ஆயுதமற்ற விடுதலைப்புலி ஆதரவாளர்களின் கைப்பொம்மையாக பொன்சேகா மாறிவிட்டார் அமைச்சர் டலஸ் அழகப்பெரும குற்றச்சாட்டு

ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளை அழிப்பதற்கு பங்களிப்பு வழங்கிய ஜெனரல் சரத் பொன்சேகா இன்று ஆயுதமற்ற புலி ஆதரவாளர்களின் கைப்பொம்மையாகிவிட்டார். எனவே, எதிர்வரும் 26 ஆம் திகதியை இந்த நாட்டு மக்கள் தீர்க்கமானதும் உணர்வுபூர்வமானதுமான தினமாகக் கருதி செயற்படவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாளரும், போக்குவரத்து அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
கடந்த மே மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் இந்த நாட்டில் தமிழ் பெண்கள் சல்வார் அணிந்துகொண்டு பஸ்களில் பயணம் செய்ய முடியாத நிலைமை காணப்பட்டது. எனினும் அந்த நிலைமையை எமது ஜனாதிபதி மாற்றியுள்ளார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பு மாகவலி கேந்திர நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:
எதிர்வரும் 27 ஆம் திகதி வரப்போகின்ற தேர்தல் முடிவு குறித்து எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. எமது ஜனாதிபதி பாரிய வெற்றியை ஈட்டுவார். அதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக சுயாதீன மற்றும் வெளிநாட்டு அமைப்புக்களால் செய்யப்பட்டுவரும் கருத்து கணிப்புக்களில் ஜனாதிபதி முன்னிலையில் இருக்கின்றார். இரண்டாவது காரணமாக ஜனாதிபதியின் கூட்டங்களில் கலந்துகொள்ளும் அதிக கூடிய மக்கள் வெள்ளத்தை பாருங்கள். நாளுக்குநாள் மணிக்கு மணி மக்கள் திரண்டுவருகின்றனர். மூன்றாவதாக இரண்டு வேட்பாளர்களினதும் கொள்கைப் பிரடகனங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை தொடர்பில் மக்கள் தெளிவுடன் இருக்கின்றனர்.
உதாரணமாக எதிரணி வேட்பாளர் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவதாக அறிவித்ததும் எமது கொள்கை பிரகடனத்திலும் அதிகரித்த சம்பள உயர்வை அறிவிக்கவேண்டும் என்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். ஆனால் தற்போதைய பொருளாதார கட்டமைப்பில் 2500 ரூபாவே வழங்க முடியும் என்றும் அதுவே யதார்த்தமானது என்றும் ஜனாதிபதி கூறிவிட்டார். மறுநாள் தபால் மூல வாக்களிப்பை வைத்துக்கொண்டு இவ்வாறு கூறி ஜனாதிபதி தனது சிறந்த தலைமைத்துவ பண்பை வெளிக்காட்டினார்.
நான்காவது விடயமாக தொழில்சார் நிபுணர்கள் எமது தூண்டுதல் இல்லாமல் ஜனாதிபதிக்காக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஐந்தாவது விடயமாக இரண்டு வேட்பாளர்களினதும் வார்த்தை பிரயோகங்களை பார்க்கவேண்டும். எதிரணி வேட்பாளர் தகுதியற்ற வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகித்து வருகின்றார். கடந்த காலங்களில் ஐந்து ஜனாதிபதி தேர்தல்கள் நாட்டில் நடைபெற்றன. ஆனால் தற்போது போன்ற வார்த்தை பிரயோகங்கள் இடம்பெறவில்லை. அதிகாரத்தை எடுப்பதற்கு முயற்சிக்கும்போதே இவ்வாறு நடந்துகொள்ளும் ஒருவர் அதிகாரத்தை எடுத்தால் என்ன நடக்கும்?
கடந்த மாகாண சபை தேர்தல்களில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கூட தனது கட்சியை மிகவும் ஒழுக்கமான முறையில் வைத்துக்கொள்வதில் அக்கறை காட்டினார்.
ஆறாவது விடயமாக அபிவிருத்தி தொடர்பான கொள்கைகளை அவதானிக்கவேண்டும். எமது ஜனாதிபதியிடம் தெளிவான கொள்கைகள் இருக்கின்றன. ஆனால் எதிரணிடம் எந்த தெளிவான வேலைத்திட்டமும் இருப்பதாக தெரியவில்லை. இன்று எதிரணி வேட்பாளர் ஆயுதமற்ற புலி ஆதரவாளர்களின் பொம்மையாக மாறிவிட்டார். ஒருகாலத்தில் ஈழம் குறித்து எண்ணங்களுடன் இருந்தவர்கள் கடந்த மே 19 ஆம் திகதியுடன் அதனை கைவிட்டனர். ஆனால் தற்போது மீண்டும் அந்த எண்ணங்களை மீட்டுகின்றனர்.
வரலாற்றில் என்றுமில்லாதவாறு இன்று தமிழ்த் தலைமைகள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்துகொண்டுள்ளன. இது ஆரோக்கியமான நிலைமையாகும். சேறுபூசும் கலாசாரத்தை இரண்டு தரப்பினரும் கைவிடவேண்டும். எந்த அடிப்படையுமின்றி சில இணையதளங்கள் இன்று ஜனாதிபதி மீது சேறுபூசுகின்றன. ஏன் அவர்கள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறையிடவில்லை? பாராளுமன்றத்தில் ஏன் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரவில்லை?
கடந்த மே மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் இந்த நாட்டில் தமிழ் பெண்கள் சல்வார் அணிந்துகொண்டு பஸ்களில் பயணம் செய்ய முடியாத நிலைமை காணப்பட்டது. ரயிலில் செல்ல முடியாது. அனைவரும் சந்தேகக்கண்டுகொண்டு பார்த்தனர். அரசியல்வாதிளாகிய நாங்களும் ஊடகங்கள் முன் வந்து பொதிகள் தொடர்பில் கவனமாக இருக்குமாறு கோரினோம். எனினும் அந்த நிலைமையை எமது ஜனாதிபதி மாற்றியுள்ளார். அது தொடர்பில் தமிழ் மக்களுக்கு தெரியும். தமிழ் மக்கள் சிந்தித்து முடிவெடுப்பார்கள்.
எதிரணி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா கனடா பத்திரிகை ஒன்றுக்கு தமிழ் மக்கள் தொடர்பில் கூறிய கருத்துக்கள் உங்களுக்கு தெரியும். மேலும் யுத்தம் முடிந்ததும் அதிகாரப்பகிர்வு தேவையில்லை என்றும் 13 ஆவது திருத்தச்சட்டம் தேவையற்றது எனவும் குறிப்பிட்டிருந்தார்
Read Users' Comments (0)