட வேண்டுமாயின், ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

இலங்கையுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு விரும்புகின்றது.

சலுகைத் திட்டம் வழங்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் உத்தியோகபூர்வ பதில் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வார்த்தைகளினால் அல்ல செயலினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் ‐ ஐரோப்பிய ஒன்றியம்‐ ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடததத் தயார் ஆனால் விசாரணைகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது – அரசாங்கம்


இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வார்த்தைகளிலான உறுதிமொழிகளைவிடவும் செயல் ரீதியான நடவடிக்கைகளையே தாம் வலியுறுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமை மீறல் மற்றும் ஊடக அடக்குமுறை போன்ற சம்பவங்கள் தொடர்பில் இலங்கை காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில்; நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தின் மூலம் இலங்கை தொடர்பான நிலைப்பாடு தெளிவாக விளக்கப்பட்டுள்ளதென பாராளுமன்றத்தின் தெற்காசிய விவகாரப் பொறுப்பாளர் ஜேன் லெம்பார்ட் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் குழுவினால் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடே தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்ட நீடிப்பு தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றத்தினால் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது எனவும், அது ஐரோப்பிய ஒன்றியத்தின் தனிப்பட்ட தீர்மானம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலைமை மற்றும் ஊடக அடக்குமுறைகள் உடனடியாக முடிவுறுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை வழங்குதல், ஊடக அடக்குமுறை போன்ற விடயங்கள் தொடர்பில் அண்மையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடததத் தயார் ஆனால் விசாரணைகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் :

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு தயார் எனவும், விசாரணைகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும் இலங்கை அரசாங்கம் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையில் விசாரணைகளை நடாத்துவதற்கு ஆதரவளிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளது.

விசாரணைகளை நடத்துவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமது நிபந்தனைகளுக்கு உட்படாத நாடு ஒன்றுக்கு ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தை வழங்குவதில் சிக்கல் காணப்டுவதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி பேர்னார்ட் செவாஜ் தெரிவித்துள்ளார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலங்கையின் மனித உரிமை நிலை திருப்தியாக இல்லை : ஐரோப்பிய ஒன்றியம்


இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தகவல் வெளியிட்டுள்ளதாக இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தை வழங்குவதற்கான சாத்தியங்கள் வெகு குறைவாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்தச் செய்தியில்,

"சர்வதேச மனித உரிமை சட்ட திட்டங்களுக்கு அமைவான வகையில் இலங்கை செயற்படவில்லை என்பது விசாரணைகளின் மூலம் புலனாகியுள்ளதென ஐரோப்பிய ஒன்றிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, நூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஜீ.எஸ்.பி வரிச் சலுகைத் திட்டத்தை இலங்கை இழக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 25 ஆண்டு காலமாக நீடித்து வந்த யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்த விசாரணை அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் எதிர்வரும் வாரத்தில் வெளியிடவுள்ளது.

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கு தேவையான அடிப்படை நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்யவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் மறுக்கப்பட்டால் அதனை பொருளாதாரத் தடையாக கருத முடியாது எனவும், உரிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தவறும் சகல நாடுகளும் இந்த சந்தர்ப்பத்தை இழக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காவல்துறை அடக்குமுறைகள், சித்திரவதைகள், தொழில் சட்டங்கள் மீறப்பட்டமை போன்ற பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை இழக்க நேரிட்டால் பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவு ஏற்படக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மேலும் ஆறு மாத கால அவகாசம் தேவைப்படும் என குறிப்பிடப்படுகிறது" என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates