jkr

சமுகத்தில் முதன்மை பெறுவது கல்வியே : கி.மா. முதலமைச்சர்


ஒரு சமுகத்தின் முதுகெலும்பாக அரசியல் மாத்திரமல்ல சிறந்த கல்வியே முதன்மை பெறுகின்றது. ஒவ்வொருவரும் ஓர் இலக்கைக் குறி வைத்துப் பயணித்து, அதனை அடையும்வரை ஓயாது உழைக்கவேண்டும்" என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மடடக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை அதிபர் பொன் சிவகுரு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்,

"மாணவர்களைப் பொறுத்த வரை ஒவ்வொருவரும் ஓர் இலக்கை நிர்ணயித்துக் கல்வியைத் தொடரவேண்டும். அவ் இலக்கினை அடையும்வரை பயணம் தொடர வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைவதை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படுகின்றார்கள். இந்நிலை மாற வேண்டும்.

பரீட்சையில் சித்தியடைவது மட்டுமல்ல பாடசாலையின் இணைப் பாடவிதான செயற்பாடுகளிலும் புறக்கிருத்திய செயற்பாடுகளிலும் ஈடுபட்டு தமது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.

கிழக்கு மாகாணத்திலே ஏராளமான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறுவதில் பின்னடைந்துள்ளனர். பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறுகின்ற மாணவர்கள் தவிர்ந்த ஏனைய மாணவர்கள் தங்களது எதிர்காலத் திட்டங்களை எவ்வாறு அமைத்து கொள்ளவேண்டும் என்ற முடிவினை தாங்கள் தெரிவு செய்த பாடங்கள் ஊடாகவே ஏற்படுத்தி கொள்வேண்டும்.

அத்தோடு மாணவர்கள் ஒவ்வொருவரும் எதிர்காலத்திலும் சரி நிகழ்காலத்திலும் சரி சமூக சிந்தனை உடையவர்களாகவும் ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிக்கக் கூடியவர்களாகவும் சமூகத்தில் உயர்ந்த சிந்தனையாளர்களாகவும் திகழ வேண்டும். இதுவே நல்லதொரு மாணாக்கனின் கடமையாக இருக்க வேண்டும்" என்றார்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா , கல்குடா கல்விவலய பிரதி கல்விப்பணிப்பாளர் எஸ்.ஞானராஜா, கோட்ட கல்வி அதிகாரிகளான எஸ்.தங்கராஜா,எ.சுகுமாரன், எஸ்.குணலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் சகல துறைகளிலும் திறமையினை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளும், தங்களது கற்பித்தல் செயற்பாடுகளைச் செவ்வனே செய்த ஆசிரியர்களும் பரிசில்களும் கேடயங்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வடக்கு கிழக்கு மக்கள் ஜனாதிபதியையே ஆதரிக்க வேண்டும் : அமைச்சர் கருணா


வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்க வேண்டும். தமிழ் மக்கள் அனைவரும் தம்முடன்தான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் செய்யக்கூடாது" என தேச நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கு மக்கள் குறிப்பாக குடாநாட்டு மக்களுக்குத் தாம் இந்த வேண்டுகோளை விடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வேரூன்றச் செய்வதுடன், கிழக்கு பகுதி மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கச் செய்யும் விதத்தில் சூறாவளி பிரசாரங்களை செய்துவரும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கிழக்கில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிப்பார்கள் என உறுதியுடன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்துதல், மற்றும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பாரிய அபிவிருத்திகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று முன்னெடுத்து வருகிறார்.

குடாநாட்டுடன் தென்பகுதியை இணைக்கும் ஏ-9 வீதி அபிவிருத்தி செய்யப்படுகிறது. யாழ். குடாநாட்டுக்கான ரயில் பாதைகளை அமைக்கும் வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மீன்பிடி, சுகாதாரம், கல்வி, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வடபகுதி மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தருணத்தில் நாம் உங்களுடன்தான் இருக்கிறோம். உங்களுக்கே எமது ஆதரவு என்பதை உணர்த்த வேண்டும். ஒரு வரலாற்றுத் தவறை மீண்டும் தமிழ் மக்கள் செய்துவிடக்கூடாது என வடக்கு மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவர். அவர் நல்லதொரு அரசியல் பின்னணியைக் கொண்டவர். சரத் பொன்சேக்கா போன்றோர் முற்றிலுமாக இராணுவப் பின்னணியைக் கொண்டவர். இதனை தமிழ் மக்கள் எவரும் அனுமதிக்க மாட்டார்கள்" என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ராஜரட்னத்தின் டி.எப்.சீ.சீ. பங்குகள் நேற்று விற்பனை


