jkr

ஐதேகவுக்கு சேவகம்செய்ய துடிக்கும் கூட்டமைப்பு


-ஈழப்பிரியன்

இலங்கையில் நடக்கிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கியிருப்பவர் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்கள். இவர் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதாவது ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு எதிரான கட்சிகளின் பொது வேட்பாளர் என்பது அதன் பொருள்.

ஆனால் எதிர் எதிரான இரண்டு கட்சிகளின் வேட்பாளராகவும் அவர் இருக்கிறார் என்பது அவருக்கே உரிய சிறப்பு. அதாவது, ஜே.வி.பி. என்ற மக்கள் விடுதலை முன்னணிக்கு இலங்கை அரசியலில் முதல் எதிரி ஐக்கிய தேசியக் கட்சிதான். அதற்குப் பின்னர் தான் ஆளும் கட்சி. இப்படி எதிர் எதிரான இரண்டு கட்சிகளின் பொது வேட்பாராக இருந்துகொண்டு சரத் பொன்சேகா நெளிந்துகொண்டிருக்கிறார்.

முதல் கோணல்:

தான் ஜனாதிபதியானதும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகக் கொண்ட காபந்து அரசாங்கம் ஒன்றை உடனே நிறுவி, பாராளுமன்றத்திற்கு நீதியான தேர்தல் ஒன்று நடாத்தப்படும் என்று அறிவித்தார். இவ்வாறு அவர் அறிவித்ததும் அதற்கு ஜே.வி.பி. மறுப்புத் தெரிவித்தது. காபந்து அரசுக்கு யாரும் பிரதமராக இருக்கமாட்டார்கள் என்பதே ஜே.வி.பியின் அறிவிப்பாக இருந்தது. அதனையே சரத் பொன்சேகா பின்னர் தனது அறிவிப்பாக வெளியிடவேண்டிருந்தது. ஆக, அவர் ஜே.வி.பியின் பிடிக்குள்தான் இருக்கிறார் என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம்போட்டுக் காட்டியது.

ரணிலுக்கு விழுந்த முதலாவது அடியாகவும் (நான் கூறுவது இந்த ஜனாதிபதி தேர்தலில்) இது இருந்தது. இதனால்தான், சரத் பொன்சேகா எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதல் தடவையாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகமான சிறிகொத்தாவுக்கு சரத் பொன்சேகா விஜயம்செய்தபோது, அங்கே நடந்த வரவேற்பில் ரணில் கலந்தகொள்ளவில்லை.

சரத் பொன்சேகா –

ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையிலான கூட்டில் விழுந்த முதலாவது கோணலாக இந்தச் சம்பவத்தை ஊடகவியலாளர்கள் பதிவுசெய்தனர். தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை இல்லாமல் செய்வேன் என்று சரத் பொன்சேகா அடிக்கடி கூறிவருகின்றார்.அதனை நம்வதற்கு ரணில் ஒன்றும் முட்டாள் அல்ல.

அதிகாரத்துடன் கூடிய ராணுவத் தளபதி பதவியிலிருந்து அதிகாரம் ஏதுவுமற்ற கூட்டுப்படைத் தலைமை அதிகாரியாக தன்னை மாற்றம் செய்தமைக்கு பழிவாங்குவதற்காகவே மகிந்த சகோதரர்கள் மீது கோபம்கொண்டு தேர்தலில் குதித்தவர் சரத். அதிகாரம் இல்லாத பதவி உயர்வை விரும்பாத அவர், அதிகாரம் உள்ள ஜனாதிபதியாக தெரிவான பின்னர், தனது அதிகாரங்களை தூக்கி எறிவார் என்று நம்புவதற்கு ரணில் ஒன்றும் குழந்தை அல்ல.

