செய்தியறிக்கை
அக்மல் ஷேக் |
தனது பிரஜைக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பில் சீனாவிடம் விளக்கம் கேட்கிறது பிரிட்டன்
போதைப் பொருள் கடத்தலுக்காக பிரிட்டிஷ் பிரஜை ஒருவருக்கு சீனாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக செவ்வாயன்று லண்டனில் உள்ள சீன தூதுவர் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சால் அழைக்கப்பட்டார்.
விஷ ஊசி போட்டு மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட அக்மல் ஷேக் என்னும் அந்த நபரின் குடும்பத்தினர், அவர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறுகின்றனர்.
அந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறித்து தான் பெரும் அதிர்ச்சியடைந்ததாக பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுண் தெரிவித்திருக்கிறார்.
ஷேக் மனநல பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுவது குறித்து சீன தூதரகம் மறுத்துள்ளது. அவரது உரிமைகளும், விருப்பங்களும் மதிக்கப்பட்டதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க மற்றும் பிரிட்டனின் கருத்துக்களுக்கு இரான் கடும் எதிர்ப்பு,
போராட்டக்காரர்களை அடுக்கும் போலீசார் |
வெளிநாடுகள் இரானுக்குள் ரகசிய செயல்திட்டங்களை செயற்படுத்த முனைவதாக இரானிய வெளியுறவு அமைச்சர் மனுச்சர் மொடாகி அவர்கள் கூறியுள்ளார்.
அவரது கருத்துப்படி பிரிட்டன் முட்டாள் தனமாக பேசுவதை நிறுத்தாவிட்டால், பிரிட்டனின் முகத்தில் அறைந் தாற்போல இரான் எதிர்வினையாற்றும் என்றும் அவர் கூறினார்.
ஒன்றுமறியா அப்பாவி இரானியர்கள் அடக்கி ஒடுக்கப்படுவதை தாம் கண்டிப்பதாக ஒபாமா நேற்று கூறியிருந்தார்.
இரானிய போராட்டக்காரர்கள் தைரியமானவர்கள் என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் கூறியிருந்தார்.
இரானில் இருக்கும் பிரிட்டிஷ் தூதர் இரானிய அரசால் நேரில் அழைக்கப்பட்டு இரானின் கண்டனம் அவர் மூலம் முறையாக பதிவு செய்யப்பட்டது.
அமெரிக்கா மீது ரஷ்யப் பிரதமர் குற்றச்சாட்டு
ரஷ்யப் பிரதமர் புடின் |
அமெரிக்காவின் அணுஆயுத தடுப்பு கட்டமைப்பானது, ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ சமன்பாட்டை அழிக்க வல்லதாக இருக்கும் என்று புடின் அவர்கள் செய்தியா ளர்களிடம் தெரிவித்தார்.
அமெரிக்காவின் அத்தகைய கட்டமைப்பானது, புதிய தாக்குதல் ஆயுதங்களை வளர்த்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்தை ரஷ்யாவுக்கு உருவாக்குவதாகவும் அவர் கூறினார்.
ஐரோப்பாவை தளமாக கொண்டு செயற்படும் நிலத்தில் அமைக்கவிருந்த தனது ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை கைவிடுவதாக அமெரிக்கா அறிவித்திருந்தாலும், கடலில் இருந்து செயற்படக் கூடிய இத்தகைய கட்டமைப்பை உருவாக்குவது குறித்து பரிசீலிக் கப்போவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்கள் தெரிவித்திருக்கிறார்
அமெரிக்க விமானத்தை தாக்க முயன்ற சம்பவம் தொடர்பில் புதுத் தகவல்கள்
ஏமனில் அல் கயீதா அமைப்பினர் |
ஏமனின் தலைநகர் சானாவில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் அரபு கற்பதற்காக விசா பெற்ற உமர் பாருக் அப்தல் முத்தலாப், ஆகஸ்ட்டு மாத முற்பகுதி முதல் ஏமனில் தங்கியிருந்ததாக அந்த நாட்டின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த வேளையில் அவரது தொடர்புகள் குறித்து ஏமன் பாதுகாப்புத்துறையினர் புலனாய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
இந்திய ஜப்பானிய உறவுகள் மேலும் மேம்படும் என இருநாட்டின் பிரதமர்களும் அறிவிப்பு
மன்மோகன் சிங் மற்றும் ஹடோயாமா |
புதுடில்லிக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருக்கும் ஜப்பானியப் பிரதமர் யூக்கியோ ஹடோயோமா மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு இடையே இன்று இடம் பெற்ற உயர்மட்ட சந்திப்புக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜப்பானியப் பிரதமருடன் தான் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது இருதரப்பு உறவுகள் மற்றும் முக்கியமான பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் விவாதிக்கப்பட்டன என்று கூட்டத்துக்கு பிறகு மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆனாலும் இந்த விடயங்களுக்கு அப்பால் இந்த இரு நாடுகளும் தங்களது அரசியல் உறவுகளை இன்னும் தீவிரமாக முன்னெடுப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது என்று டில்லியில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் ஜப்பானின் பிரதமராக பதவியேற்ற ஹடாயோமா முதலாவதாக அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்ளும் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானியப் பிரதமருடனான சந்திப்பின் போது, அணுச் சோதனைகளை நடத்துவதை ஒருதலைபட்சமாக இந்தியா நிறுத்தி வைத்துள்ளதை மீண்டும் மன்மோகன் சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.
தஞ்சம் கோரிய இலங்கையர்கள் ஆஸ்திரேலியாவுக்கும் ருமேனியாவுக்கும் அனுப்பப்பட்டனர்
தஞ்சம் கோரி பல நாட்களாக இந்தோனேஷியக் கடற்பரப்பில் இருந்தவர்கள் |
ஒரு தொகுதியாக கொண்டுவரப்பட்ட 78 இலங்கை தமிழர்களில் 47 பேர் இன்று அனுப்பப்பட்டிருப்பதாக, இந்தோனேஷியாவின் மேற்குப்பிராந்தியத்தை சேர்ந்த சட்டம் மற்றும் மனித உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் இகெடே வித்தியார்த்த அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
செவ்வாய்கிழமை காலை சுமார் ஆறு மணிக்கு சென்ற இவர்களில் 31 பேர் ருமேனியாவுக்கும், 16 பேர் ஆஸ்திரேலியாவுக்கும் சென்றுள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் சென்ற முதல் தொகுதியில் 15 பேர் சென்றனர். அவர்கள் அனைவரும் ருமேனியாவுக்கு சென்றனர். மீதமுள்ள 16 பேரும் விரைவில் வேறு ஒரு நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும், அவர்களுக்கான பயண ஆவனங்கள் தயாரானதும் அவர்களின் பயணம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மறுவாழ்வு பணிகளில் தொண்டு நிறுவனங்களுக்கும் அனுமதி
போரின் போது பெருமளவினர் இடம் பெயர்ந்தனர் |
மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்திற்குத் தேவையான உதவிகள் மற்றும் சுகாதார வசதிகள் என்பவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்திருக்கின்றார்.
இதேவேளை, போர்ச் சூழல் காரணமாக இடம்பெயர்ந்திருந்த கிளிநொச்சி மாவட்ட அரச செயலகம் சுமார் பதினைந்து மாதங்களின் பின்னர் அதன் சொந்த இடத்தில் செயற்படத்தொடங்கியிருக்கின்றது.
மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் துரித்தப்படுத்துவதற்காக ஏனைய அரச திணைக்களங்களும் அங்கு செயற்பட்டு வருவதாகக் கூறும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி, கண்ணி வெடிகள் அகற்றப்படுகின்ற பணியின் முன்னேற்றத்திலேயே இடம் பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றும் பணிகளின் வேகமும் தங்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார்.
திருகோணமலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது
திருகோணமலையில் சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரிப்பு |
குறிப்பாக தென்னிலங்கை மற்றும் நாட்டின் ஏனையப் பகுதிகளில் இருந்தும் இவர்கள் திருகோணமலைக்கு வருகின்றனர். உள்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் வெளிநாட்டிலிருந்தும் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவிக்கிறார்.
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்த பிறகு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது என்றும், அப்படி வரும் பயணிகளுக்கான தங்குமிட வசதிகள் திருகோணமலைப் பகுதியில் போதுமானதாக இல்லை என்றும் விடுதி உரிமையாளர் ஒருவர் கூறுகிறார்.
தென்னிலங்கை மற்றும் மலையகப் பகுதிகளில் இருக்கும் சிங்கள மக்கள் பெருமளவில் இப்படி வந்தாலும், தமிழ் மக்களின் வருகை மிகவும் குறைந்தே காணப்படுகிறது என்றும் அந்த விடுதியின் உரிமையாளர் சுட்டிக்காட்டுகிறார்.
கடற்கரையோரமாக இருக்கும் ஒரு விடுதியில் இருக்கும் நீச்சல் குளம் |
தற்போது திருகோணமலையில் சோதனைச் சாவடிகளின் கெடுபிடிகள் இல்லாமல், பல இடங்களுக்கு சென்று வர முடிகிறது என்றும் அங்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் கூறுகிறார்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், திருகோணமலைப் பகுதியில் பொருளாதார நிலை மேம்பட்டு வருவதை காணக் கூடியதாக இருக்கிறது என்றும் அங்கிருக்கும் வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.
பருவ நிலை மாற்றத்தால் தானிய உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்க ஆராய்ச்சிகள் நடக்கின்றன
பருவ நிலை மாற்றத்தால் தானிய உற்பத்தி குறையும்? |
அதன் ஒருபகுதியாக, கடுமையான பருவ நிலை மாற்றங்களுக்கும் ஈடுகொடுத்து வளரக்கூடிய உணவு தானியப்பயிர்களை உருவாக்குவதில் தாங்கள் வெற்றியின் வாயிற்படியை தொட்டிருப்பதாக வங்கதேச விஞ்ஞானிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
அதாவது வங்கதேசத்தில் ஆண்டுதோறும் ஏற்படும் கடுமையான வெள்ளப் பெருக்கிற்கு ஈடுகொடுத்து வளரக்கூடிய மூன்று நெற்பயிர் ரகங்களை தாங்கள் உருவாக்கியிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு முதல் இந்த நெற்பயிர் ரகங்களை விவசாயிகள் விளையவைக்க முடியும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த வகை நெல்லினங்களில் ஒன்று ஏற்கனவே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுவருகின்றது
0 Response to "செய்தியறிக்கை"
แสดงความคิดเห็น