புதுடில்லியில் இலங்கை உயர்மட்டக்குழு

இலங்கையிலிருந்து மூன்று உயர் அதிகாரிகளைக் கொண்ட பிரதிநிதிகள் குழு ஒன்று இன்றிரவு புதுடெல்லி சென்றுள்ளது. இலங்கை ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபஷ, ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோரை இந்தக் குழுவினர் நாளை வியாழக்கிழமையன்று சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளனர்.
இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவுற்றிருக்கும் நிலையில், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீள்குடியேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன.
தமிழ் மக்களின் மறுவாழ்வுக்காக, இந்திய அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் 500 கோடி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது. இந்த நிலையில், அங்கு நடைபெறும் மீள்குடியேற்றம் தொடர்பாக இந்தியாவிடம் எடுத்துரைக்கவும், மறுவாழ்வுத் திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கவும் இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியா வந்துள்ளதாகத் தெரிகிறது.
குறிப்பாக, இலங்கையில் ஜனவரி இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா களமிறக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியா வந்துள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Read Users' Comments (0)