அதுமாத்திரமன்றி, சரத் பொன்சேகா வெற்றி பெற்றால், அவர் முதலில் என்ன செய்வார். தனது அரசியல் பலத்தை அதிகரிக்க முயல்வார். அதற்காக தான் இப்போது தேர்தலில் போட்டியிடும் சிறிய கட்சியை பலமுள்ள அரசியல் கட்சியாக மாற்ற முயல்வார். அந்த முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் ஏன் சுதந்திரக் கட்சியிலிருந்தும் அரசியல்வாதிகளை தன் பக்கம் இழுக்க முயல்வார். அந்த முயற்சியில் ரணிலிடம் மிஞ்சப்போவது திஸ்ஸ அத்தநாயக்காவும் மற்றும் சில தலைவர்களும்தான்.

ஆக, சரத் பொன்சேகா வெல்வதை ரணில் எந்தக் கட்டத்திலும் விரும்பப் போவதில்லை. இதனை தெரிந்துகொண்டதால்தான் தனது தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கு தெற்கில் ஜே.வி.பி.யை மாத்திரம் அனுமதித்தார் சரத் பொன்சேகா. வடக்கு கிழக்கில் மாத்திரம் ஐதேக பிரச்சாரத்தில் ஈடுபடும் என்றும் அறிவித்தார்.

ரணிலுக்கு தெரியும் சரத் பொன்சேகா வெற்றிபெறப்பொவதில்லை என்று. தனது கட்சிக்காரர்கள் யானை சின்னத்திற்கு தவிர வேறு சின்னத்திற்கு வாக்களித்து பழக்கப்படாதவர்கள். வடக்கு கிழக்கில் மாத்திரம் தனக்குதான் வாக்குவங்கி இருக்கின்றது என்பதை காட்ட விரும்புகிறார் ரணில். அதற்காகத்தான் மனோ கணேசனையும் அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு ஓடினார்.

தமிழ்க் கூட்டமைப்பையும் எப்படியும் இழுத்தெடுக்க முயல்கிறார். ஐக்கிய தேசியக் கட்சிக்கே சேவகம் செய்து பழக்கப்பட்ட தமிழ்க் கூட்டமைப்பினரும் சரத் பொன்சேகாவைப்பற்றியோ அல்லது அவரது பின்னணியைப் பற்றியோ கவனத்தில் எடுக்கத் தயாராக இல்லை. அவர்களுக்குத் தேவை, ஐக்கிய தேசியக் கட்சியை திருப்திப் படுத்தவேண்டும். அவ்வளவுதான்.

அதனால்தான், ராணுவத்தினரின் எண்ணிக்கையை ஐந்து லட்சமாக உயர்த்தவேண்டும் என்று மகிந்த அரசுடன் முட்டி மோதிய சரத் பொன்சேகாவுடன், வடக்கில் ராணுவ பிரசன்னத்தை குறைப்பது பற்றி பேசுகிறார்கள். இலங்கை சிங்களவர்களுக்கு சொந்தமானது என்று இன்றும் அடித்துக்கூறும் சரத் பொன்சேகாவுடன் இனப்பிரச்னைக்கு தீர்வு குறித்து பேசுகிறார்கள். அந்தப் பேச்சுக்கள் திருப்தியளித்தன என்று வேறு அறிக்கையிடுகின்றார்கள். தாம் சரத் பொன்சேகாவுடன் பேச்சுநடாத்தி தமது கோரிக்கைகளுக்கு எல்லாம் அவர் இணங்கிவிட்டதாகக் கூறிக்கொண்டு அவருக்கு வாக்களிக்குமாறே கோரிக்கை விடுப்பார்கள். அது ஏற்கனவே தெரிந்த சங்கதிதான்.

ஆனால், புலிகள் தமது புதினம் இணையத்தளத்தில் சொல்லியிருப்பதுபோல, பேயை ஆட்சியிலிருந்து கலைத்துவிட்டு முனியை ஆட்சியில் அமர்த்த தமிழர்கள் ஒன்றும் இழிச்சவாயர்கள் அல்ல என்பது கூட்டமைப்பினருக்கு தெரியாததல்ல.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஐதேகவுக்கு சேவகம்செய்ய துடிக்கும் கூட்டமைப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates