சரத் பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம், சம்பந்தன் கோஷ்டி அடையப்போகும் கேவலமான முடிவு!
வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காது விட்டது ஒரு தவறான முடிவு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (இதனை தமிழ் தேசியக் குட்டை என்ற சிறப்பான பெயரைக் கொண்டுதான் அழைக்க வேண்டும்.) பாராளுமன்ற குழுத் தலைவர் திருவாளர் இரா.சம்பந்தன் ‘திருவாய்’ மலர்ந்திருக்கிறார்.
முதலாவது விடயம், தமிழ் மக்கள் தாங்களாகவே அந்த தேர்தலில் இருந்து ஒதுங்கி இருக்கவில்லை என்பதை சம்பந்தன் கெட்டித்தனமாக மறைத்த விட்டமையாகும். புலிகள் மக்களை மிரட்டி அந்த தேர்தலில் வாக்களிக்கவிடாது தடுத்தனர் என்ற உண்மையை சொல்வதற்கு அவருக்கு மனம் வரவில்லை. புலிகளின் மிரட்டலை சம்பந்தனின் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நியாயப்படுத்தி அறிக்கை விட்டதை, தமிழ் மக்கள் மறந்துவிட்டிருப்பார்கள் என்ற நினைப்பில், எல்லோரது காதிலும் சம்பந்தன் பூ சுற்ற முற்பட்டிருக்கிறார்.
அடுத்தது, அந்த தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால், அவர்கள் இவ்வளவு துன்பங்களையும் அனுபவித்திருக்க வேண்டி வந்திருக்காது என்றும், சம்பந்தன் அங்கலாய்த்திருக்கிறார். அதன் அர்த்தம் என்னவென்றால், ‘கடந்த ஜனாதிபதி தேர்தலில், மகிந்த ராஜபக்ச ஒரு இலட்சத்திற்கு சற்று அதிகமான வாக்கு வித்தியாசத்திலேயே, ரணில் விக்கிரமசிங்கவை வென்றிருக்கிறார். தமிழ் மக்களை வாக்களிக்க விட்டிருந்தால், அவர்கள் ஐக்கிய தேசியக்கட்சிக்கே வாக்களித்திருப்பார்கள், ரணில் ஜனாதிபதியாகி இருப்பார், புலிகள் வடக்கு கிழக்கில் எவ்வித இடையூறமின்றி தமது ‘குருவிச்சை’ அரசாங்கத்தை கொண்டு நடாத்தியிருக்கலாம்’ என்பதாகும். பரம்பரை ஐக்கிய தேசியக்கட்சி விசுவாசிகளான தமிழ் தலைமைகளின் வாரிசான சம்பந்தன், இவ்வாறு கூறியிருப்பது ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல தான்.
சம்பந்தனுக்கு இந்த காலம் கடந்த ஞானோதயங்கள் திடீரென வருவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்று கோஷ்டிகளாக பிரிந்து நின்று குடுமிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றது. அதில் சம்பந்தன் – மாவை சேனாதிராஜா – சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரை கொண்ட கோஷ்டி, அதாவது கூட்டமைப்பின் வலதுசாரி பிற்போக்கு அணி, இராணுவ வெறியனும், இனவாதியுமான சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறது. பலமுறை கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டியும், சம்பந்தன் கோஷ்டியின் கருத்து வெற்றி பெறவில்லை. ஆனாலும் பலவந்தமாக தன்னும், சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக முடிவு எடுப்பது என்பதில் சம்பந்தன் கோஷ்டி விடாப்பிடியாக இருக்கின்றது.
சரத் பொன்சேகா இனவெறியன் என்பது ஒருபுறமிருக்க, இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது என்றாலும் சரி, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்றாலும் சரி, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் செய்ய முடியாது என்பதும், அந்த பெரும்பான்மையை எந்த ஒரு கட்சியாலும் தனித்து அடைய முடியாது என்பதும், சம்பந்தன் கோஷ்டிக்கு நன்கு தெரியும். அதை தெரிந்து கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றி, தமது சுய இலாபங்களை ஈட்டிக் கொள்ள நாடகம் ஆடுகின்றனர்.
இது தவிர, சரத் பொன்சேகா ஜனாதிபதியானதும், அதிகாரம் முழுவதையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ரணில் வலியுறுத்தி வருகின்றார். அதுவும் நடக்கப் போவதில்லை. ஜே.வி.பியின் தயவில் சரத் பொன்சேகா ஜனாதிபதியாக வந்தால், அவர் இனப் பிரச்சினைக்கும் ஒருபோதும் தீர்வு காணப் போவதில்லை. விடயங்கள் இப்படியிருக்க, யாரை முட்டாள்களாக்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் நாடகமாடுகிறார்களோ தெரியவில்லை.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், காலத்துக்கு காலம், ஜீ.ஜீ.பொன்னம்பலம் முதல் பிரபாகரன் வரை, தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்து வந்துள்ளனர். அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல சம்பந்தன் கோஷ்டி சரத் பொன்சேகாவுக்கு வழங்கும் ஆதரவு அமையப் போகின்றது. அதே வேளையில், சம்பந்தன் கோஷ்டியினர் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப் போகும் நடவடிக்கையால், பிரபாகரன் அடைந்த கேவலமான முடிவை விட, மிக மிக கேவலமானதும், அருவருக்கத்தக்கதுமான ஒரு முடிவை சம்பந்தன் கோஷ்டியினர் அடைய உள்ளனர் என்பதும் மறுக்க முடியாத ஒர் உண்மையாகும்.
0 Response to "சரத் பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம், சம்பந்தன் கோஷ்டி அடையப்போகும் கேவலமான முடிவு!"
แสดงความคิดเห็น