சமுகத்தில் முதன்மை பெறுவது கல்வியே : கி.மா. முதலமைச்சர்
ஒரு சமுகத்தின் முதுகெலும்பாக அரசியல் மாத்திரமல்ல சிறந்த கல்வியே முதன்மை பெறுகின்றது. ஒவ்வொருவரும் ஓர் இலக்கைக் குறி வைத்துப் பயணித்து, அதனை அடையும்வரை ஓயாது உழைக்கவேண்டும்" என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மடடக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை அதிபர் பொன் சிவகுரு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்,
"மாணவர்களைப் பொறுத்த வரை ஒவ்வொருவரும் ஓர் இலக்கை நிர்ணயித்துக் கல்வியைத் தொடரவேண்டும். அவ் இலக்கினை அடையும்வரை பயணம் தொடர வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைவதை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படுகின்றார்கள். இந்நிலை மாற வேண்டும்.
பரீட்சையில் சித்தியடைவது மட்டுமல்ல பாடசாலையின் இணைப் பாடவிதான செயற்பாடுகளிலும் புறக்கிருத்திய செயற்பாடுகளிலும் ஈடுபட்டு தமது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.
கிழக்கு மாகாணத்திலே ஏராளமான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறுவதில் பின்னடைந்துள்ளனர். பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறுகின்ற மாணவர்கள் தவிர்ந்த ஏனைய மாணவர்கள் தங்களது எதிர்காலத் திட்டங்களை எவ்வாறு அமைத்து கொள்ளவேண்டும் என்ற முடிவினை தாங்கள் தெரிவு செய்த பாடங்கள் ஊடாகவே ஏற்படுத்தி கொள்வேண்டும்.
அத்தோடு மாணவர்கள் ஒவ்வொருவரும் எதிர்காலத்திலும் சரி நிகழ்காலத்திலும் சரி சமூக சிந்தனை உடையவர்களாகவும் ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிக்கக் கூடியவர்களாகவும் சமூகத்தில் உயர்ந்த சிந்தனையாளர்களாகவும் திகழ வேண்டும். இதுவே நல்லதொரு மாணாக்கனின் கடமையாக இருக்க வேண்டும்" என்றார்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா , கல்குடா கல்விவலய பிரதி கல்விப்பணிப்பாளர் எஸ்.ஞானராஜா, கோட்ட கல்வி அதிகாரிகளான எஸ்.தங்கராஜா,எ.சுகுமாரன், எஸ்.குணலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் சகல துறைகளிலும் திறமையினை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளும், தங்களது கற்பித்தல் செயற்பாடுகளைச் செவ்வனே செய்த ஆசிரியர்களும் பரிசில்களும் கேடயங்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
0 Response to "சமுகத்தில் முதன்மை பெறுவது கல்வியே : கி.மா. முதலமைச்சர்"
แสดงความคิดเห็น