அமெரிக்காவின் பிரபல தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னத்தின் டி.எப்.சீ.சீ. பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் பங்குப் பரிவர்த்தனையினால் பங்குச் சந்தை மொத்தப் புரள்வு வளர்ச்சியைப் பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பிரபல வர்த்தகர் ராஜ் ராஜரட்னம் அமெரிக்கா காவல்துறையினால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க நீதிமன்றம் விதித்துள்ள ரொக்கப் பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் ராஜ் ராஜரட்னத்தின் கெலுன் நிறுவன சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதன் ஒரு கட்டமாக இலங்கையில் ராஜ் ராஜரட்னத்திற்கு சொந்தமான டி.எப்.சீ.சீ. வங்கிப் பங்குகள் கொழும்புப் பங்குச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டி.எப்.சீ.சீ. வங்கியின் ஐந்தாவது முக்கிய பங்குதாரராக கருதப்படும் ராஜ் ராஜரட்னம் தனது சகல பங்குகளையும் நேற்றைய தினம் விற்பனை செய்துள்ளார்.

பங்குத் தரகு நிறுவனங்களின் மூலம் இந்த கொடுக்கல் வாங்கல் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

பங்கு ஒன்று 135 ரூபா என்ற விகிதத்தில் சுமார் 12.2 மில்லியன் பங்குகள் நேற்றைய தினம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

யாழ்.- வவுனியா மினிபஸ் சேவை விரைவில் ஆரம்பம்


யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்கும் இடையிலான மினிபஸ் சேவை நடத்துவதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளதாகவும் விரைவில் இச்சேவை ஆரம்பமாகும் எனவும் தனியார் சிற்றூர்திச் சேவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில்,

"ஏ-9 வீதியினூடாக தனியார் சிற்றூர்திகளும் சேவையில் ஈடுபட அனுமதிக்குமாறு எமது சங்கம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் ஊடாக பாதுகாப்பு அமைச்சுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தது.

இந்தக் கோரிக்கைக்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார். இதற்காகத் தரம் வாய்ந்த 50 பஸ்களின் விபரங்களை அரசாங்க அதிபரிடம் வழங்கியுள்ளோம். அவற்றில் 10 பஸ்கள் தெரிவு செய்யப்பட்டு அவை நேற்று பரீட்சித்துப் பார்க்கப்பட்டன" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட 10 பஸ்களும் சேவையில் ஈடுபடும் திகதி அரச அதிபரால் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கிழக்குக் கடலில் தத்தளித்த 12 மியன்மார் மீனவர்கள் மீட்பு


கிழக்கு கடலில் தத்தளித்த 12 பேரைக் கொண்ட மியன்மார் மீனவர் குழுவொன்று இலங்கை மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

திருகோணமலைக்கு அண்மித்த பகுதியில் இவர்களின் மீன்பிடிக்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்தது. அவ்வேளை, குறித்த மீனவர்களினால் அபாயக் குரல் எழுப்பப்பட்டதாகவும்,இதனையடுத்து அங்கு விரைந்த மீனவர்கள் நேற்று மாலை 12 மியன்மார் மீனவர்களையும் காப்பாற்றி மீட்டு வந்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.

மேற்படி மீனவர்களிடம் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஆவணங்கள் எதுவும் இல்லாத போதிலும் மீன்பிடிக்கலத்திலிருந்த ஆவணங்கள் மூலம் இம்மீனவர்கள் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாகத் திருகோணமலை பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வவுனியா முகாம்களில் இன்று முதல் சுதந்திரமான நடமாட்டம்


வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் இன்று முதல், சுதந்திரமான முறையில் செயற்பட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் அந்த மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படும் போது படையினர் எவ்வாறான கட்டுப்பாடுகளை விதிப்பர் என்ற விடயங்கள் தெரியவரவில்லை.

குறித்த மக்கள், தமது முகாமில் இருந்து ஏனைய முகாம்களுக்கு சென்று வர அனுமதிக்கப்படுவார்களா? அல்லது, ஏனைய வெளிப்பிரதேசங்களுக்கு அனுமதிக்கப்படுவார்களா? என்ற விடயங்கள் தெரியவரவில்லை.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

உலகை ஆட்டிப்படைக்கும் எயிட்ஸ்! : இன்று சர்வதேச எயிட்ஸ் தினம்


ஓடும் இயந்திரங்களுடன் தானும் ஒரு இயந்திரமாகவே மாறிக் களைத்து போகும் மனிதன்; விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் விந்தைகள் செய்து கொண்டிருக்கும் விஞ்ஞானம் - இவற்றோடு பின்னிப் பிணைந்து நாளுக்கு நாள் மேம்பட்டுக் கொண்டிருக்கும் மனித குலத்தின் அபிவிருத்தி புதியதொரு வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகின்றது.

