இலங்கையில் கருணா போல, இந்திய அரசும், தமிழக அரசும் தமிழர்களுக்கு துரோகம் செய்வதை எச்சரிக்கிறார் வைகோ
இலங்கையில் கருணா போல, இந்திய அரசும், தமிழக அரசும் தமிழர்களுக்கு துரோகம் செய்வதை எச்சரிக்கிறேன். இவ்வாறு தஞ்சாவூரில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாட்டில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கலந்து கொண்டு பேசுகையில் தெரிவித்தார்.
அவர் தனதுரையில் மேலும் கூறியுள்ளதாவது:-
ஈழத்தில் பல ஆயிரம் குழந்தைகள், பெண்கள், தமிழர்களைக் கொன்று குவித்த அதிபர் ராஜபக்ச திருப்பதிக்கு வந்து செல்கிறார். பிரதமர், ஜனாதிபதி போன்றோர் செல்லும் பிரதான வாயில் வழியாக அவர் வந்து செல்கிறார்.
ஆனால், இந்த மாநாட்டில் பங்கேற்க இலங்கையில் இருந்து வந்த அந்நாட்டின் எம்.பி., சிவாஜிலிங்கத்தை மாநாட்டுக்கு வரக் கூடாது என்று கூறி, தமிழக அரசு திருப்பி அனுப்புகிறது.
இத்தனை துயரத்துக்கும் காரணம், இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்கள், போர் கருவிகள், ராடார்களை வழங்கியது. விமானப்படையை சீரமைத்துக் கொடுத்தது. தமிழர்கள் சிந்திய ஒவ்வொரு துளி இரத்தத்துக்கும் இந்திய அரசு பதில் கூறி ஆக வேண்டும்.
நான் பேசிய பேச்சுக்காக ஏழு மாதத்துக்குப் பின் என் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்கிறது தமிழக அரசு. யார் துரோகி என சிந்திக்க வேண்டும்?. இது ஒரு பின்னடைவு தான். அடுத்த கட்டத்துக்கு நாம் தயாராக வேண்டி உள்ளதால், நமக்கு அதிக வேலை உள்ளது. உலகம் எங்கும் ஆதரவு திரட்ட வேண்டும். ஏழு கோடி தமிழர்கள் உள்ளனர். விடுதலைப்புலிகள் தோற்கவில்லை. பிரபாகரன் மீண்டும் வருவார்.
இலங்கையில் கருணா போல, இந்திய அரசும், தமிழக அரசும் தமிழர்களுக்கு துரோகம் செய்வதை எச்சரிக்கிறேன். சோவியத் சுக்கு நூறாகியது போல, இந்திய வரைபடம் கிழித்தெறியப்பட்டு விடக்கூடாது என்பதற்காக எச்சரிக்கிறேன். நம் வாழ்நாளிலேயே சுதந்திர தமிழீழத்தை உருவாக்குவோம் என்று பேசினார்.
0 Response to "இலங்கையில் கருணா போல, இந்திய அரசும், தமிழக அரசும் தமிழர்களுக்கு துரோகம் செய்வதை எச்சரிக்கிறார் வைகோ"
แสดงความคิดเห็น