அல்-கொய்தா எங்கிருந்தாலும் அமெரிக்கா ஒழித்துக் கட்டும் : ஒபாமா
அல்-கொய்தா தீவிரவாதிகள் உலகின் எந்த இடத்தில் இருந்துகொண்டு சதி திட்டங்களைத் தீட்டினாலும் அவர்களை அமெரிக்கா ஒழித்துக்கட்டும் என அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார்.
தற்போது ஹவாயில் விடுமுறையை கழித்து வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்க மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார்.
டெட்ராய்ட் நகருக்குச் சென்ற அமெரிக்க விமானத்தை நடுவானில் தகர்க்கத் தீவிரவாதிகள் தீட்டிய திட்டம் முறியடிக்கப்பட்ட பின்பு முதல்தடவையாக நாட்டுமக்களுக்கு ஆற்றிய இந்த உரையில் ஒபாமா மேலும் கூறியதாவது:
"டெட்ராய்ட் விமானத்தை தகர்க்கும் சதி திட்டத்தைத் தீவிரவாதிகள் நிறைவேற்றியிருந்தால் அப்பாவிகள் 300 பேர் கொல்லப்பட்டிருப்பார்கள். இந்தச் சதியில் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறிய முழு அளவிலான விசாரணை நடந்து வருகிறது.
இதற்கு காரணமானவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இந்தத் தாக்குதல் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் எமக்கு விடை கிடைக்கவில்லை.
ஆனால், அமெரிக்கா தன் பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொள்வது மட்டுமின்றி அதற்கு மேலும் நடவடிக்கை எடுக்கும் என்பதை, அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கத் திட்டமிடும் கூட்டத்திற்குப் புரிய வைக்கவேண்டும்.
அவர்கள் உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ஆஃப்கானிஸ்தானோ, பாகிஸ்தானோ, ஏமனோ, சோமாலியாவோ- எந்த இடத்தில் இருந்து அமெரிக்காவுக்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டினாலும் அவர்களைத் தோற்கடித்து, ஒழித்துக்கட்ட வேண்டும்.
டெட்ராய்ட் சம்பவத்தைப் பொறுத்தவரை இரண்டு விதமான விசாரணைகளை மேற்கொள்ளச் சொல்லியிருக்கிறேன்.
ஒன்று, தெரிந்த மற்றும் சந்தேகத்துக்கு இடமான தீவிரவாதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களைப் பட்டியலிட்டு தொடர்ந்து கண்காணிப்பது.
இதன்மூலம் அவர்கள் நம் நாட்டுக்குள் நுழைவதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்திவிட இயலும். டெட்ராய்ட் விமானத்தில் கைது செய்யப்பட்டவன் நிச்சயம் இந்த பட்டியலில் இருந்திருக்க வேண்டும்.
அடுத்தது, விமான நிலையங்களில் சோதனை தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் நடைமுறை கொள்கைகளை மறு ஆய்வு செய்யவேண்டும்.
இவ்வளவு ஆபத்தான மருந்துகளை அவனால் எப்படி விமானத்தில் கொண்டுவர முடிந்தது? எதிர்காலத்தில் இதுபோன்ற தவறு நடக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் என ஆராய உத்தரவிட்டுள்ளேன்".
இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.
0 Response to "அல்-கொய்தா எங்கிருந்தாலும் அமெரிக்கா ஒழித்துக் கட்டும் : ஒபாமா"
แสดงความคิดเห็น