அறிவியில்,தொழில்நுட்பம், நாகரிகம் என அனைத்துத் துறைகளும் புதுமைகள் படைக்கும் களங்களாக மாறியிருக்கும் இக்காலகட்டத்தில் இவை எல்லாவற்றுக்கும் சவாலாக விளங்கும் விடயங்களும் இருக்கவே செய்கின்றன.

அதில் பிரதானமாக சொல்லப்படுபவற்றில் முக்கிய இடம் வகிப்பது 'எயிட்ஸ்' எனப்படும் உயிர்க்கொல்லி நோய் என உறுதியாகக் கூறலாம்.

இயற்கையை மனிதன் வெல்ல முடியாது என்பது போல், இந்தக் கொடிய நோயையும் வெற்றிகொள்ள முடியாமல் உலகம் இன்று தடுமாறிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

வேற்றுக்கிரகங்களில் புகுந்து சாதனை செய்து கொண்டிருக்கும் விஞ்ஞானத்தால், மனிதனுக்குள் புகுந்து உயிர்க்கொலை செய்யும் இந்த கொடிய நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லையே...?

ஆம்! சர்வதேச எயிட்ஸ் தினமான இன்று இந்த நோய் எந்தளவுக்கு உலகப்பரம்பலில் தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது என்பதனையும் அதன் பின்விளைவுகளால் உலகம் எதிர்கொள்ளப்போகும் சவால்கள் பற்றியும் கட்டாயம் தெரிந்தாக வேண்டும்.

33.4 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோய் பீடிப்பு

உலகத்தில் 33.4 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயுடன் வாழ்வதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கிறது.

2008 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் படி, வயதுவந்த சுமார் 31.3 மில்லியன் பேர் இந்த நோயுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 15.7 மில்லியன் பெண்களும் அடங்குவதாக அக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அதைவிட கவலைதரக் கூடிய விடயமாக கொள்ளப்படுவது எதுவெனின், காரணம் எதுவுமின்றி 2.1 மில்லியன் எண்ணிக்கையிலான சிறுவர்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதுதான்.

2008 ஆம் ஆண்டில் மாத்திரம் 2.7 மில் லியன் மக்கள் புதிதாக இந்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பதுடன் 4 லட்சத்து 30ஆயிரம் சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு மில்லியன் மக்கள் கடந்த 2008ஆம் ஆண்டில் எயிட்ஸ் நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 2 லட்சத்து 80 ஆயிரம் சிறுவர்களும் இந்நோயால் மரணமாகியுள்ளனர்.

எனினும் கடந்த எட்டு ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2009 ஆம் ஆண்டு 17 வீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கைகளிலிருந்து தெரியவருகிறது.

இலங்கையைப் பொருத்தவரை அண்ணளவாக 15 வயதுக்கு மேற்பட்ட 4000 பேரும் 15 வயதுக்குக் குறைந்த 50 பேரும் எச்ஐவி-யினால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2008 ஆம் ஆண்டில் 1023 பேர் எயிட்ஸ் நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் 2009 ஆம் ஆண்டு முதல் 9 மாதங்களில் மாத்திரம் 1127 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை சுகாதார அமைச்சின் எயிட்ஸ் நோய்த் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

விஞ்ஞானம், மருத்துவம் உள்ளிட்ட ஏனைய அனைத்து விடயங்களிலும் புரட்சியை ஏற்படுத்தியதாக 20ஆம் நூற்றாண்டு பிரஸ்தாபிக்கப்படுகிறது. அணுவாயுதம் முதல் விண்வெளிப் பயணம் வரை காத்திரமான பல மாற்றங்கள் இந்த நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

மருத்துவத்துறையை ஆட்டிப்படைக்கும்...

எவ்வாறாயினும் 20 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் உலக மருத்துவத் துறையை கலங்க வைத்து, இன்றுவரை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நோயாக எயிட்ஸ் காணப்படுகிறது.

எயிட்ஸ் என்ற நோய்க்கு எச்.ஐ.வி. என்ற வைரஸ்தான் காரணம் என முறையான மருத்துவ பரிசோதனைகள் மூலம் 1981 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்நோய் பரவியிருக்கக் கூடிய வாய்ப்பு இருந்துள்ளது. 1981 ஆம் ஆண்டுமுதல் இன்றுவரை 25 மில்லியன் மக்கள் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர்.

பொதுவாக, உடலுறவு கொள்ளுதலில் மாத்திரமே எச்ஐவி தொற்றுவதாக பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவ்வாறு நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடம் நெருங்கிப் பழகவும் அச்சம் கொள்கிறார்கள்.

உடலுறவினால் எச்ஐவி தொற்று உண்டாவது பிரதான காரணமாக உள்ளபோதிலும் அதுமட்டும் காரணம் எனச் சொல்லிவிட முடியாது. ஓரினச் சேர்க்கை, இரத்தம் பரிமாறப்படுதலினூடாக பரவுதல் மற்றும் தாய் சேய் உறவினூடாக தொற்றுதல் போன்ற ஏனைய காரணங்களும் உண்டு.

இந்த வைரஸ் பீடிக்கப்பட்ட நபருடன் நெருங்கிப் பழகுவதன் மூலமோ அல்லது அவர்கள் பயன்படுத்திய பொருட்களை உபயோகிப்பதாலோ நோய் தொற்றி விடுவதில்லை.

ஒருவரின் உடல் திரவங்கள் மற்றொருவரின் உடல் திரவத்துடன் சேரும்போது இக்கிருமி பரவுவதற்கு அதிக வாய்ப்பு ஏற்படுகிறது. அதனால்தான் உடலுறவை பிரதானப்படுத்திப் பார்க்கிறது உலகம்.

பாதுகாப்பற்ற உடலுறவு முறைகள், ஈடுபாடுகள் என்பன இந்த வைரஸை பரிமாற்றம் செய்து விடுகின்றன. அதனால் ஏற்படும் பின்விளைவு தான் ஒரு தனிமனிதனை கொஞ்சம் கொஞ்சமாக மரணம் வரை கொண்டு செல்கிறது.

எச்ஐவி எனும் வைரஸ் மனித உடம்பிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை மெதுவாக குறைக்கிறது. அதனால், ஈடுசெய்ய முடியாத பல்வேறு நோய்களால், பீடிக்கப்படும்போது அவற்றை எதிர்க்கக் கூடிய திரவச் சுரப்புகள் இன்றி மரணம் நேரிடுகிறது.

இந்தத் தொற்றுக்கு உள்ளாகிய நபர் இன்னும் பலருடன் உடலுறவுச் சேர்க்கையில் ஈடுபடுவதனால் மேலும் பலருக்கு அது பரவ ஆரம்பிக்கின்றது.

மாபெரும் சவால்

எனவேதான், உலகம் இன்று மாபெரும் சவால் ஒன்றை எதிர்நோக்கியிருக்கிறது.

இரத்தத்தில் 10 வீதம் எச்ஐவி அதிகரிப்பு ஏற்படுமாயின் அதனால் 81 வீதம் நோய் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக புற்றுநோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படின் இந்த உயிர்க்கொல்லி நோய் மரணத்தை மேலும் துரிதப்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எச்ஐவியை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய மருந்துகள் கண்டறியப்பட்டுள்ள போதிலும், அதனை நீண்டகால நோக்கில் குணமாக்கக் கூடியதாகவோ அல்லது தொடர்ச்சியான ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ளக் கூடியதாகவோ மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

போதியளவு விழிப்புணர்ச்சி இல்லாமல் இந்த நோயைத் தொடர்வதற்கு வழி செய்யப்படுமானால், குறிப்பிட்டதொரு காலப்பகுதியில் பாரியதொரு சனத்தொகை அழிவு ஏற்படும் என்பது மட்டும் நிச்சயம்.

நடைமுறை வாழ்வில் தன்னைத் தானே காத்துக்கொள்வதுதான் சிறந்த மருந்து என்றும் நம்பிக்கையுடனான உறவுகளை வளர்த்துக்கொள்ளுதலும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுதலும் கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் மருத்துவத்துறை, உலகத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றது.

முழு உலகத்தையும் அழிப்பதற்கு மேற்குலகத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் ஆயுதம் 'எயிட்ஸ்' தான் என்றே கூறப்படுகிறது. மனித இனத்தை மெதுமெதுவாக அழித்துக் கொண்டிருக்கும் எயிட்ஸ் எனும் அரக்கனை அழிக்க ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் செயற்படுதலே காலத்தின் தேவையாகும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates