jkr

இறுதிக்கட்ட போரில் புலிகளைக் கொல்லவே அதிகம் அறிவுறுத்தப்பட்டோம் : இராணுவ தரப்பு


விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் எமது படையினருக்கு இடங்களை பிடிப்பதற்கு அறிவுறுத்தப்படவில்லை. பதிலாக நாளாந்தம் பத்து புலிகளை கொல்வதற்கு உத்தரவிடப்பட்டது என இலங்கை படையினரின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், பின்னைய நாட்களில், அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பட்டது. இதனால் போரை இலகுவாக முன்னெடுக்க முடிந்தது.என இலங்கை படையினரின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையாளர் ஒருவருக்கு அவர் வழங்கியுள்ள தகவல் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.

இதன்பிரகாரம் அவர் மேலும் கூறுகையில்,

ஆனந்தபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரை சுற்றிவளைத்து மேற்கொண்ட தாக்குதல் போரின் போக்கினை மாற்றியமைத்ததாக அமைந்தது எனவும், விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட சுமார் அறுநூறு விடுதலைப்புலிகள் இந்த முற்றுகை தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப் புலிகளின் வடமுனை தளபதி தீபன் மற்றும், விதுஷா ஆகியோரும் இந்தத் தாக்குதலிலேயே கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்ததாக அந்த தகவல் கூறுகிறது.

இந்த சுற்றிவளைப்பு தாக்குதல் இலங்கை இராணுவம் இதுவரை காலமும் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தாக்குதல்களில் மிகப்பெரிய சுற்றி வளைப்புத் தாக்குதலும்,முக்கியமான தாக்குதலுமாகும் எனவும் அவரால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

58 ஆவது டிவிஷன் படையணியும், 53 ஆவது டிவிஷன் படையணியும் இணைந்து மேற்கொண்ட இந்தச் சுற்றிவளைப்புத் தாக்குதல் நிகழ்த்தப்படாவிட்டாலோ அல்லது தோல்வியில் முடிந்திருந்தாலோ, போர் மேலும் சில காலம் தொடர்ந்திருக்கும் எனவும், புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் இத் தாக்குதலில் கொல்லப்பட்டதினால், விடுதலைப்புலிகளின் தலைமையால் போரைத் தொடர்ந்து நடத்த முடியாது போனது எனவும் அவரால் கூறப்பட்டதாக அத்தகவல் தெரிவிக்கிறது.

அத்தகவலில் குறிப்பிட்டுள்ள ஆனந்தபுரம் சுற்றி வளைப்புத் தாக்குதலில் இலங்கை இராணுவத்தினர் இராசயன ஆயுதங்களைப் பாவித்திருந்ததாகவும், அதன் காரணமாகவே அத் தாக்குதலில் தமது போராளிகள் பலரை ஒரே நேரத்தில் இழக்க வேண்டி ஏற்பட்டதாகவும் விடுதலைப்புலிகள் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இறுதிக்கட்ட போரில் புலிகளைக் கொல்லவே அதிகம் அறிவுறுத்தப்பட்டோம் : இராணுவ தரப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates